நோபல் பரிசை நோக்கி முதல் தமிழ்ப் பெண்

By த.நீதிராஜன்

தேனீக்கள் ஒரு பக்கம் பிறந்து வளர்ந்து கொண்டும் இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான மலர்களில் இருந்து தேனைக் கொண்டுவந்து சேகரித்து வைத்து இருக்கும் தேனடையைப் பார்த்து இருக்கிறீர்களா? அதேபோல பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிறந்து வளர்ந்து இறக்கும் நிகழ்வு நடைபெறுகிற காலக்ஸிக்கு விண்மீன் பேரடை என பெயர் வைத்துள்ளார்கள். தமிழ் தேன்தான்.

கருந்துளை

நமது சூரியக்குடும்பம் பிறந்து வளர்ந்த தொட்டில் பால்வெளி மண்டலம் எனும் விண்மீன் பேரடை. சூரியனைச் சுற்றி கோள்கள் சுழல்கின்றன. சூரியன் தன் கோள்களையும் இழுத்துக்கொண்டுப் பால்வெளி மண்டலத்தைச் சுற்றுகிறது.

சூரியனைப் போன்ற எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட பால்வெளி மண்டலம் தனது மையத்தில் உள்ளக் கருந் துளையை சுற்றுகிறது.

அது என்ன கருந்துளை?பொதுவாக ஒரு விண்மீனின் எரிசக்தி முழுவதும் ஒரு கட்டத்தில் தீர்கிறது. அப்போது பேரளவு ஈர்ப்பாற்றலில் அது அடர்த்தியாகிறது.தனது ஈர்ப்பால் தனக்குள்ளேயே நொறுங்குகிறது.பிறகு வெடித்துச் சிதறுகிறது. அதன்பிறகு கருந்துளையாக மாறுகிறது.கருந்துளையாக மாறாத விண்மீண்களும் இருக்கின்றன.

விண்மீன் விழுங்கி

பூமியின் ஈர்ப்பின் வலுவில் இருந்து விடுதலையாக விநாடிக்கு 11 கி.மீ. வேகம் தேவை.அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 11 கிமீ வேகத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.

அதுபோல் கருந்துளையின் விடுதலை வேகம் வினாடிக்கு சுமார் மூன்றுலட்சம் கிமீக்கும் மேல். அதாவது ஒளியின் வேகத்துக்கும் மேல்.அதனால் தனது பக்கத்தில் வரும் எதையும் கருந்துளைகள் கவ்வி இழுத்து விழுங்கிவிடும்.

மொத்த பூமியையும் ஒரு கடுகாக மாற்றிவிட்டால் எப்படி கடும்திண்ம பொருளாய் அது மாறிவிடுமோ அத்தகையப் பொருளாய் கருந்துளைகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

அவற்றைப் பற்றி அமெரிக்கப் பேராசிரியர் பிரியா நடராஜன் ஆய்வு செய்துள்ளார்.

வயிறு புடைப்பின் எல்லை

பொதுவாகக் கருந்துளைகள் அருகில் அகப்படும் வாயுக்கள், தூசித் துகள்கள், ஒளிவீசும் விண்மீன்கள், ஒளியிழந்த செத்த விண்மீன்கள் போன்றவற்றை அசுர ஈர்ப்பாற்றலில் இழுத்து விழுங்கி வயிறு புடைத்துப் பெருக்கும் ! அப்போது கருந்துளையின் நிறை ஏறிக் கொண்டே போகிறது !

ஆனால் அந்த நிறைப் பெருக்கத்துக்கும் ஓர் எல்லை உள்ளது என்று பிரியா நடராஜன் முத்திரை அடிக்கிறார்.

பெரும் பூத வடிவுக் கருந்துளை் (Ultra-massive Black Hole) சூரியனைப்போல 100 கோடி மடங்கு நிறை கொண்டதாக அறியப் படுகிறது !

நமது பால்வீதி காலாக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை பூதப் பெரு கருந்துளையை விட ஆயிரக் கணக்கான மடங்கு சிறியது என்றும் கணிக்கப் பட்டுள்ளது !

உச்ச நிறை பெற்ற கருந்துளைகள் இப்போது வயிறு நிரம்பியவை அல்ல ! பிரபஞ்சத் தோற்றத்தின் காலத்திலே அவற்றின் நிறை உச்ச நிலை அடைந்து விட்டது,” என்று கூறுகிறார் பிரியா.

பிரியா நடராஜனும் டாக்டர் எஸிகுயில் டிரைஸ்டரும் வளரும் எந்தக் கருந்துளைக்கும் ஓர் உச்ச வரம்பு நிறை உள்ளது என விண்வெளிச் சான்றுகளி லிருந்தும், கோட்பாட்டுத் தர்க்கங்கள் மூலமாகவும் 2008 -ல் அறிவித்தனர.

சேமிப்பு களஞ்சியம்

“காலாக்ஸி மையத்தில் இருக்கும் கருந்துளை பிண்டங்களின் ஒரு சேமிப்புக் களஞ்சியமாய் வீற்றிருக்கிறது. அது விண்மீன் பிறப்புக்கும் காலாக்ஸி அமைப்புக்கும் வழிவகுக்கிறது,” என்று சொல்கிறார் பிரியா. கருந்துளைகள் யாவும் “சுய வளர்ச்சி பெறும் அண்டங்கள்” என்கிறார் பிரியா நடராஜன்.மட்கிப்போன தாவரம் தாவரங்களின் வளர்ச்சிக்கு உரமாவது போல இறக்கும் விண்மீன் புதிதாக பல விண்மீன்களுக்கான உரமாகிறது போல தெரிகிறது.

தமிழர்

பிரியம்வதா என்னும் பிரியா டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா போனார். இப்போது யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பவுதிகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

மேதைகளின் வரிசையில்

நோபல் பரிசு பெற்ற ஸர் சி.வி. இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், கணித மேதை இராமானுஜன் போன்ற இந்திய விஞ்ஞான மேதைகளின் வரிசையில் பிரியாவும் அடியெடுத்து வைக்கிறார்.

அவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்த “கருந்துளைப் பெருநிறை வரம்பு” உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “ராமன் விளைவு” “சந்திரசேகர் வரையறை” என்பதை போல பிரியா வரம்பு என்பதும் பேசப்பட்டு வருகிறது.

கருந்துளை வரலாறு

முதன்முதலாக 1780-களில் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் மிச்செல், பிரான்ஸை சேர்ந்த பியர் சைமன் லாப்பிளாஸ் ஆகியோர் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” இருக்கின்றன என்றனர். 1916-ல் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் ஸ்வார்ஸ்சைல்டு கருந்துளைகள் இருப்பதாக அறிவித்தார்.

ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காக உள்ள நட்சத்திரம் தனக்குள்ளாக நொறுங்கும்.அது கருந்துளையாக மாறத்தொடங்கும் என தமிழக விஞ்ஞானியான சந்திரசேகர் வரையறை செய்தார்.

1970-1980 ஆண்டுகளில் தொலைநோக்கிகள் மூலமாக விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளின் மையங்களி்ல் கருந்துளைகளை உணர்ந்தனர். விதிவிலக்கான முறையில் மையத்தில் இல்லாத கருந்துளைகளையும் உணர்ந்துள்ளனர்.

கருந்துளைகளைப்பற்றிய விஞ்ஞானத்தில் பிரியாவின் வரையறை மைல் கல்லாக விளங்கப் போகிறது.

எதிர் காலத்தில் பிரியாவுக்கு நோபல் பரிசுக்கும் வாய்ப்புள்ளது என்கிறார் கனடாவை சேர்ந்த விஞ்ஞானியும் எழுத்தாளருமான சி. ஜெயபாரதன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்