ஒரே வகுப்பில் இரண்டு முத்தையன்கள் பயின்றார்கள். கருப்பு முத்தையன், சிவப்பு முத்தையன் என்று இருவரையும் நிறத்தால் அடையாளப்படுத்தி வைத்திருந்தேன் (பாகுபடுத்தும் விதத்தில் அல்ல). சிவப்பு முத்தையன் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்திருந்தார். கருப்பு முத்தையன் ஆள் என்னவானார் என்றே தெரியவில்லை.
கடைசியில் பேராசிரியரானார்!
‘கூடு’ ஆய்வுச் சந்திப்பு நடைபெற்ற நாள் ஒன்றில் எனக்கு முன்னால் வந்து நின்று ‘ஐயா என்னை அடையாளம் தெரிகிறதா?’ என்று கேட்டார் ஒருவர். உடனடியாக என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் உடல் எடையைப் பாதியாகக் குறைத்துத் தலை முழுவதும் மயிர் பொருத்திப் பார்த்தேன். அட, நம்ம கருப்பு முத்தையன். பத்தாண்டுகளுக்கு மேலான அவர் வாழ்க்கையை ஐந்து நிமிடத்தில் சுருக்கிச் சொன்னார். தற்போது சுயநிதிக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிவதாகச் சொன்னார்.
மிகவும் அழகான கையெழுத்தைக் கொண்டவர். கல்லூரிக் காலத்தில் படிப்பில் கவனம் குறைவுதான். ஊர் சுற்றுவதில் மிக ஆர்வம். எந்த வேலைக்கும் செல்வார். உடல் உழைப்பில் கெட்டி. எங்கெங்கோ சுற்றி அலைந்தும் கல்வியை விடாம லிருந்து கடைசியாகக் கல்லூரிப் பேராசிரியராகிவிட்டார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஆண்டு முழுவதும் தேர்வு இல்லையே!
அந்த முத்தையனை பல ஆண்டுகள் கடந்து மீண்டும் ஒருநாள் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இப்போது அவர் கல்லூரிப் பேராசிரியர் அல்ல; டீக்கடைக்காரர். இடையில் என்ன நேர்ந்தது?
சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவு என்பது தெரிந்த விஷயம். அதுவும் தமிழாசிரியர்களுக்கு மிகமிகக் குறைவு. முத்தையனுக்கு மாத ஊதியம் ஐயாயிரம் ரூபாய். அதைக் கொண்டு வாழ்வது கடினம். கல்லூரியை ஒட்டியிருந்த ஓர் அறையில் தங்கியிருந்தார் முத்தையன். அங்கே ஓர் அட்டை கம்பெனி இருந்தது. அவ்வப்போது அதில் வேலை செய்வார். சாலை ஓரத்தில் டீக்கடை ஒன்று இருந்தது. அந்தக் கடையிலும் வேலை செய்வார். லாரிகள் வந்து செல்லும் இடம் அது. லாரியில் சுமை ஏற்றும் இறக்கும் வேலையும் பார்ப்பார். அவரது பகுதி நேரப் பணிகள் இவை.
ஒருநாள் லாரியில் சுமை ஏற்றிக்கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் வந்த கல்லூரி முதல்வர் பார்த்திருக்கிறார். பேராசிரியர் ஒருவர் லுங்கியைக் கட்டியபடி சுமையேற்றும் காட்சியை அவரால் கற்பனை செய்யவும் முடியவில்லை. அதிர்ந்து போனவர் விசாரித்திருக்கிறார். சம்பளம் போதவில்லை, அதனால் இரவில் இந்த வேலையும் செய்வதாக முதல்வரிடம் சொல்லியிருக்கிறார் முத்தையன்.
ஊதியத்தை உயர்த்தும் அதிகாரம் முதல்வருக்குக் கிடையாது. ஆனால், அவர் ஓர் உதவி செய்தார். அப்போது தேர்வுக் காலம். மாதம் முழுவதும் தேர்வறைக் கண்காணிப்பாளர் பணியை முத்தையனுக்கு வழங்கினார். ஒருவேளை பார்த்தால் நூற்றைம்பது ரூபாய். அந்த மாதம் முத்தையனுக்குக் கை நிறையக் காசு. ஆனால், ஆண்டு முழுவதும் தேர்வு நடப்பது இல்லையே. மீண்டும் அட்டை கம்பெனி, டீக்கடை, சுமையேற்றி இறக்குதல் எனப் பகுதி நேரப் பணி தொடர்ந்தது.
கல்லூரிக்கு எதிரே!
அவர் அம்மாவுக்கு திடுமென உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வந்த ஓரிரவில் உடனே ஊருக்குக் கிளம்பிப் போனார். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்த பரபரப்பில் அவரது செல்பேசி கீழே விழுந்து பழுதாகிவிட்டது. எண்களை மூளையில் பதிவாக்கிக்கொள்ளத் தேவையில்லாத காலம். அவரால் கல்லூரிக்குத் தகவல் சொல்ல இயலவில்லை. அம்மா உடல்நலம் பெற்று வீட்டுக்கு வந்து சேரப் பத்து நாளாயிற்று. அதன் பின்னர் கல்லூரிக்கு வந்துசேர்ந்தார் முத்தையன்.
முன்கூட்டித் தகவல் சொல்லாமல் ஒருநாள்கூட விடுப்பு எடுக்க முடியாது. விடுப்பு எடுக்கும் நாளில் வகுப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டும். இப்படியெல்லாம் கட்டுப்பாடு கொண்ட இடத்தில் எந்தத் தகவலும் இல்லாமல் பத்து நாள் ஒருவர் வரவில்லை என்றால் சும்மா இருப்பார்களா? நிர்வாகம் அவரை வெளியேற்றிவிட்டது.
வேலை போன சோகத்துடன் டீக்கடை வாசலில் போய் உட்கார்ந்தார் அவர். அப்போது கடைக்காரர் அவருடைய குடும்பப் பிரச்சினைகளைச் சொல்லிக் கடையை விற்றுவிட்டு, வெளியூர் போக முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். ஏற்கனவே, டீக்கடை வேலையில் நல்ல அனுபவம் கொண்ட முத்தையன் கடையை விலைக்குக் கேட்டிருக்கிறார். விலை படிந்தது. அறை நண்பர் ஒருவரைக் கூட்டாகச் சேர்த்துக்கொண்டு கடையை வாங்கி நடத்தத் தொடங்கினார்.
கல்லூரியை ஒட்டியே கடை இருந்ததால், மாணவர் கூட்டம் வரும். லாரிக்காரர்கள் நின்று செல்வார்கள். வியாபாரத்துக்கு ஏற்ற இடம். எழுது பொருட்கள், பிஸ்கட்டுகள், மதிய உணவாகக் கலவைச் சோறு எனக் கடையை விரிவாக்கினார்கள். வேலைக்கும் ஆட்கள் வைத்தார்கள். கூட்டாளிகள் இருவரும் தினக்கூலியாக ஒரு தொகையை எடுத்துக்கொண்டனர். அதுபோக நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நிகர லாபம் வந்தது. பேராசிரியர் கடை என்று பெயரும் வந்துவிட்டது.
தலை நிமிர்ந்து சொன்னார்
தனக்கு வேலை இல்லை என்று அனுப்பிய கல்லூரிக்கு முன்னால் கடை வைத்து, ஜோராக நடத்துகிறார் முத்தையன். யார் யார் முகத்திலோ கரி. அவமானம் பொறுக்க முடியாமல் கல்லூரி நிர்வாகம் ஓர் ஆளை அனுப்பி ‘ஓரெடம் காலியா இருக்குது. வந்து வேலைக்குச் சேந்துக்கலாம்’என்று வேலை கொடுக்க முன்வந்தது. முத்தையன் இப்படிப் பதில் சொன்னார்: ‘நீங்கள் கொடுக்கும் மாதச் சம்பளம் எனது ஐந்து நாள் சம்பாத்தியம். உங்கள் வேலை எனக்கு இனி தேவையில்லை.’
குறைந்த ஊதியத்துக்கு அடிமை வேலை செய்வதைவிட சுயதொழில் ஒன்றைக் கவனத்துடன் செய்தால் யாருக்கும் தலைநிமிர்ந்து பதில் சொல்லலாம். முத்தையன் அப்படித் தலைநிமிர்ந்து பதில் சொன்னார். இந்தச் சுயமரியாதை அவர் வாழ்க்கையை இன்னும் உயர்த்தும்.
பெருமாள்முருகன், எழுத்தாளர்,
தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago