முகங்கள்: 51 வயதில் மாரத்தான்

By பவானி பழனிராஜ்

மாரத்தான் ஓட்டக்காரர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், கராத்தே வீராங்கனை எனப் பல முகம் கொண்டவர் சாரதா ராம். சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த இவர், ஒரு காலத்தில் வாழ்க்கையைப் பார்த்துப் பயந்தவர்; மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டவர். ஆனால், இன்று அனைத்தையும் தன் காலின் கீழே போட்டுத் தேய்த்துவிட்டு முன்னேறியபடி இருக்கிறார்.

கல்லூரியில் படித்தபோதே இவருக்கு அஞ்சல் துறையில் வேலை கிடைத்திருக்கிறது. உயர்கல்வி படிக்க ஆசை இருந்தும், குடும்பச் சூழலால் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். 22 வயதில் திருமணம். வேலைக்குப் போகாத கணவர்.  நின்றால், நடந்தால் என எதற்கெடுத்தாலும் சந்தேகம். ஒரு மகனுக்குத் தாயான பிறகும் எதுவுமே மாறவில்லை. தைராய்டு, ரத்த அழுத்தம் போன்றவையும் சேர்ந்து உடல் எடை கூடிவிட்டது. தொடர் சண்டைகளால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேற முடியாத நிலையில் தற்கொலை முடிவைக் கையிலெடுத்தார் சாரதா.

விபரீத முடிவு

“அப்போ 40 வயதைக் கடந்து இருந்தேன். திரும்பிப் பார்த்தபோது வாழ்க்கையில் எந்தச் சுவாரசியமும் இல்லை. வேலை, குடும்பம் என்றே வாழ்ந்திருக்கிறேன். மகன் மட்டுமே என் உலகம். அவனும் டீன் ஏஜ் வயதில் அந்த வயதுக்கே உரிய துடுக்குத்தனத்தோடு என்னைக் கேள்விகள் கேட்டான். மதிப்பெண் குறைவாக எடுத்ததால் நல்ல படிப்பில் அவன் சேர்க்க வேண்டும் என்ற அப்போதைய கனவும் தகர்ந்தது. ஒருநாளில் நான்கு தூக்க மாத்திரைகள் போடும் அளவுக்கு மன அழுத்தத்துக்கு ஆளானேன்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் என்னிடம் இருந்த எல்லா மாத்திரைகளையும் போட்டுக்கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பினேன். அரை நாள் வேலை முடிந்ததும் மயக்கம் வந்தது. நடக்க முடியாமல் பெண்கள் அறையில் ரெஸ்ட் எடுக்கச் சென்றேன். அப்போது படுத்தவள் எழவே இல்லை. என் அக்காவுக்கு எப்படியோ தகவல் தெரிவித்து மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

கணவர் குற்றவுணர்வால் தாமதமாகவே வந்தார். இரண்டு நாள் கழித்து மன நல மருத்துவரை வரவழைத்தார்கள்.  யாரைப் பார்த்தாலும் பயந்து நடுங்கினேன். அவர் மட்டுமே என் குரலைக் காதுகொடுத்துக் கேட்டார். கணவரையும் மகனையும் அழைத்துப் பேசினார். மகன் என் பிரச்சினையைப் புரிந்துகொண்டான். நன்றாகப் படித்து மூன்றாமாண்டு முடித்தபோது கையில் வேலையுடன் வெளியே வந்தான்.

இந்த அழுத்தத்திலிருந்து மீண்டு வர எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆயின” என்று சொல்லும் சாரதா, தான் மருத்துவமனைக்குச்  சென்றதும் நல்லதுதான் என்கிறார். அவருடன் மனநல ஆலோசனை பெற வந்த மற்ற நோயாளிகளுடன் நட்பாகி, வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என அனைவரும் உறுதிபூண்டு அதன்படி செய்தும் இருக்கின்றனர்.

மீட்டெடுத்த மகன் சொல்

அதன்பிறகு தன்னுடைய மன அழுத்தத்தைப் போக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். பொருளாதாரம் அவரை மீண்டும் முடக்கிவிட, மகனின் ஒற்றைச் சொல் அவரை மீட்டெடுத்தது. “அப்போது என் மகன் சிக்ஸ் பேக் வைத்திருந்தான். ஆரோக்கியம் குறித்துச் சொல்லிக்கொண்டே இருப்பான். ஒருநாள் ஜாகிங் போகும்போது என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றான். என்னால் ஓடவே முடியவில்லை. மனத்தைத் தேற்றினான்.

பீச்சில் ஓடிக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்து நானும் ஒவ்வொரு நாளும் 100 மீட்டர், 150 மீட்டர் என முன்னேறி நான்கு கி.மீ. தொலைவுக்கு ஓட ஆரம்பித்தேன். அவன் வேலைக்குப் போகும்போது, “உனக்கு மன அழுத்தம் வரக் காரணமே உடல் ஆரோக்கியமாக இல்லாததுதான். நீ நல்லா ஓடுற. இதை விட்டுடாதே. மாரத்தான் போட்டியில் கலந்துக்கோ” எனச் சொல்லிச் சென்றான்.

அவன் சொன்ன வார்த்தைகள் பசுமரத்தாணியாகப் பதிந்துவிட்டன. தொடர்ந்து பயிற்சிசெய்து வந்தேன். கராத்தேவும் கற்றுக்கொண்டேன்” என்று சொல்லும் சாரதா, முதன்முதலில் 46 வயதில் புற்றுநோய் விழிப்புணர்வு மராத்தானில் பங்கேற்று ஐந்து கி.மீ. தொலைவுக்கு ஓடினார். அதன் பிறகு ஓட்டம் அவருக்கு அருமருந்தாக மாறிவிட்டது.

குறுக்கிட்ட விபத்து

சென்னையில் நடந்த மாரத்தான்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். 10 கி.மீ தொலைவுக்கு அசராமல் ஓடினார். நன்றாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் எதிர்பாராத விபத்து குறுக்கிட்டது. இரண்டு ஆண்டுக்கு முன் ஒரு ஆட்டோ இவர் மீது மோதிவிட, காலில் எலும்பு முறிவு. கால் சுண்டுவிரல் அறுந்து தொங்கியது.

“முதலில் சென்ற மருத்துவமனயில் அந்த விரல் செயலிழந்து விட்டது என்று சொன்னார்கள். வலி ஒருபுறம் இருக்க விரலை எடுத்துவிட்டால் ஓடவே முடியாதோ என்ற கவலையும் ஆட்டிப்படைத்தது. முறிந்த காலுக்கு முட்டிவரை பேண்டேஜ் போட்டு, ஒரு கால் ஊன்றி நடக்கக் கம்பையும் கொடுத்து அனுப்பினார்கள்.

நாலு அடிகூட நடக்க முடியவில்லை. என் தோழிகளும் மகனும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டனர். எனினும், விரல் கருத்துவிட்டதால் நீக்க வேண்டியதாகிவிட்டது. மூன்று மாதங்களுக்குப் பின் ஓடலாம் என்ற போதுதான் எனக்கு உயிரே வந்தது. ஆனால், அதற்குள் உடல் எடை கூடிவிட்டது.

மருத்துவர் ஆலோசனையுடன் மீண்டும் உடல் எடையைக் குறைத்தேன்” என்று சொல்லும் சாரதா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் மாரத்தானில் கலந்துகொண்டார். அதன்பின் ஆரோவில்லில் நடந்த 21 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்றார்.

சமீபத்தில் நடந்த 25 கி.மீ. மாரத்தானை மூன்று மணி நேரத்தில் நிறைவுசெய்தார். “என் வயதுக்கு இது அதிகம் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தைக் குறைக்க இன்னும் பயிற்சி செய்ய வேண்டும். ஓட்டம் மூலம்தான் என்னை ஒவ்வொரு முறையும் மீட்டெடுத்து வருகிறேன்.

50 வயதில் ஓடுவதை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை வயது என்பது வெறும் எண்தான்” என்பவர் தற்போது வரை 25 மாரத்தான்களில் ஓடி, மெடல்களைக் குவித்து வைத்திருக்கிறார். ‘மனிதி’ அமைப்பில் இருந்துகொண்டே மகளிர் குழுக்களுக்கு உதவிவருகிறார்.

ஹரியாணா சென்றபோது மாரத்தான் ஓடிக்கொண்டிருக்கும் 102 வயது பாட்டி மன்கவுரைப் பார்த்தது ஊக்கமளித்ததாகக் கூறுகிறார் சாரதா. விரைவில் நன்றாகப் பயிற்சிபெற்று முழு மாரத்தான் தூரமான 42.195 கி.மீ. தொலைவை ஓடிக் கடக்க வேண்டும் என்கிறார். “ஜூலையில் மீண்டும் மாரத்தான் ஓட வேண்டும். அதற்கான பயிற்சியில் இருக்கிறேன்” என விடைபெறுகிறார் சாரதா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE