பத்து வருடங்களுக்கு முன்பு. வகுப்புத் தோழர்களான பிரியங்கா, அனிதா, பிரவீன் பிளஸ் டூ முடித்திருந்தார்கள். மூவரும் கணினி அறிவியல்-கணிதப் பிரிவைப் படித்தவர்கள். அவர்களுடைய கடின உழைப்புக்கு எதிர்பார்த்த மதிப்பெண்ணும் கிடைத்திருந்தது. ப்ரியங்காவுக்கு கணினி அறிவியல் மீது பேரார்வம். ஆகவே அந்தப் பாடப்பிரிவைச் சிறப்பாகக் கற்பிக்கும் கல்லூரியில் இடம் கிடைக்கக் காத்திருந்தார்.
அனிதாவுக்கோ சமூக அரசியல் பார்வையை விரிவடையச் செய்யும் சுதந்திரமான சூழல் நிறைந்த கல்லூரியில் படிக்க ஆசை. பிரவீனின் கனவு இசையமைப்பாளர் ஆவது. ஆகவே, மேற்கொண்டு தன்னுடைய கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் கல்லூரியில் தான் சேருவேன் என உறுதியாக நின்றார். அவர்களுடைய கனவுகளுக்குப் பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டவே விருப்பப்பட்ட படிப்பிலும், கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்கள்.
ஒரு தசாப்தத்துக்கு முன்னால் அவர்கள் நின்றதுபோலவே இன்று பிளஸ் டூ முடித்துவிட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் இருப்பார்கள். எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது? எப்படிப்பட்ட கல்லூரியில் படிக்கலாம்? புதிய கல்லூரிகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் நம்பிச் சேரலாமா? அறிமுகமாகியிருக்கும் புதிய படிப்புகளைப் படித்தால், பிற்காலத்தில் வேலை கிடைக்குமா? இப்படிப் பல கேள்விகள் மூளையையும் மனதையும் குடையும்.
விருப்பமும் திறனும்
எந்தப் படிப்பாக இருந்தாலும் அதற்கு நேரடியாகத் தொடர்புடைய வேலைகள் நிச்சயம் இருக்கும். அதேநேரத்தில் நாம் படித்த படிப்பை ஒட்டிய வேலைதான் கிடைக்கும் என யாருமே உறுதியாகச் சொல்ல முடியாது. கல்வி மூலமாகப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு, பிற்காலத்தில் வெவ்வேறு துறைகளில் வேலை பார்க்கலாம். சொல்லப்போனால் கல்லூரி வளாகம் என்பது வேலைக்காக நம்மைத் தயார்படுத்தும் இடம் மட்டுமல்ல.
கலை, அறிவியல், வணிகம், தொழில்சார் படிப்புகள் இப்படி எந்தப் பிரிவை வேண்டுமானால் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். ஆனால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்வரை ஒரு கல்லூரியில் படிக்கும் காலத்தில் எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஒருவருடைய ஆளுமை பெருமளவில் வடிவம் பெறுவது கல்லூரி நாட்களில் என்றுகூடச் சொல்லலாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், தொடர்புகொள்ளும் ஆற்றலை மேம்படுத்துதல், நண்பர்களைத் தேர்வு செய்தல், தனிநபர்களோடு தொடர்புகொள்ளும் ஆற்றலை மெருகேற்றுதல் உட்படப் பலவற்றைக் கல்லூரி காலம் கற்றுத்தருகிறது. அந்த அனுபவம் எதிர்காலத்தில் உலகை எதிர்கொள்ளக் கைகொடுக்கும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரி பருவத்தில் உங்களுக்கு விருப்பமான அதேசமயம் நீங்கள் சிறப்பாகத் திகழும் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் இப்போது நீங்கள் சேரப்போகும் படிப்பைத்தான் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் படிக்கவிருக்கிறீர்கள். உங்கள் எதிர்காலத்தையும் அனேகமாக இதுவே தீர்மானிக்கப்போகிறது. அப்படியிருக்க நீங்கள் லயித்துப் படிக்கும் படிப்பைத் தேர்ந்தெடுப்பது சிறப்பான முடிவாக இருக்கும். அதேநேரம் நாட்டம் மட்டும் போதாது. உங்களால் எந்தப் பாடப் பிரிவில் சிறப்பாக விளங்க முடியுமா என்பதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள்.
பாடப் பிரிவா அல்லது கல்லூரியா?
எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் பயணிக்க இருக்கிறீர்கள் என்பதற்கான திட்டத்தை வகுத்த பிறகு என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.
ப்ரியங்காபோலப் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் சேர நினைத்தால் நீங்கள் விரும்பும் பாடப் பிரிவைச் சிறப்பாக அளிக்கும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் படிக்க விரும்புவது கணினி அறிவியல் என்றால் சிறப்பான பாடத்திட்டம், நல்ல கணினி லேப், சிறப்பான தொழில்நுட்ப வசதிகள், பாடம் கற்பிக்கும் முறையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றும் பாடப் பிரிவு ஆகியவற்றைக் கொண்ட கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். ஆக, இங்குப் பாடப் பிரிவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
அடுத்து, அனிதா விரும்பியதுபோல ஆளுமைத்திறனை மேம்படுத்தும், தனித் திறமைகளை ஊக்குவிக்கும், மாற்றுச் சிந்தனைகளுக்குக் களம் அமைத்துத் தரும் கல்விச் சூழலைத் தேடினால் பாடப் பிரிவை விடவும் கல்வி நிறுவனத்துக்குத்தான் முதல் இடம் தர வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, ஒரு கல்லூரியில் இருக்கும் வாசகர் வட்டம், கலை நிகழ்ச்சிக் கழகம், சூழலியல் நண்பர் கழகம், துறை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை, நூலகம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள்.
பிரவீனைப் போலக் கல்வி சூழலுக்கும் பாடப் பிரிவுக்கும் அப்பாற்பட்டு விளையாட்டு, கலை உள்ளிட்ட துறைகளைப் பணிவாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்க ஆசைப்பட்டால், கல்வியைக் கடந்து பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளை ஊக்குவிக்கும் கல்லூரியில் சேருங்கள்.
ப்ரியாங்கா, அனிதா, பிரவீன் என்ன ஆனார்கள் என்று சொல்லவில்லையே. நன்றாகப் படித்து, கணினி அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொண்ட ப்ரியங்கா பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அனிதாவின் சுதந்திரச் சிந்தனைக்கு சிறகு விரிக்கச் சொல்லிக்கொடுத்த சிறப்பான கல்லூரியில் படித்து பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய இசை ஆர்வத்துக்கு மேடை கொடுத்து, பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புக் கொடுத்த கல்லூரியில் சேர்ந்த பிரவீன், விடா முயற்சிக்குப் பிறகு இப்போது திரையிசைக் கலைஞராக முன்னேறிவருகிறார்.
இவர்கள் கடந்துவந்த எல்லாவற்றையும் மனதில் வைத்து, உங்களுடைய வாழ்க்கையின் அடுத்த படியில் உற்சாகமாக அடி எடுத்துவையுங்கள்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago