அழகிப் போட்டிகளில் நமக்குப் பெரிதாக ஈர்ப்பில்லை; கொள்கை அளவில் உடன்பாடில்லை என்றபோதும் உலக அளவிலேயே திருநங்கைகளின் அழகு சார்ந்த விஷயங்களுக்கு அப்படியொன்றும் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்துவிடவில்லை.
தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், பிரபஞ்ச அழகிப் போட்டியை நடத்தும் அமைப்புக்கு 2012-ல் தலைவராக இருந்தார். அப்போது அந்தப் போட்டியில் பங்கேற்ற ஜென்னா டலகோவா, திருநங்கை என்ற காரணத்தால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். டிரம்புக்கு எதிராக வழக்குப் போடப்பட்டு, அந்தத் தடை தற்போது விலக்கப்பட்டுவிட்டது.
அதற்குப் பின், இப்போதுதான் ஏஞ்சலா எனும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த திருநங்கை அந்தப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார். ‘நான் தலையில் சூடும் கிரீடத்தின் மூலம் ஸ்பெயினின் பெருமையையும் மாற்றுப் பாலினத்தவரின் பெருமையையும் உலகறியச் செய்வதுதான் என் லட்சியம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சொல்லியிருக்கிறார் ஏஞ்சலா.
திருநங்கைகளின் மிகப் பெரிய பலமே அவர்களின் அழகுதான். அதுவே அவர்களின் பலவீனமாகிவிடுவதும் உண்டு. புற அழகை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் எதுவுமே நிலையில்லாமல் போய்விடும். காலப்போக்கில் அதற்கான வரவேற்பும் அதனால் விளையும் உடனடிப் பலன்களும் குறைந்துவிடக்கூடும்.
ஆனால், அதே அழகை முன்னிறுத்தி நிரந்தரமான அறிவுச் செல்வத்தைக் கொடுக்கும் கல்வியைத் திருநங்கை சமூகத்துக்கு அளிக்க வேண்டும் என்னும் கொள்கை முடிவைச் சிலர் எடுக்கின்றனர் என்றால், அவர்களின் அக அழகைப் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்? அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த நமிதா அம்மு. ‘மிஸ் கூவாகம்’, ‘மிஸ் தமிழ்நாடு’, ‘மிஸ் சென்னை’ எனப் பல போட்டிகளிலும் வென்றவர் இவர். மும்பையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மிஸ் டிரான்ஸ் குயின் இந்தியா போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாகப் பங்கேற்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள்2’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதோடு பல்வேறு அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நமிதா, விளம்பர மாடலாகவும் பல முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளை அறிமுகப்படுத்தும் ராம்ப் மாடலாகவும் இருப்பவர்.
அழகிப் போட்டிகளில் பங்குபெறுவதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு, பல திருநங்கைகளின் கல்விக்கு உதவிவருகிறார். ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்ற அனுகீர்த்தி வாஸும் நமிதாவும் இதற்கெனத் தொடங்கியிருக்கும் பிரச்சாரம்தான் ‘பியூட்டி ஃபார் பர்பஸ்’. திருநங்கைகள் சமூகத்துக்குக் கல்வி அளிப்பதன்மூலம் அறிவு என்னும் அக்னியை வளர்த்துவருகின்றனர்.
மூன்றாண்டுகள் பொறியியல் படிப்பை முடித்த நமிதாவுக்கு, படிப்பைத் தொடர்வதா தன்னுடைய உணர்வு சொல்லும் வாழ்க்கையை வாழ்வதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
“அந்த நேரத்தில் நான் பெண்ணாகும் முயற்சியை எடுப்பதே எனக்குச் சரியாகப் பட்டது. அதனால் நான் படிப்பைத் தொடரவில்லை. இந்த முடிவை அப்போதைக்குப் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லையே தவிர, ஆறே மாதத்தில் என்னை ஏற்றுக்கொண்டனர். இப்போது எனக்கு 20 மகள்கள்; 20 பேத்திகள்” எனப் புன்னகைக்கிறார் நமிதா.
இவரது அரவணைப்பில் இருக்கும் திருநங்கைகள் பலரும் உயர் கல்வி பயில்கின்றனர். சிலர் உயர் கல்வி முடித்துவிட்டு வேலைக்குச் செல்கின்றனர். இவருடன் இருக்கும் சாக்ஷி, இரண்டாம் ஆண்டு பி.சி.ஏ. படிக்கிறார். தன்ஷிகா படித்து முடித்து, டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிகிதா, சூப்பர் மார்கெட் ஒன்றில் சூப்பர்வைசராக இருக்கிறார். ஒரு சிலர் பியூட்டி பார்லர்களில் பணிபுரிகின்றனர்.
‘ஊருணி’ என்னும் தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள், ஆடைகள், உணவு போன்றவற்றை அளிக்கும் சேவையையும் செய்துவருகிறார் நமிதா.
பெற்றோர்களுக்கு கவுன்சலிங்
“பெற்றோரின் அரவணைப்பு எனக்குக் கிடைத்திருப்பதால்தான் என்னால் இவ்வளவு பணிகளைச் செய்ய முடிகிறது. ஆகவே, திருநங்கைகளின் பெற்றோருக்கு அவர்களின் நிலையை எடுத்துச் சொல்லிப் புரியவைப்பேன்.
நிறையப் பெற்றோருக்குத் தங்களின் குழந்தைகள் தவறான பாதையில் சென்றுவிடுவார்களோ என்ற பயம்தான் அதிகம் இருக்கிறது. அவர்களுக்கு, ‘உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து அனுப்புகிறோம். அதற்கான வேலை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்’ என்று நம்பிக்கை தருவேன். என்னுடன் இருக்கும் திருநங்கைகளின் பெற்றோருக்கு இந்தப் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறேன்” என்கிறார் நமிதா.
முயற்சியும் பயிற்சியும்
பல முன்னணி மாடல்களை உருவாக்கியிருக்கும் ‘சகோதரன்’ அமைப்பின் சுனில் மேனன்தான், நமிதா அம்மு அழகிப் போட்டிகளில் பங்கேற்கக் காரணம். நடனத்தின் மீதும் உடற்பயிற்சியின் மீதும் தீராத காதலுடன் இருக்கும் நமிதாவின் உயரம் 6.2 அடி.
“முயற்சியும் பயிற்சியும் இருந்தால் யாராலும் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு நானே உதாரணம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் எடை 128 கிலோ. இடுப்பின் சுற்றளவு 42 அங்குலம். இந்த உருவத்த வச்சிக்கிட்டு அழகிப் போட்டிக்குப் போகப்போறேன்னு எவ்வளவு தைரியமா சொல்லுது பாரு இந்தப் பொண்ணுன்னு என்னைக் கேலி, கிண்டல் செய்யாதவங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
உணவுக் கட்டுப்பாடு, தீவிரமான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை 68 கிலோவுக்குக் கொண்டுவந்தேன். இப்போது இடுப்பின் சுற்றளவு 28 அங்குலம். அளவுகளில் அழகு இல்லை; நாம் செய்யும் சமூகப் பணிகளில்தான் நமக்கான அழகு இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். இந்தப் போட்டியில் நான் வெற்றிபெறுவதன் மூலம், அழகு குறித்த ஒரு புரிதலை சமூகத்தில் ஏற்படுத்த முடியும். பல திருநங்கைகளுக்கு அவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான கல்வியைத் தர முடியும் என நினைக்கிறேன்.
அடுத்த மாதம் மும்பையில் நடக்கவிருக்கும் போட்டியில் பங்கெடுப்பதற்கு மக்களின் ஆதரவு முக்கியமாக வேண்டும். மெட்ராஸ் இ-ஈவென்ட்ஸ், ஃபேஷன் டிசைனர்கள் சிலரின் உதவியோடு என்னுடைய நோக்கம் சரியென்று நீங்கள் நினைத்தால் எனக்கு இந்த முகநூல் பதிவில் http://pageantvote.in/pageants/458/contestants/1863 உங்களின் வாக்கைப் பதிவு செய்யுங்கள்” என்கிறார் தன் ஆறடி உயரத்திலிருந்து பாதியளவுக்குக் குனிந்து கைகூப்பியபடி.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago