கல்வி, சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அந்தச் சமூக மாற்றங்களை எப்படிக் கொண்டு வருவது என்பதையே ஒரு படிப்பாகப் படித்தால் எப்படியிருக்கும்?
நம்மில் பலரும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடர்ந்து பல பணிகளை மேற்கொண்டு வந்திருப்போம். அதில் பல பிரச்சினைகளைச் சந்தித்திருப்போம். அப்போதெல்லாம், இந்தப் பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்பது பற்றி யாராவது சொல்லித் தந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கியிருப்போம் அல்லவா? வந்துவிட்டது, ‘ஆட்சியியல் மாற்றத்தை வழிவகுத்தல்’ படிப்பு (PG Diploma in Facilitating Governance Reform).
இந்தியாவிலேயே முதன்முறையாக
சர்வதேச அளவில் புகழ்மிக்க கல்வி நிலையங்களில் ஒன்று மும்பையில் உள்ள ‘டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ்’ நிறுவனம். அதனுடன் சேர்ந்து நாட்டில் பல ஆண்டுகளாக, சமூக மாற்றத்துக்கான பல பணிகளை மேற்கொண்டு வரும் ‘பாமரர் ஆட்சியியல் கூடம்’ எனப்படும் ‘பேர்ஃபூட் அகாடமி ஆஃப் கவர்னென்ஸ்’ அமைப்பும் இணைந்து இந்த ஒரு வருட முதுநிலை பட்டய படிப்பை நடத்துகின்றன.
“இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டு முக்கியமான மாற்றங்களைச் சந்தித்தது. ஒன்று, மக்கள் தங்களின் எல்லா தேவைகளுக்கும் அரசை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதானது. இரண்டு, அனைத்து அதிகாரங்களும் ஒரே மையத்தில், அதாவது அரசிடம் மட்டுமே குவிக்கப்பட்டது. இன்று நாடு சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கும் இவைதான் காரணம். அந்தப் பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்பதைக் கற்றுத் தருவதுதான் இந்தப் படிப்பின் நோக்கம்” என்று இந்தப் படிப்பைப் பற்றி விளக்கத் தொடங்கினார், முனைவர் வி. சுரேஷ். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியச் செயலாளராகவும், சமூக மாற்றம் தொடர்பான களப் பணியாளராகவும் செயலாற்றிவருகிறார். இந்தப் படிப்பை உருவாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
“பொதுவாக, நாம் சமூக மாற்றம் என்று சொல்கிறபோது, அரசை, அரசு அமைப்புகளை, அரசு இயந்திரத்தை மாற்றுவது என்பதாக மட்டுமே அதை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது மட்டுமே மாற்றம் அல்ல. ‘ஆட்சியியல் மாற்றம்’தான் (கவர்னென்ஸ் ரிஃபார்ம்ஸ்) உண்மையான சமூக மாற்றம். இன்றிருக்கும் அரசமைப்பில், ஊழல்கள் நிறைந்திருக்கின்றன. அது மக்களை வெகுவாகப் பாதிக்கின்றன. இதனை எப்படி அணுகுவது?
அரசு அமைப்புகளும், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகம், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகளும் ஒன்றாக இணையும்போது இன்று நிலவும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அதற்கு ஒவ்வொருவரின் மனநிலையில் மாற்றம், அவர்களின் சமூகப் பார்வையில் மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். அதை எப்படிச் சாத்தியப்படுத்துவது என்பதைத்தான் இந்தப் படிப்பு கற்றுத்தருகிறது. இந்தியாவிலேயே இப்படியொரு படிப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறை” என்கிறார் சுரேஷ்.
கற்றலில் புதுமை
ஒரு வருடம் தொலைதூரக் கல்வி மூலம் வழங்கப்படும் இந்தப் படிப்பு 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது. தன்னிலை உணர்தல், பிறரை மரியாதையுடன் நடத்துதல், மேம்பாடு, ஜனநாயகம் ஆகியவைதான் அந்தப் பிரிவுகள். ஒவ்வொரு பிரிவும் மூன்று மாத கால அளவைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மூன்று மாதத்திலும் இரண்டு வாரங்கள் நேரடி வகுப்புகள் நடைபெறும். மீதியிருக்கும் நாட்களில் மாணவர்களே களத்துக்குச் சென்று கற்றுக்கொள்ளுதல். முதல் இரண்டு வார நேரடி வகுப்புகள் மட்டும் மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் வளாகத்தில் நடைபெறும். மற்ற நேரடி வகுப்புகள் அனைத்தும் வேறு வேறு இடங்களில் நடத்தப்படும்.
“மற்ற படிப்புகளைப் போல இந்தப் படிப்புக்கென தனியான பாடப் புத்தகங்கள் கிடையாது. மாறாக, அரசியல் தத்துவங்கள், அனுபவப் பாடங்கள், கேஸ் ஸ்டடி, உரையாடல்கள், களப் பணிகள் ஆகியவையே கற்பிக்கும் கருவிகளாகவும், கற்பிக்கும் முறைகளாகவும் இருக்கின்றன. இந்தப் படிப்பில் தேர்வுகள் கிடையாது. உங்களின் ஆர்வம், களப் பணிகள் போன்றவையே மதிப்பிடப்படும். மேற்கண்ட நான்கு பிரிவுகளிலும் சிறந்து விளங்கும் மனிதர்களை அழைத்து மாணவர்களிடையே உரையாட வைக்கிறோம். அவர்கள்தான் ஆசிரியர்கள்” என்கிறார் சுரேஷ்.
இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன், ‘டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ்’ மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.
என்ன தகுதிகள்?
இந்தப் படிப்பில் சேர, குறைந்தபட்ச கல்வித் தகுதி ஒரு பட்டப்படிப்பு. தவிர, சமூக மேம்பாடு, சமூக மாற்றம் ஆகியவை தொடர்பாக, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்.
இந்தப் படிப்புக்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் நான்கு கேள்விகளுக்கு கட்டுரைகள் எழுத வேண்டும். அந்தக் கட்டுரைகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சுமார் 30 மாணவர்கள் வரை இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
படிப்புக்கான கட்டணம் ஒரு லட்சம் ரூபாய். இதனை ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ரூ. 25 ஆயிரம் வீதம், தவனை முறையிலும் செலுத்தலாம். இந்தக் கட்டணத்திலேயே, சுமார் 60 நாட்களுக்கான நேரடி வகுப்புக்கு ஆகும் செலவுகளும் சேர்க்கப்பட்டிருப்பதால், நேரடி வகுப்புகள் தொடர்பான செலவுகள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
‘ஆட்சியியல் மாற்றத்தை வழிவகுத்தல்’ படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31, 2017. கூடுதல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்: >http://admissions.tiss.edu/view/10/admissions/stp-admissions/pg-diploma-in-facilitating-governance-reform/
என்ன சொல்கிறார் மாணவர்?
சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் ஒருவர் க.சரவணன். அடிப்படையில் பொறியியலாளரான இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக சமூக மாற்றம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். தவிர, பத்திரிகைகளில் வேளாண்மை, நீர் வளம் போன்றவை குறித்தும் கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரிடம் இந்தப் படிப்பு தரும் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.
“பொதுவாக, சமூகப் பணிகள் என்றால், ‘நான் மக்களுக்காகப் பணியாற்றுகிறேன்’ என்று சொல்வார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ‘நான் மக்களுடன் பணியாற்றுகிறேன்’ எனும் விழிப்புணர்வை எனக்கு இந்தப் படிப்பு தந்திருக்கிறது. மக்களுக்காக நாம் போராடுவது என்பதோடு, அவர்களை அரசியல்படுத்தவும் வேண்டும். அப்போது அவர்கள் விழிப்புணர்வு பெற்று, தங்களுக்கான மாற்றத்தை அவர்களே கொண்டு வருவார்கள்.
இந்தப் படிப்பில் நான் தற்போது இரண்டு பிரிவுகளைக் கடந்திருக்கிறேன். தன்னிலை உணர்தல் எனும் முதல் பிரிவில், யோகா, தியானம் போன்றவை சமயசார்பின்றி தன்னிலையை அறிந்து மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக கற்றுத்தரப்படுகின்றன. இதுவரை என்னைப் பற்றி நான் கொண்டிருந்த அடையாளங்களை மறுபரிசீலனை செய்வதற்கு இந்தப் பிரிவு உதவியது. ‘உனக்குள் மாற்றம் ஏற்படாத வரை, உன்னால் சமூகத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது’ என்பதை இந்தப் பிரிவு உணர்த்தியது.
மற்றவர்களை மரியாதையாக நடத்துதல் எனும் பிரிவில், நாம் மக்களை எப்படி மரியாதையாக, கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டேன். சமீபத்தில் ஒடிசாவுக்குக் களப் பணிக்காகச் சென்றிருந்தோம். அங்கு பழங்குடிப் பெண்கள் அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்குத் தயக்கம் காட்டினார்கள். காரணம் கேட்டபோது, தங்களை மருத்துவர்கள் உரிய கண்ணியத்துடன் நடத்துவதில்லை என்பது தெரிந்தது. இது ஒடிசாவில் மட்டுமே காணப்படும் பிரச்சினையில்லை. இந்தப் பிரச்சினை குறித்து அரசு அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதை எப்படிச் சாத்தியப்படுத்துவது என்பதை இந்தப் பிரிவின் மூலம் தெரிந்துகொண்டேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago