படித்த படிப்பு வேலையில் எவ்வளவு தூரம் கை கொடுக்கும்? இந்தக் கேள்வியே கூடச் சிலருக்குச் சிரிப்பை வரவழைக்கலாம். “நாங்க படிச்ச படிப்புக்கும் செய்யற வேலைக்கும் சம்பந்தமே கிடையாது!” என்று சொல்பவர்கள் தான் எல்லாக் காலங்களிலும் அதிகம்.
உங்களோடு வேலை செய்பவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதிகளை ஆராயுங்கள். அல்லது உங்களோடு டிகிரி முடித்தவர்கள் என்னவெல்லாம் வேலை செய்கிறார்கள் என்று ஆராயுங்கள். உண்மை புரியும்.
கோர்ஸ்களின் காலம்
புரொபஷனல் கோர்ஸ் என்று அழைக்கப்பட்டவை அது சார்ந்த வேலைகளுக்கு மட்டும் மக்களைக் கொண்டு சேர்த்த காலம் ஒன்று இருந்தது. இன்று படித்து முடித்து அதே துறை சார்ந்த வேலைக்குப் போகிறவர்கள் மருத்துவர்கள் மட்டும்தான். இஞ்ஜினீயரிங் என்பது 16வது வகுப்பு போல ஆகிவிட்டது. இன்று இஞ்சினீயர்களை எல்லாத் தொழில்களிலும் பார்க்கலாம். மற்ற படிப்புகள் படிப்பவர்களும் அன்றைய மார்க்கெட் நிலவரம் கொண்டே வேலைகளைத் தீர்மானிக்கிறார்கள்.
அதனால் நீங்கள் படித்த படிப்பை வேலையில் காட்ட முடிந்தால் பாக்கியவான். அப்போது கூட வேலையின் தேவை அறிந்து நாம் கல்வி கற்கவில்லை என்பது வேலை செய்யும் போது தான் தெரியும். “இதெல்லாம் படிக்கற காலத்துல புரியலை. இப்பத் தான் விளங்குது” என்பதை அடிக்கடி சொல்லக் காரணம் இதுதான்.
வெட்டு குத்து
உண்மை இப்படி இருக்கையில், நாம் படித்த படிப்பைக் காலம் முழுதும் நம் அகந்தையில் தூக்கிச் செல்கிறோம். அந்த அறிவு காலத்தை மிஞ்சியது எனத் தப்புக்கணக்கு போடுகிறோம். வேலைத் தகுதிகளுக்கும் புதிய பொறுப்புகளுக்கும் இது பல சமயங்களில் உதவாது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.
பட்டங்களைப் பெரும் பெருமையாகக் கொண்டாடும் நம் சமூகத்தில் கல்வியின் தரம் பற்றிய நேர்மையான விமர்சனம், படித்த படிப்பின் சாதக பாதகங்கள் பற்றிப் பேசுவதில் சிரமங்கள் உள்ளன.
முன்பெல்லாம் கல்யாணப் பத்திரிகையில் மணமக்களின் பாஸான, பாஸாகிக்கொண்டிருக்கிற அனைத்துப் பட்டங்களையும் போடுவார்கள். என் உறவினர் ஒருவர் கடிதத்தில் உள்ளே குறிப்பிடுகையில் கூடத் தன் சொந்தச் சகோதரர்களின் பெயர்களுடன் “Dr”, “Er” என்ற அடைமொழி சேர்த்துத் தான் எழுதுவார். வாங்கிய பட்டத்தைக் குறிப்பிடாவிட்டால் இங்கு வெட்டு, குத்தே நடக்கும்.
எம்.ஈ படிச்சதாலே வேலை இல்லை
இன்றைய இளைஞர்கள் தேவலாம். படிப்பு பற்றி அவ்வளவு பகட்டு இல்லை. கல்பனா வெட்ஸ் தேவ் என்று ஒரு திருமண அழைப்பு வந்தது. “என்ன படிப்பு, என்ன வேலை ஒரு தகவலும் இல்லை!” என்று அங்கலாய்த்தார் உடனிருந்த பெரியவர்.
“நிறையப் படித்தால் நல்ல வேலை. அதிகம் படித்தால் அதிகச் சம்பளம். நல்ல மதிப்பெண்கள் நல்ல அறிவின் அறிகுறி.” போன்ற பிழையான கருத்துகள் கல்விச்சாலைகளில் வளர்த்து விடப்படுகின்றன. நிதர்சனம் வேலைக்குச் சேரும் காலத்தில் தான் தெரிகிறது.
முதுகலைப் பொறியியல் முடித்து வேலை கிடைக்காத இளைஞர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். “எம்.ஈ படிச்சும் ஒரு கம்பனியில கூட வேலை கிடைக்கலை பாருங்க டாக்டர்” என்று வருத்தப்பட்டார் உடன் வந்த தகப்பனார். “எம்.ஈ படிச்சும் இல்லை... எம்.ஈ படிச்சதாலே தான் எந்த கம்பனியிலயும் வேலை கிடைக்கலை!” என்று விளக்கினேன்.
கவுரவம் தின்ற வேலை
இளங்கலை மட்டும் தான் தேவை என்றால் முதுகலையை நிராகரிப்பது இயல்பு என்று விளக்கினேன். “பி.ஈ ன்னு நினைச்சு அதுக்கேத்த வேலைக்குப் பரிசீலிக்க்க் கூடாதா?” என்று கேட்டார். “சேரும் போது பரவாயில்லை என்று சேருவோம்.
பிறகு ‘யு.ஜிக்கும் பி.ஜிக்கும் எப்படி ஒரே சம்பளம்?’ என்று கேட்போம்... தவறு நடக்கையில் ‘இதுல இவர் எம்.ஈ வேற!’ என்று திட்டினால் சுருக்கென இருக்கும். ஒத்துப்போகும் பிரச்சினைகள் அதிகம் வரலாம். அதனால்தான் அதிகத் தகுதியும் தகுதிக்குறைவு போலத் தான்.
வாங்கும் செருப்பு காலுக்குச் சின்னதாகவும் இருக்கக் கூடாது. அதே போலப் பெரிதாகவும் இருக்கக் கூடாது அல்லவா?
அந்த இளைஞர் ஏன் ஆராய்ச்சி, ஆசிரியர் தொழில் என யோசிக்கவில்லை? தகப்பனாரே பதில்சொன்னார். “இதுவே நான் சொன்னதால் தத்தித் தத்தி பாஸ் பண்ணியிருக்கான். சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்ல சார். அதான் கம்பனி சைட்ல ஏதாவது ட்ரை பண்றோம்!”
இந்தப் பலகீன விருப்பத்தையும் அறிவையும் வைத்துக்கொண்டு பின் ஏன் எம்.ஈ?
“எங்க குடும்பத்துல எல்லாரும் மினிமம் பி.ஜி பண்ணியிருக்காங்க. அப்புறம் இவன் மட்டும் எப்படி யு.ஜியோட நிறுத்தறது?” என்றார். குடும்பக் கவுரவம் அந்தப் பையன் வேலை வாய்ப்பைத் தின்று போட்டு விட்டது.
பல பட்டங்கள்
அதே போலச் சிலர் நிறைய டிகிரிகள் படித்துக் கொண்டே இருப்பார்கள். அஞ்சல் வழியில் எனக்குத் தெரிந்து ஒருவர் நான்கு எம்.ஏ பட்டம் வாங்கியிருக்கிறார். அத்தனையையும் பெயர் பலகையில் சேர்த்துக் கொண்டே இருப்பார். “மாமா மாமா ( MA MA MA MA) “ என்று தெருப்பசங்க அனைவரும் கிண்டலடிப்பார்கள். “ஒரு பைசாக்குப் பிரயோசனமில்லை” என்று அங்கலாய்ப்பார் மனைவி.
கல்வி சம்பாத்தியத்திற்கு மட்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்றாலும் அவரின் பட்டங்கள் அறிவின் தேடலை விட அகந்தையின் வெளிப்பாடுகளாகத் தான் என்னால் பார்க்க முடிந்தது.
பரவலாகவா, ஆழமாகவா?
பலர் நிறையப் படிப்பது எங்காவது பயன்படும் என்று ஸ்திரமாக நம்புகிறார்கள். என் அறிவுரை இதுதான்: நிறையப் பாடங்களைப் பரவலாக மேம்போக்காகப் படிப்பதை விட ஒரு விஷயத்தை ஆழமாகத் தொடர்ந்து படியுங்கள். பட்டத்தைவிடப் பாட அறிவும், செய்திறனும், அதனைச் சந்தைப்படுத்தும் முறைகளும் முக்கியம்.
எது படித்திருந்தாலும் அத்துறையில் வந்த புது விஷயங்களைத் தொடர்ந்து படித்துப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதுதான் நிஜமான அறிவு. பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் அல்ல.
பெருங்காய டப்பாவா?
நீங்கள் செய்யும் வேலை தான் உங்கள் அறிவையும் திறனையும் வெளிப்படுத்தும். நீங்கள் என்றோ வாங்கிய பட்டங்கள் முன்பு பயன்பட்டது போல வருங்காலத்தில் பயன்படாது.
முன்பெல்லாம் ஒரு முறை படித்து விட்டு ஒரு முறை வேலைக்கு சேர்ந்தால் அது காலம் முழுதும் கை கொடுக்கும். இன்று படிப்பு, வேலை, தொழில் அனைத்தும் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து கற்க வேண்டிய வித்தையாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை!
உங்கள் படிப்பு காலி பெருங்காய டப்பாவா அல்லது அட்சயப் பாத்திரமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!!
தொடர்புக்கு :
gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago