போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் பாடத்திட்டத்தை யொட்டிய புத்தகங்கள் இருக்கும். பிரபலப் பதிப்பகங்கள் வெளியிடுகின்ற வழிகாட்டு நூல்களும் இருக்கும். அதைப் போல அவர்களிடம் முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
தேர்வுக்கான தயாரிப்பில் முதல் கவனமும் முக்கிய கவனமும் கொடுக்கப்பட வேண்டியது வினாத்தாள்களுக்குத்தான். எந்தவொரு தேர்வுக்குத் தயாரானாலும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப திட்டமிடுவதுதான் சரியான அணுகுமுறை. ஏனென்றால் மாணவர்கள் எதிர்கொள்ளப்போவது தேர்வை அல்ல, வினாக்களைத்தான். ஒட்டுமொத்தத் தேர்வையும் வினாக்களாகத் திட்டமிட்டு அதற்கேற்ப தயாராவதுதான் தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிமையான சூத்திரம்.
பாடத்திட்டமும் கேள்விகளும்
பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் வி.ஏ.ஓ. தேர்வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதே வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், அடிப்படை அறிவியல் மற்றும் நடப்புச் சம்பவங்கள் என்று பொதுவான பாடத்திட்டம்தான். ஆனால் இரண்டு தேர்வுகளிலும் வினாக்கள் கேட்கப்படும் முறையில்தான் வேறுபாடு உள்ளது. பட்டப்படிப்பு கல்வித் தகுதியில் தேர்வாணையங்கள் நடத்துகின்ற பெரும்பாலான தேர்வுகளின் பாடத்திட்டம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் கேள்விகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசங்கள் உண்டு. அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாதபோது, தேர்வுக்கான தயாரிப்பில் பிழைகள் நேர்ந்துவிட வாய்ப்புண்டு.
வினாத்தாள் தொகுப்பை வாங்குவதில் கவனம்
ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் படிப்பதற்கு ஒதுக்க முடிகிறது என்றால், முதல் அரைமணி நேரத்தைக் கேள்வித்தாள்களைப் படிப்பதற்காக ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அந்த அரை மணி நேரம், தேர்வுக்கான தயாரிப்பின் அடிப்படை அஸ்திவாரம். பாடங்களைப் படித்துவிட்டுக் கடைசி நேரத்தில் பழைய கேள்விகளை ஒரு தடவை பார்த்துக்கொண்டால் போதும் என்று நினைப்பது தவறான திட்டமிடல்.
யூ.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. ஆகியவை தங்களது இணையத் தளத்திலேயே முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களை விடைகளுடன் வெளியிட்டுவருகின்றன. அவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சில பதிப்பகங்கள், முந்தைய தேர்வுத்தாள் தொகுப்புகளை வெளியிடுகின்றன. சில சமயங்களில் அவற்றில் இடம்பெற்றுள்ள விடைகள் தவறாக அச்சிடப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. வினாத்தாள் தொகுப்புகளை வாங்கும்போது, விடைகளுக்கான விளக்கங்களையும் அளித்துள்ள தொகுப்புகளையே வாங்க வேண்டும். விடைக்கான குறிப்புதவி விவரங்களும் இடம்பெற்றிருந்தால் நல்லது. அவ்விவரங்கள், எந்தெந்தப் புத்தகங்களை முன்னுரிமை கொடுத்துப் படிக்க வேண்டும் என்று திட்டமிட உதவும்.
எது முக்கிய புத்தகம்?
முக்கியமாக எந்தவொரு புத்தகத்தைப் படிக்கிறபோதும், அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் முந்தைய ஆண்டுகளில் கேள்வியாக வந்துள்ளனவா என்ற கவனத்தோடு படிக்க வேண்டும். ஒருவேளை, அப்படிக் கேள்வி கேட்கப்பட்டிருந்தால் தொடர்புடைய வாக்கியங்களை அடிக்கோடிட வேண்டும். அடிக்கடி ஒரு புத்தகத்தில் அடிக்கோடிட வேண்டியிருந்தால் அது தேர்வுக்குப் படிப்பதற்கான முக்கியப் புத்தகம் என்று புரிந்துகொள்ளுங்கள்.
சிற்சில மாற்றங்களோடு அமையும்
ஒரே பாடத்திட்டத்தில் சமமான கல்வித் தகுதியும் சமமான பணிவாய்ப்பும் உள்ள இதர தேர்வுகளின் வினாத்தாள்களையும் சேகரித்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஐ.ஏ.எஸ். முதனிலைத் தேர்வுக்குத் தயாராகிற மாணவர் யூ.பி.எஸ்.சி. நடத்துகிற குரூப் 1 தகுதியுள்ள தேர்வுகளின் வினாத்தாளையும் படிக்க வேண்டும். அதைப்போல டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்குப் படிக்கிற மாணவர், குரூப் 1-க்கு சமமான தேர்வுகளில் உள்ள பொது அறிவுத் தாளையும் கவனமாகப் படிக்க வேண்டும். இதே அடிப்படையில் குரூப் 2 தேர்வுக்குப் படிப்பவர் வி.ஏ.ஓ. வினாத்தாளைப் படிக்கலாம்.
முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் அப்படியே மீண்டும் வரப்போவதில்லை. ஆனால் முன்பு பின்பற்றப்பட்ட அதே வழிமுறையின் அடிப்படையில் சிற்சில மாற்றங்களோடுதான் அடுத்த ஆண்டுகளில் வினாத்தாள் அமையும்.
பாடத்திட்டத்தையொட்டி வகுப்பு எடுக்கிற பயிற்சி நிலையங்கள், தேர்வுக்கு முன்னதாக மாதிரித் தேர்வுகளை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. ஆண்டு முழுவதும் படித்துவிட்டு, கடைசியில் கேள்விகளை எதிர்கொள்ள முடிகிறதா என்று சரிபார்த்துக்கொள்வதைக் காட்டிலும் முன்கூட்டியே வினாக்களின் அடிப்படையில் தேர்வுக்குத் தயாராவதே விவேகமானது.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இணையவழி இலவசப் பயிற்சி
புது டெல்லி ஐ.ஐ.ஐ.எம்.எஸ். நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற ரோமன் சைனி, தனது முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். பதவிக்குத் தேர்வானார். மத்தியப் பிரதேசத்தில் மாவட்டத் துணை ஆட்சியராகப் பதவியேற்ற அவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரக் கல்வியாளராக மாறியிருக்கிறார். நண்பர்களுடன் இணைந்து அவர் நடத்திவரும் unacademy.in என்ற தளத்தில் ஐஏஎஸ் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு இலவசமாகவே பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தத் தளத்தில் மாணவர்கள் பதிவு செய்துகொண்டு, பயிற்சி வகுப்புகளின் காணொளிக் காட்சிகளையும் இலவசப் பாடக்குறிப்புகளையும் இலவசமாகப் பெறலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago