அந்த நாள் 35: அரசவை பகட்டும் அறிவியல் பின்தங்கலும்

By ஆதி வள்ளியப்பன்

“என்ன குழலி, உன்னைப் பிடிக்கவே முடியல?”

“ஆமா, பள்ளிக்கூடமெல்லாம் நேத்துத் தொடங்கிடுச்சு இல்லையா. என்னோட ஆராய்ச்சிப் பணிகளோட சில பள்ளிகள்ல சிறப்பு வகுப்பும் எடுக்கிறேனே, அதுக்கான ஏற்பாடு நடந்துக்கிட்டிருக்கு. அதனாலதான் உன்னால என்னைப் பிடிக்க முடியால செழியன்.”

“ஓ, அருமை! இதைப் பத்தி எனக்கு முன்னாடி சொல்லவேயில்லையே.”

“உனக்கு மட்டும் வரலாற்றைக் கத்துத் தந்தா போதுமா, எதிர்காலத் தலைமுறைக்கும் அறிவு கடத்தப்படணுமில்லையா.”

“நல்ல விஷயம்தான், ஆமா, முகலாயர் ஆட்சி காலத்துலயும் உன்னை மாதிரியே ஆர்வமானவங்க பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தினாங்களா?”

“அக்பரைத் தவிர்த்த மற்ற முகலாய அரசர்கள் கல்வித் துறை மேல பெரிய ஆர்வம் காட்டலை. இதன் காரணமா காலம் கடந்த பாடத்திட்டத்தையே சில நூற்றாண்டுகளுக்குக் குழந்தைகள் படிச்சிக்கிட்டிருந்தாங்க. மத குருமார்கள் நடத்திய பள்ளிகள்ல மத நூல்களை மனனம் செய்யுறதே படிப்பா இருந்துச்சு.

மசூதிகளுடன் இணைந்த இஸ்லாமியப் பள்ளிகளுக்கு ‘மக்தப்'னு பேரு. இந்துக் கோயில்கள்ல இயங்கிய பள்ளிகளுக்கு ‘டோல்'னு பேரு. அதேபோல இஸ்லாமியர்களின் உயர்கல்விக்கு மதராசாக்களும், இந்துக்களின் உயர் கல்விக்குக் குருகுலங்களும் இருந்துச்சு.”

“என்னவெல்லாம் படிச்சாங்க?”

“அன்னைக்கு மதராசாக்கள் அதிகமாவும் குருகுலங்கள் குறைவாவும் இருந்துச்சு. அங்க கணிதம், இலக்கியம், மொழி, சட்டம், மதம், தத்துவச் சிந்தனை, தர்க்கம், வானியல் போன்ற பாடங்களைச் சொல்லித் தந்தாங்க.”

“எல்லாருக்கும் படிக்க வாய்ப்பு கிடைச்சதா?”

“இல்ல, ஆண் குழந்தைங்க மட்டுமே பள்ளிக்குப் போனாங்க. பணக்காரக் குடும்பங்கள்ல இருந்த பெண்கள் வீட்டிலேயே படிச்சாங்க. பெரும்பாலான குழந்தைங்க படிக்கலை. அந்தக் காலத்துல பிராமண ஆசிரியர்கள் தாழ்ந்த குலத்தினருக்குக் கற்பிக்க முன்வரலை. பெரும்பாலானவங்க படிக்காததால, கல்வித் துறைல நாடு பின்தங்கித்தான் இருந்துச்சு.”

“இது முக்கியமான பிரச்சினையாச்சே.”

“கல்வில பின்தங்கினதுக்கு இது முதன்மைக் காரணம். அப்புறம் பெரும்பாலான பாடங்கள் அன்னைக்கு வழக்குமொழியா இல்லாத பாரசீகம், சம்ஸ்கிருதத்தில் கற்பிக்கப்பட்டுச்சு. அதனால, படிக்கிறது சாதாரண மக்கள்ட்ட பெரிய ஆர்வத்தை உருவாக்கலை. அரசு வேலைல சேரணும்னு நினைச்சவங்க மட்டுமே அந்த மொழிகள்ல படிச்சாங்க.”

“கல்வி வளர்ச்சில முகலாய காலம் பின்தங்கித்தான் இருந்திருக்கு.”

“அதே காலத்துல ஐரோப்பாவுல நவீன அச்சிடும் முறை கண்டறியப்பட்டிருந்துச்சு. அதன் காரணமா பெரிய அளவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அது பரவலா கிடைக்கும் நிலையும் உருவாச்சு. கல்வித் துறையும் இதனால பெருசா வளர்ந்துச்சு. பின்னாடி ஆங்கிலேயர் காலத்துலதான் புத்தக அச்சிடுதல் இந்தியாவுல பரவலாச்சு.”

“அப்ப, முகலாயர்கள் புதுத் தொழில்நுட்பங்கள்ல பெருசா ஆர்வம் காட்டலைன்னு சொல்றியா?”

 “தொழில்நுட்பங்கள்ல மட்டுமில்ல, அறிவியலிலும் முகலாயர்கள் பெருசா கவனம் செலுத்தாமத்தான் இருந்திருக்காங்க. ஆயுர்வேத, யுனானிப் பள்ளிகள் மூலமாக மருத்துவம் ஓரளவுக்குக் கற்றுத் தரப்பட்டுச்சு. ஆனா, அதுவும் மேலை மருத்துவம்போல முறைசார்ந்து கற்பிக்கப்படலை.

அறிவியல் ஆய்வகங்கள், அறிவியல் ஆராய்ச்சி முறை, தொழிற்சாலைகள் போன்ற எதுவுமே இந்தியாவுல அன்னைக்கு இல்லை. ஒருபுறம் முகலாய அரசவை பகட்டா இருந்தாலும், கல்வி-அறிவியல் முன்னேற்றத்துல இந்தியா இருண்ட காலத்திலேயே இருந்துச்சு.”

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

ஜந்தர் மந்தரைக் கட்டிய மன்னர்

டெல்லியில் மக்கள் போராட்டங்கள் அதிகம் நடைபெறும் இடமாக உள்ள ஜந்தர் மந்தர், உண்மையில் ஓர் வானியல் ஆய்வகம். முகலாய ஆட்சியில் அறிவியல் பெரிய வளர்ச்சி பெற்றிருக்காத அதேநேரம், ஜெய்ப்பூர் மன்னர் சவாய் ஜெய் சிங் வானியல் அறிஞராகத் திகழ்ந்தார்.

டெல்லி ஜந்தர் மந்தர், ஜெய்ப்பூர், வாராணசி, உஜ்ஜெய்ன், மதுரா ஆகிய பகுதிகளில் உள்ள வானியல் ஆய்வகங்கள் அவர் நிறுவியவைதான். அவருடைய ஆய்வுகளில் கிடைத்த கணக்கீடுகள் துல்லியமாக இருந்தன. வானியல் அறிவுக்காக சவாய் ஜெய் சிங்கை ஔரங்கசீப் பாராட்டியிருக்கிறார்.

அரசவை-பகட்டும்-அறிவியல்-பின்தங்கலும்டெல்லி ஜந்தர் மந்தர் 

உலகைப் பற்றிக் கவலையில்லை

பிரிட்டன் அரசவைத் தூதர் சர் தாமஸ் ரோ, முகலாய மன்னர் ஜஹாங்கிரைச் சந்தித்திருக்கிறார். அப்போது உலக நவீன வரைபடத்தை ஜஹாங்கிருக்கு ரோ பரிசளித்தாராம்.

ஆனால், உலகின் மற்ற பகுதிகளைக் குறித்துத் தனக்குக் கவலையில்லை என்று ஜஹாங்கிர் அப்போது கூறியதாக ஒரு தகவல் உலவுகிறது. ஆனால், இது முழு உண்மையா தெரியவில்லை.

 

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்