உங்களுக்கு இ.க்யூ. இருக்கிறதா?

By ஜி.எஸ்.எஸ்

உங்களுக்கு இ.க்யூ. இருக்கிறதா?

ஐ.க்யூ.தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். அது என்ன இ.க்யூ? என யோசிக்கிறீர்களா?

நெருக்கடியான சூழல்கள்

நீங்கள் ஒரு நிறுவனத்தின் மார்க்கெடிங் மேனேஜர். உங்கள் நிறுவனத்தின் தலைவர் சட்ட மீறலாக எதையோ செய்துவிட்டு இப்போது சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் உங்கள் அலுவல் தொடர்பாக நீங்கள் யாரை சந்தித்தாலும் (என்ன உங்க தலைவர் இப்படிச் செய்துட்டாரே) என்பது போல் கேட்கிறார்கள். மனதுக்குள் அவர்கள் கேலியாக சிரித்துக் கொள்வது தெரிகிறது.

இதோ இன்னொரு சூழல். உங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டிய கட்டாயம். எனவே தயாரிப்புப் பொருளின் விலையை உயர்த்துகிறீர்கள். வாடிக்கையாளர்கள் இப்படி ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். ‘’உங்க போட்டியாளர்கள் எல்லாம் விலையை ஏத்தலே. சொல்லப்போனா உங்களுடைய ஒரு போட்டியாளர் சமீபத்தில் தன் தயாரிப்பின் விலையைக் குறைத்திருக்கிறார். ஆனா நீங்க உங்க பொருளின் விலையை அதிகமாக்கி இருக்கீங்க. உங்ககிட்டே தொடர்ந்து வியாபாரம் செய்யனும்ணு எங்களுக்கு என்ன தலையெழுத்தா?’’ எப்படி இருக்கும் உங்களுக்கு?

நீங்கள் இரண்டு வாரங்கள் சிரமம் எடுத்து ராத்திரி பகலாகக் கண்விழித்து ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்திருக்கிறீர்கள். அதைப் படித்துப் பார்த்துவிட்டு உங்கள் மேலதிகாரி “புல்ஷிட்’’ என்றபடி அதை மேஜையின்மீது தூக்கி எறிகிறார். உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

உணர்ச்சி வசப்படல்

மூன்று சூழல்களையும் விவரித்துவிட்டு ‘’எப்படியிருக்கும் உங்களுக்கு?’’ என்ற பொதுவான கேள்வியை கேட்டிருக்கிறேன். வலி, ஆக்ரோஷம், வேதனை இவையெல்லாம் பொங்கும் தருணங்களாக அவை இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் நீங்கள் உணர்ச்சிக் களஞ்சியமாக மனதில் பட்டதை வெளிப்படுத்தினால் அது உங்கள் நிறுவனத்துக்கு சாதகமான சூழ்நிலை நிச்சயம் ஏற்படுத்தாது.

அறிவுக் கூர்மையை அறிந்து கொள்ள ஐ.க்யூ (Intelligence Quotient) தேர்வு உண்டு. சமீபகாலமாக அறிமுகமாகியுள்ள இன்னொரு வகைத் தேர்வு இ.க்யூ. – அதாவது Emotional Quotient தேர்வு. உணர்ச்சிகரமான சூழலில் நீங்கள் நடந்து கொள்ளும் விதமும், கூறும் வார்த்தைகளும் உங்கள் நிறுவனத்தைப் பெருமளவில் தூக்கி நிறுத்தும் அல்லது பாதாளத்தில் இறக்கும். மேலே உள்ள உதாரணங்களில் நீங்கள் உங்கள் உணர்வுகளை தவறான (அதாவது சாமர்த்தியமில்லாத) வார்த்தைகளில் வெளிக்காட்டினால் உங்கள் நிறுவனம் தன் வாடிக்கையாளரை இழக்கலாம் அல்லது நீங்கள் உங்கள் வேலையை இழக்கலாம்.

இ.க்யூ கேள்விகள்

எனவேதான் இப்போதெல்லாம் நிறுவனங்கள் தங்களுக்கான ஊழியர்களை (முக்கியமாக அதிகாரிகளை) தேர்வு செய்யும் போது அவர்களுடைய E.Q.-வை அறிந்து கொள்வதற்காக சில கேள்விகளை முன்வைக்கிறார்கள். சில உதாரணங்களைப் பார்ப்போம்.

‘’உங்களுக்குப் பதவி உயர்வு கொடுக்காமல், உங்களைவிட ஜூனியர் ஒருவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? அ) நிறுவனத்தின்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன்.

ஆ) மேலதிகாரிகளிடம் பேசி அவர்கள் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்வேன்.

இ) எனது தவறுகளை அல்லது குறைபாடுகளை யோசித்து சரிசெய்துகொள்வேன்.

ஈ) நிறுவனத்தைப் பற்றியும், ஜூனியரைப் பற்றியும் நண்பர்களிடம் கேவலமான கருத்துகளை உதிர்ப்பேன்.

இவற்றில் எந்த பதில் உங்களுக்கும், உங்கள் நிறுவனத்துக்கும் நல்லது என்பதை யோசித்துப் பார்த்தால் உங்களால் உணர முடியும். அந்த பதிலை அளிப்பவர்களுக்குத்தான் நிறுவனம் முன்னுரிமை தரும்.

இன்னொரு கேள்வி. விமானத்தில் செல்லும்போது கடுமையான பனியின் காரணமாக விமானம் கீழே இறங்காமல் மேலேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. விமானத்தின் போதிய எரிபொருள் இல்லையென்று ஒரு ஊழியர் கூறுவது உங்கள் காதுகளை எட்டுகிறது. என்ன செய்வீர்கள்?

அ) வடக்கே சூலம்னு தெரிஞ்சே இன்னெக்கி கிளம்பினது என் முட்டாள் தனம் என எண்ணுவீர்கள்.

ஆ) எல்லாம் நல்லபடி நடக்கும். கடவுளை வேண்டிக் கொள்வேன்.

இ) படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைத் தொடர்ந்து படிப்பேன் அல்லது பார்த்துக் கொண்டிருந்த டி.வி. நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பேன்.

ஈ) அடுத்த வாரம் போகலாமேன்னு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். அவருக்கு சரியான கரி நாக்கு. பாவி.

எந்த வித சங்கடச் சூழலையும் சமாளிக்கும் மன உறுதியும், கோபம் பொங்கும் கணத்திலும் அதை அடக்கிக் கொண்டு சரியான விதத்தில் வெளிப்படுத்துவதும் ஓர் அரிய கலை. அது உங்களுக்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும் வகையில் சைகோமெட்ரிக் தேர்வு களின் கேள்விகள் அமையக் கூடும்.

நீங்கள் சிறப்பானது என்று கருதும் ஒரு ஐடியாவை உங்கள் நண்பர் ‘’இதெல்லாம் வேலைக்கு ஆகாது’’ என்ற ஒதுக்கினால் உங்கள் ரியாக்‌ஷன் எப்படியிருக்கும் என்பதைக்கூட எளிமையாகவும், உண்மையாகவும் யோசித்துப் பாருங்கள். அவரைத் திட்டுவீர்களா? அவர் அப்படிச் சொல்வதற்கான காரணங்களைக் கேட்பீர்களா? அவரது நட்பையே அறுத்துக் கொள்வீர்களா? அல்லது அவர் அப்படிக் கூறியதற்கான காரணங்களை நீங்களே மனதில் யோசிப்பீர்களா? இந்தக் கேள்விகளுக்கான உண்மையான பதிலை நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தாலேகூட போதும், இ.க்யூ. தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா இல்லையா என்பது புரிந்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

40 mins ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்