நாடாளுமன்றத் தேர்தல் 2019: இந்தியாவின் பிரதமர்கள்

By கோபால்

17-வது மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றிருப்பதன் மூலம் அக்கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். மே 30 அன்று பிரதமரும் அமைச்சரவையைச் சேர்ந்த மற்ற 57 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

தகுதிகளும் அதிகாரங்களும்

இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் என்பவர் அரசின் தலைவராகக் கருதப்படுகிறார். இவர் மற்ற அமைச்சர்களின் தலைவர் என்பதைக் குறிக்கும் வகையிலேயே பிரதம மந்திரி என்று அழைக்கப்படுகிறார். மக்களவையில் பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது கூட்டணியின் வேட்பாளர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக இருக்கலாம், கட்சிகளால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கலாம்.

அவர் இந்தியக் குடிமகனாகவும் ஆளும் கட்சி/கூட்டணிக் கட்சிகள் ஏதேனும் ஒன்றின் உறுப்பினராகவும் இருக்க வேண்டும். மக்களவை உறுப்பினர் என்றால் 25 வயதை நிறைவு செய்தவராகவும் மாநிலங்களவை உறுப்பினர் என்றால் 30 வயதை நிறைவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாதவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் பதவியேற்று ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராகிவிட வேண்டும்.

பிரதமர்தான் ஆளும் கட்சி/கூட்டணியைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார். பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

எப்போது வேண்டுமானாலும் அமைச்சர்களை நீக்கவும் புதிய அமைச்சர்களைச் சேர்க்கவும் அமைச்சரவையை மாற்றி அமைக்கவும் பிரதமருக்கு அதிகாரம் உண்டு. பிரதமரே எவ்வளவு அமைச்சகங்களை வேண்டுமானாலும் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ளலாம். அதேபோல் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளுக்கு அமைச்சராக இருக்கலாம்.

ஒருமுறைக்கு மேல்

இதுவரை 18 பேர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஜவாஹர்லால் நேரு, குல்சாரிலால் நந்தா, இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகியோர் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முறை பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்கள்.

நீண்டகாலப் பிரதமர்கள்

இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் நேரு. 1947 ஆகஸ்ட் 15 அன்று நாடு விடுதலை பெற்றவுடன் பிரதமராக நியமிக்கப்பட்டார். 1952, 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதால் அவரே பிரதமரானார். மொத்தம் 17 ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்திருக்கிறார். 1964 மே 27 அன்று இறக்கும்வரை அவர் பிரதமராக நீடித்தார்.

அவருக்கு அடுத்ததாக இந்திரா காந்தி மூன்று முறை பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். 1966 ஜனவரி 24 அன்று பிரதமராக நியமிக்கப்பட்டவர் 1971 தேர்தலில் வெற்றிபெற்று இடையில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்து 1977 வரை பிரதமராக நீடித்தார். 1980 தேர்தலில் மீண்டும் வென்று 1984-ல் இறக்கும்வரை பிரதமராக இருந்தார். இவர் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்திருக்கிறார்.

இவர்களைத் தவிர மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராகி 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தார். மோடி ஐந்தாண்டு காலம் பதவி வகித்து தற்போது தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தைத் தொடங்கியிருக்கிறார்.

குறுகிய காலப் பிரதமர்கள்

பிரதமர் இல்லாமல் மக்களவை இயங்கக் கூடாது. எனவே, பிரதமர் இறந்துவிட்டாலோ வேறு காரணங்களால் பதவியில் நீடிக்க முடியாமல் போனாலோ, உடனடியாக வேறொருவர் பிரதமர் பதவி ஏற்க வேண்டும். அல்லது மக்களவை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நேரு இறந்தவுடன் குல்சாரி லால் நந்தா இடைக்காலப் பிரதமரானார்.

பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாஸ்திரி இறந்தவுடன் மீண்டும் இடைக்காலப் பிரதமரானார் நந்தா. அதன்பின் இந்திரா காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறையும் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு மட்டுமே நந்தா பிரதமர் பதவி வகித்தார்.

சரண் சிங், வி.பி.சிங், சந்திரசேகர், ஹெச்.டி.தேவ கெளடா, ஐ.கே.குஜரால் ஆகியோரும் ஓர் ஆண்டுக்குக் குறைவான காலமே பிரதமராக இருந்துள்ளனர். மொரார்ஜி தேசாய் இரண்டு ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

ராஜீவ் காந்தி நரசிம்மராவ் இருவரும் பிரதமராக ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவுசெய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்