போரடிக்குதே என்ன செய்யலாம்?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

வேலை எப்படி இருக்கு சார் என்றால் ‘ஆஹா! சூப்பர் சார்!’ என எத்தனை பேர் சொல்கிறார்கள்? பெரும்பாலும் ‘பரவாயில்லை’, ‘ஏதோ ஓடுது’ ரகப் பதில்கள்தான். விரக்தியாக, வெறுப்பாக இருப்போரை விட்டுவிடலாம்.

திருப்திக்கும் அதிருப்திக்கும் இடையே இருப்போர் அதிகமாகி வருகின்றனர். கிளர்ச்சி அடைய ஏதாவது செய்துகொண்டே இருக்கத் தோன்றுகிறது. என்ன சாப்பிட்டும், எங்குச் சுற்றியும் திருப்தி இல்லை. நிறைய கிடைக்கக் கிடைக்கத் திருப்தி குறைகிறது.

போரடிக்குது

குறைந்தபட்ச ஊதியமும் அடிப்படைத் தேவைகளும் தரப்படாமல் அடிமட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களைவிட, வெள்ளைச் சட்டை கசங்காமல், ஏசி அறையில் கம்ப்யூட்டர் முன்னால் வேலை செய்பவர்களுக்குத் திருப்தியின்மையில் துவங்கி மனச்சோர்வு வரை எல்லாம் வருகிறது.

“வாரம் பூரா எதுக்கும் நேரம் கிடைக்கலை. வாரக்கடைசியில லீவு விட்டா வீட்டில என்ன செய்யறதுன்னு தெரியலை. வேலைக்குப் போனாலும் சரி வீட்டிலே இருந்தாலும் சரி போரடிக்குது...!” என்றார் என்னிடம் ஆலோசனைக்கு வந்த ஒருவர்.

“ஒரு பக்கம் நிறைய வேலை இருக்கு. ஆனா உற்சாகமா செய்ய முடியலை. இந்த வேலையும் இல்லன்னா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். இத்தனைக்கும் எங்க கம்பனியில நிறைய ஆக்டிவிட்டீஸ் பண்றோம்.

ப்ரெண்ட்ஸ் கூடப் பார்ட்டி போறதும், டீம் கூடப் பிக்னிக் போறதும் நிறைய பண்றோம். குறைன்னு எதுவும் பெரிசா இல்லை. ஆனாலும் சலிப்பா இருக்கு. என்ன செய்ய?” என்று கேட்டார்.

சலிப்பின் உளவியல்

இன்று மனிதவளத் துறைகளின் மிகப் பெரிய முன்னுரிமையே பணியாளர்களைச் சலிப்பில்லாமல் உற்சாகமாய் வேலை செய்ய வைக்கும் பணிச் சூழலை உருவாக்குவது தான்.

என்னைப் பொறுத்த வரை சலிப்பு தீர வேலை செய்ய உங்களுக்கு வெளியே உள்ள காரணங்களை விட உள்ளே உள்ள காரணங்கள் தான் அதிகம்.

சலிப்பைப் பற்றிய உளவியல் ஆராய்ச்சிகள் ஒன்றைத் தெளிவாகச் சொல்கின்றன. வேலையில் பணம் திருப்தியைத் தராது. ஆனால் பணப்பற்றாக்குறை அதிருப்தியைத் தரும்.

கிளர்ச்சியும் அதிருப்தியும்

‘என்ன தலைவா, குழப்பறீங்க...’ என்கிறீர்களா?

நீங்கள் வேலைக்குச் சேர்ந்து வாங்கிய முதல் மாதச் சம்பளம் எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது? போன மாதம் சம்பளம் வாங்கிய போது அதே மகிழ்ச்சி இருந்ததா?

இது ஏன் ஏற்படுகிறது? முதல் மாதச் சம்பளம் உங்களுக்கு அளித்தது சமூக அந்தஸ்து, குடும்பத்தில் கவுரவம், தன்னம்பிக்கை போன்றவை. சென்ற மாதச் சம்பளம் வெறும் எண்ணிக்கைத் தகவல். அவ்வளவுதான்.

சுருங்கச் சொன்னால் சம்பளம் இல்லாவிட்டால் அதிருப்தி. வந்தால் அதிருப்தி இல்லை. அவ்வளவுதான். இதற்கும் திருப்திக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. கம்பெனி வசதிகளும் அப்படித்தான். ஏசி பஸ், கேண்டீன் மற்றும் எல்லா வசதிகளும் வந்தவுடன் கிளர்ச்சியாக இருக்கும். பின் அது இல்லாவிட்டால் அதிருப்தி என்ற நிலை ஏற்படுவது இதனால் தான்.

பழகும் வசதிகள்

ஃப்ரெட்ரிக் ஹெர்ஸ்பெர்க் இவற்றை ‘Hygiene Factors’ என்கிறார். தூய்மையின் மூலமாக நமக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் என்றால் என்ன? நம் கழிப்பறையில் குழாய் வேலை செய்யவில்லை என்றால் கடும் அதிருப்தி அடைகிறோம். ஆனால் குழாய் சாதாரணமாக வேலை செய்யும்போது நாம் ஆனந்தக் கூத்தாடுவதில்லை!

இதனால்தான் வேலையில் கிடைக்கும் வசதிகள் நமக்குப் பழகிப் போய்விடுகின்றன. இவை ஒரு போதும் திருப்தியைத் தராது. அவற்றைத் தொடர்ந்து அளித்துக்கொண்டிருப்பதன் நோக்கம் அதிருப்தியைத் தவிர்க்கத்தான்!

அப்படியானால் ஊக்கம், உற்சாகம், திருப்தி, மகிழ்ச்சி எல்லாம் எதனால் ஏற்படுகின்றன?

ஊக்கக் காரணிகள்

ஏன் இந்த வேலை செய்கிறோம் என்ற புரிதலில் ஒரு பெரிய நோக்கம், சமூகத்தில் இந்த வேலையால் கிடைக்கும் பெருமிதம், வேலை தரும் மன மகிழ்ச்சி, வேலையில் கிடைக்கும் கற்றல், நம் வேலை பிறருக்கு நன்மை செய்கிறது என்கிற திருப்தி ஆகியவைதான் நிஜமான நெடுங்கால ஊக்கக் காரணிகள்.

ஃப்ரெட்ரிக் ஹெர்ஸ்பெர்க் இவற்றை ‘Motivating Factors’ என்கிறார். உங்கள் வேலையின் ஊக்கக் காரணிகள் எவை?

பெரிய சம்பளம் என்கிற ஒரே காரணத்திற்காக வேலையைத் தேர்ந்தெடுப்பவர்கள், மற்ற ஊக்கக்காரணிகள் இல்லாதபோது, விரைவில் சலிப்பு அடைகிறார்கள். விரக்தி அடைகிறார்கள்.

வேலையினால் கிடைக்கும் பரிசுகள் எவை என்று பார்க்காமல் வேலையையே பரிசாகப் பார்ப்பவர்கள் சலித்துக் கொள்வதில்லை.

வேலையே ஒரு படைப்பாக …

மருத்துவம் வியாபாரமாகியிருக்கும் சூழலில் மலைவாழ் பழங்குடிகளுக்கு மருத்துவம் பார்க்க டாக்டர் பினாயக் சென்னுக்கு எங்கிருந்து ஊக்கச் சக்தி வருகிறது?

25 ஆண்டுகளாக எத்தனையோ இடங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் ஒரு முறை காது கேளாதோர் பள்ளி ஒன்றில் நான் பேசினேன்.அதை அவர்களின் ஆசிரியர் சைகை மொழியில் எடுத்துரைத்தார். அதை உள்வாங்கிக்கொண்ட காது கேளாதோர் தந்த நீண்ட நேர அப்ளாஸ் மற்ற எல்லா வெற்றிகளையும் விட எனக்குப் பெரிதாகத் தெரிவது எதனால்?

வேலையை ஒரு படைப்புத் தொழிலாகப் பார்த்தால் அது புதிய பரிணாமம். ஒரு படைப்பாளியாக நினைத்து உங்கள் வேலையைப் பாருங்கள். வேலையைப் பார்த்தாலே அது நீங்கள் தான் செய்தது என்று சொல்ல வையுங்கள். வேலை என்றும் சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.

அவசரமாகத் தின்னும் பீட்ஸாவிற்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்போம். அதே ஆயிரம் ரூபாய் கொண்டு ஒரு ஏழைச் சிறுமியின் படிப்புக்கு உதவுங்கள். கிளர்ச்சி தரும் இன்பத்தை விட அர்த்தத்தோடு செய்யும் உதவி உங்களுக்கு அதிகத் திருப்தியைத் தரும்.

உங்களைவிடத் திருப்தியானவர்களைப் பாருங்கள். அவர்கள் கொடையாளிகள். பிறருக்குக் கற்றல், வாய்ப்பு, உதவி, ஆதரவு, நம்பிக்கை, ஆனந்தம் எனத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள்.

பணியிடத்திலோ வெளியிலோ நீங்கள் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசியுங்கள்! அதற்குப் பிறகு சலிப்பு வருமா என்ன?

தொடர்புக்கு :
gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்