நான் இன்னும் அந்த பஸ்ஸில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை விதமான மனிதர்கள் இந்தப் பேருந்தில் என்னுடன் பயணிக்கப்போகிறார்கள்; அவர்களிடமிருந்து என்ன புது அனுபவம் எனக்கு ஏற்படப் போகிறது என்ற ஆவல் எனக்குள் இருந்தது.
காலேஜ் ஞாபகம் வர வாட்சைப் பார்த்தேன். இன்னும் நேரம் இருந்தது. காலேஜைத் தேடிக்கொண்டிருந்த என் கண்களுக்கு நடுவில் ஒருவர் வித்தியாசமாகத் தென்பட்டார். அவர் கண்கள் அவர் அணிந்திருந்த கண்ணாடியைத் தாண்டி எதையோ தேடிக்கொண்டிருந்தன. பஸ்ஸுக்கு வெளியிலும் உள்ளேயும் அவர் கண்கள் கண்ட காட்சியைக் கைகளால் தனது டிக்கெட்டுக்குப் பின்னால் கோப்புக்களாகிக் கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்த பார்வை, அவர் தன்னையே பார்த்துக்கொண்ட விதம், அவரை ஒரு சிந்தனையாளராய்க் காட்டியது.
கண்டக்டரின் குரல் என் கவனத்தைக் கலைத்தது. “பஸ் நிக்கும்போது ஏறலன்னா பஸ் உன் மேலே ஏறிடும்” என்றார், ஓடி வந்து ஏறியவரைப் பார்த்து: அந்த நபர், வாயில் சிகரெட் சகிதம் ஸ்டைல் காட்டினார். சிகரெட்டைப் பார்த்து சீரியஸ் ஆகிவிட்டார் கண்டக்டர். வெடுக்கெனக் கடித்தார் அந்த இளைஞனை. ஓகே, ஓகே எனச் சொன்னபடி ஒன்றுமே நடக்காததுபோல் சிகரெட்டைத் தூக்கிப் போட்டார். பாக்கெட்டிலிருந்து காசை எடுத்து ‘ஆமா போட்டி’ என்றார் பிரிட்டிஷ் ஸ்டைலில். ஏற்கனவே கடுப்பில் இருந்த கண்டக்டர் காசை வாங்கிக் கொண்டு. “ஆமபட்டி இல்லை தாத்தா. இந்த ரூட்ல அம்மா பட்டிதான் இருக்கு” என்று கிண்டலாக டிக்கெட்டைக் கிழித்தார். தனது நிர்வாகத் திறமையைப் பலருக்கும் காட்ட, போனில் யாரிடமோ பீட்டர் விட்டுக்கொண்டிருந்தார் அந்த நபர். திடீரென பஸ் நின்றது. டிரைவரும் கடுப்பாகிவிட்டாரோ என நினைத்தேன்.
எங்கள் பஸ் மட்டுமல்ல; ரோட்டில் சென்ற அத்தனை வாகனங்களும் நின்றன. என்னவென்று எட்டிப் பார்த்தேன். ரயில்வே கிராசிங்; வாகனங்களின் நீண்ட வரிசை; இன்றைய சூழலில் குறித்த நேரத்தைவிடச் சற்று சீக்கிரம் கிளம்பியது எவ்வளவு நல்லது என எண்ணிக் கொஞ்சம் சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷத்தோடு திரும்பிப் பார்த்தால் பின் சீட்டில் ஒரு குழந்தை பஸ் நின்றது பிடிக்காமல் தூக்கத்திலிருந்து எழுந்து அழத் தொடங்கிவிட்டது.
குடும்பமே சேர்ந்து அந்த அழுகையை நிறுத்தப் போராடிக்கொண்டிருந்தது “நான் அப்பவே சொன்னேன் பால் பாட்டில் மறக்காத எடுத்து, வச்சிக்கன்னு” என்று மனைவியைத் திட்டிக்கொண்டிருந்தார் தந்தை. “எல்லாத்தையும் நான்தான் செய்யணுமா? நீங்கதான் எடுத்து வச்சிக்கிறது” மனைவி திரும்பி சிக்ஸர் அடித்தார். இதைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி புன்னகை மன்னன் கமல் மாதிரி ஏதேதோ முயன்றுகொண்டிருந்தார். அப்போது என் முன் சீட்டில் இருந்தவர் எழுந்து போய்க் குழந்தையைக் கையில் வாங்கி, “அங்கிள் பென் வேணுமா இந்தா வச்சிக்கோ” என்றார். நல்லவேளை அந்தக் குழந்தை “பானைக்குள் யானை” கேக்கல... பேனாவை வாங்கிக்கொண்டு அழுகையை நிறுத்தியது. பிரச்சினைகளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பவர்களுக்கிடையில், அவர் சரியான செயல் வீரராக எனக்குத் தெரிந்தார்.
குழந்தையின் அழுகையை நிறுத்த நடந்த முயற்சியில் தந்தை தன் குளுகோஸ் லெவலை இழந்து களைத்துவிட்டார். ரோட்டோரத்தில் உட்கார்ந்திருந்த வயதான பெண்மணியிடம் கொய்யா வாங்கச் சென்றார். என் கண்கள் அந்த அம்மாவிடம் சென்றன. அவர், “ஏம்மா ரெண்டு கொய்யாப்பழம் குடும்மா” என்றார். “பழம் இல்ல ஐயா” என்ற அந்த அம்மாவைப் பார்த்துச் சற்றே குழம்பிவிட்டார் அவர். “என்னம்மா ஆறு பழங்கள வச்சிக்கிட்டு இல்லேன்னு சொல்ற? சில்லரை வேணும்னா தரேம்மா” என்றார். அந்தத் தாய் பொறுமையாக, “ஐயா ஒரு நாளைக்கு அறுபது பழம்தான் நான் விக்கறது அது முடிஞ்சிடுச்சு. மிச்சமிருக்கிற இந்தப் பழங்கள் பசியில இருக்கற ஏழைக்குழந்தைகளுக்கு. இதைத்தான் பல வருஷமா நான் பண்ணிகிட்டிருக்கேன்” என்ற அந்த அம்மாவின் பதில் உண்மையிலேயே அந்தக் கொய்யாப்பழத்தை வைரமாகக் காட்டியது. சிக்னல் சிவப்பு நிறம் மாறி பஸ் நகரத்தொடங்கி இருந்தது. ஆனால் என் எண்ணம் அந்த அம்மாவை விட்டு நகரவில்லை. எத்தனை செயல்திறன்மிக்க பொறுப்பானவர் என்பதை எண்ணி வியந்தேன்; அந்த அம்மாவின் செயல் திறன் மற்றும் சமூகப் பொறுப்பைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்திருந்த என்னை செல்போன் அழைத்தது. “சார் காலேஜ் டிரைவர் பேசறேன் சார்.
வண்டி ரெடி ஆயிடுச்சு. எங்க சார் வந்து உங்களை பிக் அப் பண்ணட்டும்” என்றார். நான் உடனே, என் சீட்டை விட்டு எழுந்து படிக்கட்டுக்கு அருகில் உள்ள சீட்டில் இருந்தவரிடம், “எக்ஸ்க்யுஸ் மீ, அம்மாபட்டி இன்னும் எவ்ளோ தூரம்?” எனக் கேட்டு முடிக்கும் முன்னால் எனக்குப் பின்னாலிருந்து பதில் வந்தது. “அம்மாபட்டி அடுத்த ஸ்டாப் சார்”. திரும்பிப் பார்த்து, “தாங்க்யூ” என்றேன். “பரவால்ல, நான் டவுன் பஸ்லயே வந்துட்டேன். நீங்க என்னை பஸ் ஸ்டாண்ட்ல பிக் அப் பண்ணிடுங்க” என்றேன் டிரைவரிடம்.
நான் பஸ்ஸில் ஏறியது முதல் அந்த இளைஞனைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான்கைந்து நண்பர்களுடன் வந்திருந்தார் . “இந்த சீட்ல ரொம்ப தூக்கிப்போடாது உட்காரு”, “நான்தான் டிக்கெட் எடுப்பேன்” என அவருடைய நண்பர்களுக்கு காட் பாதர் ஆகத் தெரிந்தார். யாருக்காவது எதாவது உதவி தேவைப்பட்டால் வலியச்சென்று உதவினார். இந்த பஸ் பயணத்தில் ஒரு பாதுகாவலரையும் பார்த்துவிட்ட திருப்தியில் பயணத்தைத் தொடர்ந்தேன்.
பக்கத்தில் இருந்த எக்சிகியூடிவ் பர்சனாலிட்டி என்னுடைய ரிங் டோன் பற்றிக் கேட்டார். “அதென்ன சார் இது . புது ரிங் டோனா இருக்கு. இந்தப் பாட்டு எந்தப் படத்துல வருது சார்” என்று கேட்டார். “நான். சினிமா பாட்டு இல்ல சார், அந்த ரிங் டோனுக்கு மீ னிங் செல்வம், மகிழ்ச்சி, அமைதி. இது எனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்கும் கிடைக்கணும்கிற மாதிரியான ரிங் டோன். நான் பண்ண டாக்டரேட் ரிசர்ச்” என்றேன்.
நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. ஒரு பயணத்தில்தான் எத்தனை விதமான அனுபவங்கள், எத்தனை விதமான மனிதர்கள்... அவர்களைப் பற்றி வரும் வாரங்களில் அலசுவோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago