ஆத்தூர் (சேலம்), அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1996-ம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து 2001 வரை ஐந்தாண்டுகள் அங்கே பணியாற்றினேன். என் வாழ்வின் அற்புதமான காலம் என்றால் அந்த ஐந்தாண்டுகளையே சொல்வேன். அப்போது மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டுவரும் எண்ணத்தில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பைச் செயல்படுத்தினோம்.
உடல்மொழியே பேசும்!
பெ.சின்னதுரை என்றொரு மாணவர். சின்ன உருவம். பெருந்திறமை கொண்ட துரையும்கூட. நடிப்பில் அபார ஈடுபாடு. மேடை பயமோ கூச்சமோ சிறிதும் கிடையாது. வாய்மொழியைவிட உடல் மொழியே பேசும். எதையும் அனாயாசமாக உள்வாங்கி உயிர் கொடுத்துவிடுவார். நல்ல கற்பனை வளமும் படைப்பாற்றலும் இருந்தன. கருவைச் சொன்னால் அடுத்த அரைமணி நேரத்தில் நாடகத்தைக் காட்சிகளுடன் உருவாக்கி வந்துவிடுவார்.
அவருக்குரிய பாத்திரத்தை மட்டுமல்ல, பிற பாத்திரங்களையும் மனதில் கட்டியமைத்திருப்பார். நடிகர்களைத் தேர்வு செய்வது, அவர்களுக்கான பாத்திரங்களைப் பொருத்தமாகத் தருவது, எவ்விதம் நடிக்க வேண்டும் என விளக்குவது ஆகியவற்றை அவர் செய்யும்போது பல காலம் எங்கோ பயிற்சி பெற்று வந்த அல்லது அனுபவம் வாய்ந்த பெரும் இயக்குநர் அவர் எனத் தோன்றும். கருவிலே திருவுடையவர்.
பாட்டு பாடவா…
ஆண்டு இறுதியில் மாணவர்களுக்குப் போட்டிகள் வைத்துப் பரிசுகள் வழங்குவோம். ஐந்தாறு போட்டிகளில் தொடங்கினோம். பல்வேறு திறமைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பதாலும் புதுப்புது யோசனைகளை மாணவர்களே முன்வைத்ததாலும் போட்டிகள் பத்து, பதினைந்து, இருபது என்று விரிந்துகொண்டே போயின. வழக்கமாகப் பாடல் போட்டி ஒன்று வைப்போம். அதில் திரைப்படப் பாடல்களையே பாடுவார்கள்.
உடன் பணியாற்றிய நண்பர் க.காசிமாரியப்பன் எல்லாவற்றிலும் மாற்றுப் பார்வைகளை முன்வைப்பவர். அவர் சொன்னார், ‘நாட்டுப்புறப் பாட்டுப் போட்டி வைப்போமே’. பாட்டுப் போட்டியை இரண்டாக்கினோம். திரைப்பாடல் போட்டி, நாட்டுப்புறப் பாடல் போட்டி. திரையில் வந்த நாட்டுப்புறச் சாயல் கொண்ட பாடலும் திரைப்பாடலாகவே கருத்தில் கொள்ளப்படும். உண்மையாகவே ஊர் நாட்டில் பாடும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாட வேண்டும். இவையே விதிகள்.
நாட்டுப்புறப் பாடல் போட்டி அன்றைக்குக் காலையில் வந்து தயக்கத்துடன் ‘இப்பப் பேரு கொடுத்தாச் சேத்துக்குவீங்களாய்யா’ என்றார் சின்னதுரை. போட்டி நடக்கும் நேரத்தில் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம். எந்தக் கடுமையான விதியையும் வைத்திருக்கவில்லை. சொன்னதும் உடனே ‘ஒப்பாரிப் பாட்டுப் பாடுனா ஒத்துக்குவீங்களாய்யா?’ என்று கேட்டார். நான் சட்டென்று ‘அதும் பாட்டுத்தானேப்பா. தாராளமாப் பாடலாம். யாரு பாடப் போறா?’ என்றேன். ‘நான்தான் பாடறங்கய்யா. காலேஜ்ல ஒப்பாரிய யாரும் ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்றாங்கய்யா’ என்றார். ‘யாரு சொல்றா? ஒப்பாரி வெக்கறதுக்குப் பொருத்தமான எடம் காலேஜ்தான். நீ பாடு, நாங்க ஒத்துக்கறம்’ என்று காசிமாரியப்பன் தைரியம் கொடுத்தார்.
பெருந்துயரத்தோடு பாடும் பாவனை
போட்டி தொடங்கியது. இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ சின்னதுரை. மேடைக்குப் போனதும் கையில் சுருட்டியிருந்த தாவணி ஒன்றை விரித்து இடுப்பில் ஒரு சுற்றுச் சுற்றித் தலையில் முக்காடு போட்டுக்கொண்டார். தரையில் உட்கார்ந்து கைகளை விரித்துத் தொடங்கினார். கணவனை இழந்த பெண் பாடும் பாடல். ‘அரச மரமிருக்க அரச மரமிருக்க அரக்காடு நெவுலிருக்க அரக்காடு நெவுலிருக்க’ என்று தொடங்கினார். இழவு வீட்டில் பெருந்துயரத்தோடு பெண்ணொருத்தி பாடும் பாவனையோடு அழுகைக் குரலில் எல்லாவகை ஒலிக்குறிப்புகளுக்கும் இடம் கொடுத்து அசத்தலாகப் பாடினார்.
முதலில் சத்தமிட்ட மாணவர்கள் பின் அமைதியாகக் கேட்டார்கள். பாடல் போகப் போக எனக்குக் கண்ணீர். கைக்குட்டையை எடுத்து முகம் துடைப்பது போலப் பாவனை காட்டிக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே மற்றவர் பக்கம் ஓரப்பார்வை பார்த்தேன். பலரும் கைக்குட்டையை எடுத்திருந்தார்கள். அன்றைக்குச் சின்னதுரை பாடிய அந்த மேடைக் காட்சி இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. வெறும் பாடலாக மட்டுமல்ல, சூழலை மிக எளிமையாகக் காட்சியாக்கி ஒரு நிகழ்த்துக்கலையாக அதை மாற்றிவிட்ட அருமையான கலைஞன்.
கற்பனைசெய்ய முடியுமா?
அம்மாணவரின் எதிர்காலத்தை என் மனம் அன்றைக்குக் கற்பனை செய்தது. புதுச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நாடகத் துறைகள் இருக்கின்றன. அங்கே சின்னதுரையை முதுகலை படிக்க அனுப்பிவிட்டால் போதும். கே.ஏ.குணசேகரன், மு.ராமசாமி ஆகிய யாருடைய கையிலாவது சிக்கிப் பெருநடிகனாக வளர்ந்துவிடுவார். இப்படி என் கற்பனை விரிந்தது.
என் எண்ணம் நிறைவேறவில்லை. அவருக்கு ஆங்கிலத் தாள் ஒன்று நிலுவை விழுந்துவிட்டது. சரி, படித்து எழுதித் தேர்ச்சி பெற்றுவிடுவார், ஓராண்டு போனாலும் பரவாயில்லை, நாடகத்துறைக்கு அனுப்பிவிடலாம் என்று ஊக்கப்படுத்திப் பார்த்தேன். அவர் குடும்பச் சூழலால் கூலி வேலைக்குப் போனார். சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் அடுத்துத் திருமணம் என்பது எழுதப்படாத நம் சமூக விதி அல்லவா? சின்னதுரை திருமணமும் செய்துகொண்டார்.
அப்புறம் என்ன செய்ய? அவ்வப்போது யாரிடமாவது விசாரிப்பேன். கொஞ்ச காலம் கழித்து டாஸ்மாக் கடையில் வேலை செய்கிறார் என அறிந்தேன். ஆங்கிலத்தை அவருக்கு நன்றாகக் கற்றுக் கொடுத்திருந்தால் சின்னதுரை எங்கோ இருந்திருப்பார். யாராலாவது கற்பனைசெய்ய முடியுமா? பெருங்கலைஞன் ஒருவன் டாஸ்மாக் கடையில் பாட்டிலை எடுத்துக் கொடுத்து விற்பனை செய்துகொண்டிருக்கும் காட்சி.
பெருமாள்முருகன், எழுத்தாளர்,
தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago