‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! ’என்ற சினிமா வசனம் நம்மிடையே மிகப் பிரபலம். அதை ஏன் அவ்வளவு ரசிக்கிறோம்? நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவ்வளவு அரசியல் உள்ளதுதான் காரணம் !
அலுவலக அரசியல்
புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் அலுவலக அரசியல் பற்றி அறிதல் வேண்டும் என்பது என் வாதம். கல்லூரியில் கடைசி வருட மாணவர்களுக்கு நடக்கும் “காலேஜ் டு கார்பரேட்” பயிற்சியோ, கேம்பஸ் முடிந்து நிறுவனத்தை அறிமுகப்படுத்தும் பயிற்சியோ எதுவாக இருந்தாலும் அலுவலக அரசியல் பற்றிப் பேசுவது எனது வழக்கம்.
காலேஜ் வாழ்க்கையை நாம் காதல் மாதிரி எடுத்துக் கொண்டால் வேலை வாழ்க்கை கல்யாணத்தைப் போல. காதலிக்கும்போது தெரியாத பல பக்கங்களை நாம் கல்யாணத்துக்குப் பிறகுதான் புரட்ட வேண்டி வரும். அதே போலத்தான் வேலை செய்யும் இடத்திலும்.
படிக்கும்போது பணமும் பதவியும் மட்டும் கண்ணுக்குத் தெரியும். வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் உங்களுடன் பணியாற்றுபவர்கள் உங்கள் பணி வாழ்க்கையைப் பாதிப்பதை உணர்வீர்கள். ஆனால் அந்தத் தீவிரம் புரிவதற்குள் நிறைய தவறான முடிவுகள் எடுத்திருப் பீர்கள்.
வெள்ளந்தியாக…
“ உன் படிப்புக்கு இன்னும் நல்ல கம்பெனியா சேந்திருக்கலாமே?” என்று தூண்டில் போடுபவரைக் கண்டு கொள்ளத்தெரியாது. நேரில் ஒன்றைச் சொல்லிவிட்டு அதே சங்கதியை மின்னஞ்சலில் வேறு மாதிரி எழுதுபவரின் உள் நோக்கம் தெரியாது. “என்ன உதவி வேண்டுமானாலும் கேள்” என்று சொல்லும் வேறு துறை ஆசாமியிடம் என்ன கேட்கலாம், என்ன கேட்கக்கூடாது என்று தெரியாது. “மனசில் இருப்பதைத் தைரியமா சொல்லுங்க... என்ன நினைக்கிறீங்க?” என்று மீட்டிங்கில் மேலதிகாரி சொன்னால் நம்புவதா இல்லையா என்று தெரியாது.
என்னிடம் ஆலோசனைக்கு வரும் பலர் சொல்லிக் கேட்கும் கதைகள் இவை. “எங்க ஊர்க்காரர்னு எல்லாப் பிரச்சினையையும் அவர் கிட்ட சொன்னேன். அவர் மேலிடத்துல அப்படியே போட்டுக்கொடுத்து ஆப்பு வாங்க வச்சிட்டார்!” என்று என்னிடம் வெள்ளந்தியாகச் சொன்ன மதுரைக்காரர் முகம் அப்படியே என் மனதில் உள்ளது.
நல்லவங்களா…
பாஸிவ் அக்ரெசிவ் டைப் ஆசாமிகளைப் பற்றி எழுதியபோது, தன் ஆபீஸ் சகாக்களைப் பற்றி எல்லாம் கூறிவிட்டு, “அவங்க நல்லவங்களா கெட்டவங்களா?” என்று அப்பாவியாகக் கேட்ட மாணவர்களுக்கு என்ன பதில் சொல்ல?
“பாஸ் சரக்கடிக்கக் கூப்பிடுறார். நாங்க போலாமா?” என்று என்னை லார்ட் லபக்கு தாஸாக பாவித்து இரவில் அழைத்த இளைஞர்களைப் பற்றி என்ன சொல்ல?
ஹூம்...பாசக்கார பயலுக!!
சூனியம்
பெரிய நிறுவனங்களில் இங்கிதமாக எப்படி நடந்துகொள்வது என்பதற்கான (கார்ப்பரேட் எடிகெட்) பாடம் நடத்தும் பயிற்சியாளர் ஒருவர் “ஒரு பெண் ‘ஹவ் ஆர் யூ’ என்று கேட்டாலே ‘காதல்’ என்று முடிவு கட்டும் இளைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள்” என்கிறார்.
“எம்.டியோட செக்ரடெரியின் பவர் புரியாமல் அவளோட கடலை போடறேன் பேர்வழின்னு அவனே சொந்தச் செலவில் சூனியம் வச்சிகிட்டான் சார்!” என்று புதிதாக வேலைக்குச் சேர்ந்த நண்பனின் சோகக்கதை சொன்னான் ஒரு இளைஞன்.
பணியிடப் பிரச்சினைகளைப் பற்றியும், அலுவலக அரசியல் பற்றிய விழிப்புணர்வையும், வேலைக்குச் சேரும் முன்னரே புகட்டுதல் நல்லது.
எங்கெங்கும் அரசியல்
அதிகாரக் குவிப்பு உள்ள எல்லா அமைப்புகளிலும் அரசியல் இருக்கும். கட்சிகள், மடங்கள், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள், குடும்பங்கள், அரசாங்கங்கள் என எல்லா மனிதக் கூட்டங்களிலும் அரசியல் உண்டு. இதை அறிந்து கொள்வது சாலை விதிகளை அறிவது போல அவசியம்.
எல்லா மனித மனமும் விருப்பு வெறுப்பு சார்ந்துதான் முதலில் யோசிக்கும். எந்த நிகழ்வும் முழுக்கத் முழுக்க தர்க்கரீதியாக நடப்பதில்லை. அப்படி நடந்தால் உலகில் இன்று நாம் காணும் பிரச்சினைகளில் 99% இல்லாமல் போய்விடும். உணர்வு சார்ந்த நிலையில் உறவுகளில் ஏற்படும் மாற்றங்களும் முடிவுகளும் அமைப்பு விதிகள் சார்ந்து இருக்க அவசியமில்லை.
தேவை இல்லாத நிஜம்
அலுவலக அரசியலைக் கற்றுக்கொள்ள முதலில் என்ன செய்ய வேண்டும்? மக்களைப் படிக்க வேண்டும். பேசுவதை விட அதிகமாகக் கேட்க வேண்டும். உணர்வுகளைப் பகிர்வதற்கு முன் எதிராளியின் உணர்வுகளை, நிலைபாடுகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பொய் சொல்லாவிட்டாலும் தேவை இல்லாத நிஜம் பேச வேண்டாம். நியாயத்தின் பக்கம் நிற்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நியாயத்தின் எதிர் தரப்பில் உள்ளவர்கள் யார் எனக் கண்டு கொள்வது.
யார் தொழில் நிமித்தத் தொடர்பு, யார் தனிப்பட்ட உறவு என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். சட்டம் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருக்கும்வரை அதிகாரி மையத்துடன் சீராக உறவை வைத்துக் கொள்ளல் உங்கள் வேலை சார்ந்த குறிக்கோள்களுக்கு உதவும்.
வம்பு வேண்டாம்
ஆளுக்கும் சமயச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப உங்கள் செயல்பாடுகளை மாற்ற அவசியமில்லை. அது உங்கள் நம்பகத்தன்மையைப் பாதிக்கும். மாற்றுக் கருத்துகளைக் கண்ணியமாக, சரியான வடிவத்தில், சரியான தருணத்தில் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
மற்றுமோர் நிரூபிக்கப்பட்ட தங்க விதி: வம்பு பேச்சு வேண்டாம்! அது முழு நேர நிறுவன அரசியல்வாதிகளின் கருவி. அதில் சிக்கி நீங்கள் சின்னாபின்னமாகாதீர்கள். பிரச்சினைக்குரியவர்களை விட்டு விலகத் தேவையில்லை. ஆனால் தெளிவான பேச்சும், தேர்ந்தெடுத்த மவுனமும் கொண்டு அவர்களைக் கையாளுங்கள்.
அரசியல் தெரியணும்…
“இந்த ஆபீஸ் ஒரே பாலிடிக்ஸ் சார். வேலை செய்ய முடியலை” என்று வேலை மாற நினைப்பவர்களுக்கு என் விண்ணப்பம் இதுதான். அரசியல் இல்லாத இடம் இல்லை. தூரப் பார்வைக்குத் தெரியாத அரசியல் உள்ளே போகையில் பூதமாகத் தெரியும்.
கடவுள் படம் இருந்த திசையில் கால்களை நீட்டிப் படுத்ததற்காகக் கடிந்து கொள்ளப்பட்டார் கபீர். ‘எந்தத் திசையில் கடவுள் இல்லையோ அங்கு என் கால்களை நீயே தூக்கிப் போடு” என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கப்போனார் கபீர்தாஸ்.
அரசியலும் கடவுள் போலத்தான்! இல்லாத இடம் இல்லை. பணியிட அரசியலைக் கையாள்வதும் கரையேறுவதும் வேலைத்திறன் என்றால் நம்புவீர்களா? இதை மேலை நாட்டு நிர்வாகப் பள்ளிகள் ஆய்வு செய்து பாடமாய் நடத்துகின்றன. நாம் இன்னமும் இலை மறைவு காயாகத் தான் அலுவல அரசியலைப் பார்க்கிறோம்.
அரசியல் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அரசியல் தெரிய வேண்டியது அவசியம்!
தொடர்புக்கு : gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago