போராடிப் பெற்ற வெற்றி

By தாமரை

18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகம் முழுவதும் தொழிலாளர் நலன்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றன. அப்போதெல்லாம் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம். ஒரு நாளுக்குப் பத்து மணிநேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்பது இதன் கோரிக்கைகளில் ஒன்று.

பிரான்ஸ்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கட்டடத் தொழிலாளிகள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

ரஷ்யா

ஜார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. மாபெரும் சிந்தனையாளரும் பொருளாதார மேதையுமான கார்ல் மார்க்ஸ், 8 மணி நேர வேலையை வலியுறுத்தினார்.

அமெரிக்கா

அமெரிக்காவில் 1832-ல் பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். 1835-ல் ஃபிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து ‘அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு’என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இது 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்துப் பல போராட்டங்களை நடத்தியது. 1886-ம்

ஆண்டு, மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதுதான் மே தினம் உருவாக அடிப்படையாக அமைந்தது.

அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், அமெரிக்காவில் பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன.

மே 3, 1886 அன்று ‘மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின்’ என்னும் நிறுவனத்தின் வாயிலில் 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு ஏற்பட்ட கலவரத்தில் நான்கு தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டனக் கூட்டம் ஒன்றைத் தொழிலாளர்கள் நடத்தினார்கள்.

அனைவரையும் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறினார்கள். அப்போது திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவர் பலியானார். அதையடுத்து, போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். தொழிலாளர் தலைவர்களைக் கைது செய்தார்கள். ஏழு பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். ஒருவர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893-ம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும் இயக்கமும் வலிமை பெற்றது. தினமும் 8 மணிநேர வேலை, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்னும் நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் 1886-ம் ஆண்டு மே முதல் தேதியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் நினைவாகவே மே முதல் நாள் தொழிலாளர் தினமாக, தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்