ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி நாயகன்!

By பிருந்தா சீனிவாசன்

2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசசே விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார் சமூகப் போராளி பெஜவாடா வில்சன். ஆசிய நோபல் பரிசு என்று கருதப்படும் இந்த விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் என்று நாடு முழுவதும் வில்சனைக் கொண்டாடுகிறது. வந்துகுவிகிற பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சிறிய தலையசைப்போடு ஏற்றுக்கொண்டு தன் போராட்டத்தில் இன்னும் தீவிரமாக இறங்குகிறார் வில்சன். “மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் அவலம் முடிவுபெறும்வரை என் போராட்டம் ஓயாது” என்று சொல்லும் பெஜவாடா வில்சன், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

2016-ம் கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கத்தை ஒட்டிய பகுதியில் 1966-ம் ஆண்டு பிறந்தார் பெஜவாடா வில்சன். இவருடைய பெற்றோர், ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோலார் தங்கச் சுரங்கத் தொழிலாளர் குடியிருப்பில் மலம் அள்ளும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். வில்சனின் அண்ணன் ரயில்வே துறையில் மலம் அள்ளும் வேலையைச் செய்ய, கடைக்குட்டியான வில்சனை மட்டும் அவருடைய பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினார்கள். தாங்கள் செய்கிற வேலை குறித்து வில்சனுக்குத் தெரிந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர். பள்ளிப் படிப்பை முடித்ததும், அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். அது அவரது சமூகப் பார்வையை விசாலமாக்கியது.

கலங்கடித்த காட்சி!

தன் இனம் சந்தித்துவரும் அவமானம் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு வில்சனுக்கு 1986-ம் ஆண்டு ஏற்பட்டது. தன் காலனியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மாலைநேர வகுப்பெடுத்தார் வில்சன். அப்போது பல குழந்தைகள் தங்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுவதையும் வேலைக்குச் செல்வதையும் அறிந்தார். அந்தக் குழந்தைகளிடம் விசாரித்தபோது, தங்கள் அப்பா குடித்துவிட்டு, வீட்டுக்குப் பணம் தருவதில்லை என்ற ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். உடனே சம்பந்தப்பட்ட அப்பாக்களிடமே விசாரித்துவிடலாம் என்று கிளம்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

“ஏன் இப்படி பகலும் இரவும் குடித்துவிட்டு, உங்கள் பிள்ளைகளின் படிப்புக்குப் பணம் தராமல் அவர்களின் எதிர்காலத்தை வீணாக்குகிறீர்கள்?” என்று கேட்டார். “நாங்கள் பார்க்கிற வேலையைக் குடித்துவிட்டுத்தான் செய்ய முடியும்” என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குடிப்பதற்காக அவர்கள் சொல்லும் சாக்கு அது என்று நினைத்தார் வில்சன். அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் வேலை செய்யும் இடத்துக்கே சென்றார். அங்கே அவர் பார்த்த காட்சி அவரை உறையவைத்திருக்கிறது.

உலர் கழிவறைகளிலிருந்து கையால் மலத்தை அள்ளி வாளியில் நிரப்பிக்கொண்டிருந்தார் ஒருவர். அந்த வாளி தவறி மலக்குழிக்குள் விழுந்துவிட, கையை உள்ளே விட்டு வாளியைத் தூக்கியிருக்கிறார். அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்துபோன வில்சன், அந்த மனிதரை மலக்குழிக்குப் பக்கத்திலிருந்து இழுத்திருக்கிறார். “என்னை என் வேலையைச் செய்ய விடு” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்திருக்கிறார் அந்த மனிதர்.

மாற்றத்தின் முதல் விதை

அந்தக் காட்சி ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வில்சனால் மீள முடியவில்லை. மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம் அவரை நிலைகுலையச் செய்தது. அவரையும் அறியாமல் கண்ணீர் வழிய வீட்டுக்குத் திரும்பினார். தான் பார்த்த காட்சியைப் பெற்றோரிடம் சொன்னார். அங்கே அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. “நாங்கள் காலம் முழுக்க செய்ததைத்தான் அவரும் செய்திருக்கிறார்” என்று தன் பெற்றோர் சொன்ன பதிலைக் கேட்டு உடைந்துபோனார் பெஜவாடா வில்சன். அவரது வாழ்வில் மட்டுமல்ல, மலம் அள்ளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்விலும் திருப்பத்தை ஏற்படுத்திய நாள் அது.

பெஜவாடா வில்சன் உடைந்து அழுதது அந்த ஒரு நாள் மட்டும்தான். உடனே தன்னை மீட்டெடுத்துக்கொண்டார். இது உணர்ச்சிவசப்பட வேண்டிய தருணம் அல்ல என்பதை உணர்ந்தார். இவர்களை மீட்க என்ன வழி என்று யோசித்தார். காலம் முழுக்க மற்றவர்களின் மலம் அள்ளியே ஓய்ந்து போன கைகளை நினைத்தார்.

நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்ற வெற்று கோஷங்களுக்கு இடையே மலம் அள்ளு பவர்களின் புலம்பல் யாருடைய காதையும் சென்றடையாமல் அடங்கிப்போவதை உணர்ந்தார். தங்கள் காலனி ஆட்களை மலம் அள்ளும் வேலைக்கு அமர்த்தியிருக்கும் சுரங்க நிறுவனத்துக்கு ஒருவர் மூலம் கடிதம் அனுப்பினார் வில்சன். தங்கள் நிறுவனத்தில் உலர் கழிப்பிடங்களே இல்லை என்று பதில் வந்தது. உடனே தகுந்த ஆதாரங்களுடனும் புகைப்படங்களுடனும் பிரதமருக்கும், தலித் பிரிவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பினார்.

அதன் பிறகுதான் இந்தப் பிரச்சினை வெளியுலகின் பார்வைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, கையால் மலம் அள்ளுவதைத் தடைசெய்யும் வகையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதையும் திறந்தவெளிக் கழிப்பிடங்களை கட்டுவதையும் தடை செய்யும் சட்டம் 1993-ல் இயற்றப்பட்டது. கோலார் தங்கச் சுரங்கக் குடியிருப்பில் இருந்த திறந்தவெளிக் கழிப்பிடங்கள் உடைத்து நொறுக்கபட்டன. பிறகு ஆந்திரத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்தார் பெஜவாடா வில்சன்.

தொடரும் பயணம்

நண்பர்களுடன் குழுவாகச் செயல் படுவதைவிட ஒரு அமைப்பாகச் செயல்பட்டால் இலக்கை எளிதில் அடையலாம் என்று நினைத்தார் வில்சன். சமூக ஈடுபாடு கொண்ட நண்பர்களின் துணையோடு ‘சஃபாயீ கர்மாச்சாரி ஆந்தோலன்’ என்னும் அமைப்பைத் தொடங்கினார். ‘சஃபாயீ கர்மாச்சாரி’ என்றால் மலம் அள்ளுபவர் என்று பொருள். தற்போது இந்திய மாநிலங்கள் முழுவதிலும் ‘சஃபாயீ கர்மாச்சாரி ஆந்தோலன்’ அமைப்பு சார்பில் நிர்வாகிகளை நியமித்து, கையால் மலம் அள்ளும் நிலையை ஒழிப்பதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்.

மலம் அள்ளும் பணியை விட்டு வெளியேறும் தொழிலாளர்களுக்கு யார் வேலை தருவார்கள்? மீண்டும் அவர்கள் மலம் அள்ளும் தொழிலுக்குத்தான் திரும்ப வேண்டுமா என்ற கேள்வியும் வில்சன் மனதில் எழாமல் இல்லை. அதனால்தான் மலம் அள்ளும் தொழிலாளர்களை அதிலிருந்து மீட்பதுடன் அவர்களை வேறு தகுதியான பணிகளில் அமர்த்துவது குறித்தும் அக்கறையுடன் செயல்பட்டுவருகிறார். இந்த அக்கறைதான் ஒடுக்கப்பட்ட மக்கள் இவரைத் தங்கள் நாயகனாகக் கொண்டாடக் காரணம்.

“மலம் அள்ளும் வேலையிலிருந்து நாங்கள் வெளிவருவதன் மூலமே இந்தச் சமூகம் உருவாக்கிவைத்திருக்கும் சாதி அமைப்பை உடைக்க முயல்கிறோம். பிறப்பாலும், அது தொடர்பான தொழில் திணிப்பாலும் ஏற்படுத்தப்படுகிற வர்க்க வேறுபாட்டை இப்படித்தான் அழிக்க முடியும்” என்று உறுதியாக நம்புகிறார் பெஜவாடா வில்சன். அந்த நம்பிக்கைக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மகசசே விருது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

மேலும்