ஆண்டுதோறும் 15 லட்சம் பொறியாளர்களை இந்தியா உருவாக்குகிறது. ஆனால், சமீபத்தில் ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் நேஷனல் எம்ப்பிளாயபிளிட்டி (Aspiring Minds National Employability) நிறுவனம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்தியப் பொறியியல் பட்டதாரிகளிடம் ஓர் ஆய்வை நடத்தி அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி இந்தியாவின் 650 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 2015-ல் பட்டம் பெற்ற 80 சதவீதத்தினருக்கு வேலை இல்லை. இதனால் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாகக் குறைந்து வருகிறது.
இத்தனை பொறியாளர்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை? ஒருபுறம் பட்டம் பெற்றிருந்தாலும் வேலைக்குத் தேவையான திறனும் பயிற்சியும் இல்லாமலேயே மாணவர்கள் வெளி உலகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்படியே சிறந்த முறையில் பொறியியல் அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தாலும் பெரும்பாலோர் ஒரு சில பிரிவுகளை மட்டுமே படித்திருக்கிறார்கள்.
அத்தனை பேருக்கும் ஒரே விதமான வேலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, அவர்கள் படித்த படிப்புக்குச் சம்பந்தம் இல்லாத வேலையை அல்லது தகுதிக்குக் குறைவான வேலையைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தகுதியும் அறிவும் மேம்பட
அதே வேளையில் இன்றைய சூழலில் தமிழகத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதே போல எல்லாப் படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், தரமான கல்வியை வழங்கும் கல்லூரியையும் உங்களுக்கு உகந்த பாடப் பிரிவையும் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். பொறியியல் பட்டத்துக்கு உங்களுக்குத் தேவையான தகுதியும் அறிவும் புகட்டும் கல்லூரியையும் படிப்பையும் முதலில் அடையாளம் காண வேண்டும். எல்லோரும் ஒரே விதமான படிப்பின் பின்னால் ஓடினால் அத்தனை பேருக்கும் அதே துறையில் வேலைக்கு உத்தரவாதம் இல்லை.
இதில் முதலில் கவனிக்க வேண்டியது, பொறியியல் பட்டப் படிப்பு என்றாலே மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல் மட்டுமல்ல. சமீபகாலத்தில் பால் உற்பத்தி தொடர்பான அறிவியலும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்துவருகிறது.
பி.டெக். இன் டெயிரி டெக்னாலஜி (B.Tech. in Dairy Engineering) படித்தால் பால் உற்பத்தி, பால் பொருட்களைப் பதப்படுத்துதல், உற்பத்தியை மேம்படுத்துதல், அதற்குத் தேவையான இயந்திரங்களின் பயன்பாடு ஆகியவை பாடப்பகுதியில் இடம்பெறும். உணவு பொறியியல், கரிம வேதியியல், கால்நடை பராமரிப்பு, பால் பொருட்களின் பொறியியல், பால் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் பராமரிப்பு, பால் மேலாண்மை, நுண்ணுயிரியல், உணவு அறிவியலும் ஊட்டச்சத்தும், உயிரித்தொழில்நுட்பம், குளிர்பதனமும் குளிர்சாதனமும் பால் உற்பத்தியும் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும்.
படித்து முடித்தால் அரசு உணவு வாரியம், அரசு பால் பொருட்கள் வளர்ச்சி வாரியம், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பால் பண்ணைகள், ஆய்வுக் கூடங்கள், விவசாயிகளுக்குப் பிரத்யேகமாகக் கடன் வழங்கும் வங்கிகள், போன்றவற்றில் பால் பொறியாளர், பால் தொழிற்சாலை மேற்பார்வையாளர், தரக் கட்டுப்பாட்டு அதிகாரி, இயந்திர வடிவமைப்பாளர், ஆய்வு பொறியாளர் போன்ற பதவிகள் வகிக்கலாம். இன்று ஏகபோக வரவேற்பு பெற்றிருக்கும் துறைகளில் ஒன்று உணவு பதப்படுத்துதல். பி.டெக். இன் ஃபூட் புராசஸிங் டெக்னாலஜி (B.Tech. in Food Processing Technology) என்னும் இதுவும் டெயிரி டெக்னாலஜிக்கு நிகரான வாய்ப்பு கொழிக்கும் படிப்பாகும்.
இயற்கையோடு இணைந்த பொறியியல்
வேளாண்மையில் பொறியியல் படிப்பைப்போலவே தகவல் தொழில்நுட்பமும் வேளாண்மையோடு கைகோத்து இருக்கிறது. வேளாண்மையைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் வழிகளைக் கற்றுத்தரும் பி.டெக். இன் அக்ரிகல்சுரல் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (B.Tech. in Agricultural Information Technology) படித்தால் ஆய்வு பொறியாளர், தகவல் தொழில்நுட்ப அதிகாரி, தகவல் ஆய்வாளர், தகவல் விஞ்ஞானி, வேளாண்மை அதிகாரி ஆகலாம்.
இன்று உலகை அச்சுறுத்தும் பிரச்சினைகளில் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேடு. புவி வெப்பமடைதலையும் பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ளும் வழிகளைச் சொல்லித்தருகிறது பி.டெக். இன் ரென்யூவபிள் எனர்ஜி அண்டு என்விரான்மென்ட்டல் இன்ஜினீயரீங்க் (B.Tech. in Renewable Energy and Environmental Engineering). இயற்கை ஆற்றலைத் தொழில்நுட்ப ரீதியாக ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த இதில் சொல்லித்தரப்படுகிறது.
கட்டுமானம் குறித்த படிப்பான சிவில் இன்ஜினீயரிங்கை விடவும் சுவாரஸ்யமான பாடத்திட்டத்தைக் கொண்டது பி.டெக். இன் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி (B.tech. in Construction Technology). இதன் பாடத்திட்டத்தில் கட்டுமானப் பொறியியல், கட்டிட மேலாண்மை, சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்டவை உள்ளன. கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் படித்தவர்களுக்கு இந்திய ரயில்வே, எல் அண்டு டி, டாடா ரியாலிட்டி அண்டு இன்ஃப்ராஸ்டிரக்சர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.
இதுபோலவே மெரைன் இன்ஜினீயரிங் (Marine Engineering), நேவல் ஆர்கிடெக்சர் (Naval Architecture) , ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் (Aerospace Engineering), புரொடக்ஷன் இன்ஜினீயரிங் (Production Engineering), மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் (Mechatronics Engineering), ஜெனடிக் இன்ஜினீயரிங் (Genetic Engineering), பையோடெக்னாலஜி இன்ஜினீயரிங் (BioTechnology Engineering), பையோமெடிக்கல் இன்ஜினீயரிங் (Biomedical Engineering), மைனிங் இன்ஜினீயரிங் (Mining Engineering) இப்படி ஏராளமான பொறியியல் படிப்புகள் இருக்கின்றன.
இவற்றில் எந்தப் பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் வேலை கிடைக்கும் என யோசிப்பதை விடவும் முக்கியமானது, எதைப் படிக்கும் ஆர்வமும் திறனும் உங்களுக்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான்.
இன்று வேலை நிச்சயம் எனச் சொல்லப்படும் படிப்புக்கு நான்கு ஆண்டுகள் கழித்து நீங்கள் பட்டத்தோடு வெளிவரும்போது அதே அளவுக்கு வாய்ப்பு இருக்கும் என யாராலும் உத்தரவாதம் தர முடியாது. ஆனால், தகுதியும் திறனும் படைத்தவர்களுக்கு எப்படியும் வேலை கிடைக்கும். ஆக உங்களுடைய விருப்பத்தையும் ஆற்றலையும் அலசி ஆராய்ந்து உங்களுக்குச் சரியான பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago