உலகக் கோப்பை கிரிக்கெட்டின் கதை!

By டி. கார்த்திக்

பன்னிரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்தாவது உலகக் கோப்பைத் தொடர் இது. இதே இங்கிலாந்தில் இருந்துதான் உலகக் கோப்பையின் வரலாறும் தொடங்கியது.

டெஸ்ட் போட்டிதான் கிரிக்கெட் என்ற காலம் ஒன்று இருந்தது. 1960-களுக்குப் பிறகுதான் கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகள் நுழைந்தன. 6 நாட்களுக்கு (அப்போதெல்லாம் ஒரு நாள் இடைவேளையும் வரும்) போட்டி நடைபெற்றும் முடிவு தெரியாத டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்மீது சலிப்பு உண்டான காலம் அது. அப்போதுதான் இங்கிலாந்தில் கவுண்டி கிளப்புகளில் ஒரே நாளில் போட்டி முடிவு தெரியும் வகையிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

1963-ம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய ‘ஃபிரண்ட்ஸ் புராவிடன்ட்’ கோப்பைக்கான கிரிக்கெட் இந்த வகையிலான போட்டியைப் பிரபலப்படுத்தியது. இன்று ஐபிஎல் போட்டிகளைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதைப் போல இப்போட்டிகளைக் காண இங்கிலாந்து ரசிகர்களும் ஆர்வம் காட்டினார்கள். இதனால், ஒரே நாளில் முடிவு தெரியும் வகையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு இங்கிலாந்தில் ஆர்வம் அதிகரித்தது.

முதல் ஒரு நாள் போட்டி

1960-களிலேயே இங்கிலாந்தில் இந்த வகையான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கினாலும், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 1970-களுக்குப் பிறகுதான் முதன் முதலில் நடைபெற்றது.

1970-71-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 5 வரை மெல்போர்னில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படவில்லை.

கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக ஜனவரி 5 அன்று 40 ஓவர்களைக் கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தான் சர்வதேச முதல் ஒரு நாள் போட்டி என்று அழைக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு மவுசு கூடியது. கிரிக்கெட் விளையாடப்படும் நாடுகளில் ஒரு நாள் போட்டிகள் விளையாடப்பட்டன.

முதல் உலகக் கோப்பை

இதை இன்னும் பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்தது. அதற்காக ஐசிசி கையில் எடுத்த ஆயுதம்தான் உலகக் கோப்பை கிரிக்கெட். அப்போது இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என ஆறு அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டி விளையாடும் அந்தஸ்தைப் பெற்றிருந்தன.

இந்த ஆறு நாடுகளையும், ஐசிசி அங்கீகாரம் பெறாத அணிகளையும் கொண்டு உலகக் கோப்பை போட்டி நடத்த முடிவானது. அந்த ஆறு அணிகளைத் தவிர்த்து, டெஸ்ட் அந்தஸ்து பெறாத இலங்கை ஓர் அணியாக விளையாட வந்தது.

கிரிக்கெட்டின் வளர்ச்சி

ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் அணி எதுவும் இல்லாமல் இருந்தது. நிறவெறிக் கொள்கை காரணமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டதால் தென் ஆப்பிரிக்காவால் பங்கேற்க முடியவில்லை. இறுதியில் கிழக்கு ஆப்பிரிக்கா என்ற ஓர் அணி விளையாட வந்தது.

கிழக்கு ஆப்பிரிக்கா என்பது கென்யா, தான்சானியா, உகாண்டா, ஜாம்பியா ஆகிய நாடுகளின் கிளப் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட அணி. இப்படி எட்டு அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுதான் 1975-ம் ஆண்டில் முதல் உலகக் கோப்பைக்குத் தொடக்க உரை எழுதப்பட்டது.

முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்புவரை 18 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டிருந்தன. இந்தியா ஒரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தது.

ஆனாலும், கிரிக்கெட்டைப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க உலகக் கோப்பை கிரிக்கெட்டே வாய்ப்பு என்று ஐசிசி நினைத்தது. அது நினைத்தபடியே கிரிக்கெட்டும் வளர்ந்தது, உலகக் கோப்பையால் கிரிக்கெட்டும் பிரபலமானது.

மெருகேறிய தொடர்

1975 முதல் 1983-ம் ஆண்டுவரை முதல் மூன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் இங்கிலாந்திலேயே நடைபெற்றன. அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டுமே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்த வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. இங்கிலாந்தில் பகல் நேரம் அதிகம் என்பதால் 60 ஓவர் போட்டிகளைச் சுலபமாக நடத்த முடிந்தது.

1987-ம் ஆண்டுதான் முதல் முறையாக உலகக் கோப்பை நடத்தும் இடம் இங்கிலாந்திலிருந்து இந்தியா - பாகிஸ்தானுக்கு மாறியது. இந்தியாதான் அதற்கான பெரும் முயற்சியை எடுத்தது. இங்கு பகல் நேரம் குறைவு என்பதால் போட்டி 50 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன.

அன்று உலகக் கோப்பையில் விளையாட அணிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இன்றோ உலகக் கோப்பையில் பங்கேற்க நாடுகள் போட்டி போடுகின்றன. புதிய நாடுகள், புதிய விதிமுறைகள், புதிய தொழில்நுட்பங்கள் என உலகக் கோப்பையின் முகம் மட்டுமல்ல, கிரிக்கெட்டின் வடிவமும் மாறிக்கொண்டே வருகிறது. அதற்கெல்லாம் முன்னுரை எழுதியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்தான்!

இந்தியா - இரு கேப்டன்கள்உலகக்-கோப்பை-கிரிக்கெட்சீனிவாச வெங்கட்ராகவன்

1975-ல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாச வெங்கட் ராகவன். பின்னாளில் கிரிக்கெட் அம்பயராக அறியப்பட்டவர் இவர்.

இவர் தலைமையில்தான் 1979-ம் ஆண்டு உலகக் கோப்பையையும் இந்திய அணி எதிர்கொண்டது. இரு உலகக் கோப்பையிலும் 6 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து கிழக்கு ஆப்பிரிக்காவை மட்டும் இவர் தலைமையிலான அணி வென்றது.

1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. உலகக் கோப்பையை வென்ற இளம் கேப்டன் கபில் தேவ்தான்.

உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியபோது கபிலின் வயது 24 தான். இன்றுவரை இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. 2011-ல் கோப்பை வென்ற டோனியின் வயது 29.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்