தமிழக கிராமத்திலிருந்து மும்பைக்கு கிளம்பி சர்வர் வேலை பார்த்தவர் இன்று உலகெங்கும் தனது ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்!
சமீபத்தில் சென்னையில் தனது கிளையை நிறுவ வந்திருந்தவரைச் சந்தித்தோம்.
“பேரு கணபதிங்க. சொந்த ஊர் தூத்துகுடி பக்கம் நாகலாபுரம். அப்பாவுக்கு அடுப்புக் கரி வியாபாரம். ஏழு குழந்தைகள். குடும்பத்துல வறுமை. சின்னப் பையனா இருக்கிறப்பயே சென்னைக்கு ரயில் ஏறிட்டேன். காபிக் கடையில வேலை. டம்ளர் கழுவணும். மாசம் 200 ரூபாய் சம்பளம். கடைக்கு வர்ற ஒருத்தர், ‘மும்பையில வேலை வாங்கித்தர்றேன், ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம். ஆனால், எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கணும்’னு சொன்னார். சரின்னு கிளம்பிட்டேன். மும்பை ரயில்வே ஸ்டேஷன் இறங்கிப் பார்த்தா அவரைக் காணோம். கையில் சில்லறைக் காசுதான் இருந்துச்சு. ஒரு தமிழ் டாக்ஸிக்காரர் இரக்கப்பட்டு தாராவி மாரியம்மன் கோயில் வீதியில் இறக்கிவிட்டார்.
ரோட்டோரக்கடை
அங்க இருந்த ரோட்டோர சாப்பாட்டுக் கடை அம்மாகிட்ட வேலை கேட்டேன். தட்டுக் கழுவச் சொன்னாங்க. சம்பளம் கிடையாது. வயித்துக்கு சாப்பிட்டுக்கலாம். ராத்திரி மாரியம்மன் கோயில் திண்ணையில படுத்துக்குவேன். அப்புறம் ஒரு டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். சமோசாவுக்குப் பதிலா வெங்காய பஜ்ஜி, உளுந்து வடை, கீரை போண்டாவை அறிமுகப்படுத்தினேன். வியாபாரம் நல்லா போனது. கஸ்டமர் ஒருத்தர் பார்ட்னர்ஷிப்பில் கடை போடலாம்னு கூப்பிட்டார். அப்ப அந்த ஏரியா எல்லாம் சப்பாத்தி, புரோட்டா மட்டும்தான். நாங்க இட்லி, தோசை, பணியாரம் போட்டோம். வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போச்சு. ஒரு மாசம் கழிச்சு கணக்கு பார்க்கலாம்னு கேட்டேன். மனுஷன், ‘சம்பளம் ஆயிரம் ரூபாய்; இஷ்டம் இருந்தா இரு’னுட்டாரு.
வண்டிக்கடை
கோபத்துல கிளம்பி வாஷி ரயில்வே ஸ்டேஷன் பக்கம் வண்டிக் கடையைப் போட்டேன். ஊர்ல இருந்த ரெண்டு அண்ணன்களை அழைச்சுக்கிட்டேன். இட்லி, தோசை மட்டும்தான். ஆனால், தொட்டுக்க கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி, கேரட் சட்னி, காய்கறி சட்னி, சாம்பார், பொடின்னு நிறைய வெரைட்டி கொடுத்தோம். ரோட்டோரக் கடைன்னாலும் நாங்க பேண்ட், சர்ட் போட்டுக்கிட்டு கைக்கு உறை எல்லாம் மாட்டிக்கிட்டு சப்ளை செஞ்சோம். நாலைஞ்சு மாசம் வியாபாரம் நல்லா போச்சு.
அப்பதான் எதிர்ல மெக் டோனால்டு கடையை ஆரம்பிச்சாங்க. அது வந்ததும் என் கடையில் வியாபாரம் படுத்துக்கிச்சு. அப்படி என்னதான் அங்கிருக்கும்னு போய் சாப்பிட்டுப் பார்த்தோம். நூடுல்ஸ், கோபி மஞ்சூரியன்னு வெளிநாட்டு அயிட்டங்க... நம்மூர் தோசையிலேயே இதை எல்லாம் கொண்டு வந்தால் என்னன்னு யோசிச்சோம். பேப்பர் ரோஸ்ட்டுல நூடுல்ஸ் பரப்பி இஞ்சி, பூண்டு, வெங்காயம் அரைச்சு வதக்குன பேஸ்ட், தக்காளித் தொக்குத் தடவி மொறுமொறுன்னு சுட்டு, சுருட்டி அழகா கட் பண்ணிக் கொடுத்தோம். சாப்பிட்டவங்க ஏதோ பெரிய ரகசியம் மாதிரி ‘அப்படி என்ன உள்ளே வெச்சிருக்கீங்க?ன்னு கேட்டாங்க. ஏரியா எல்லாம் பரபரப்பா எங்க தோசையைப் பத்தி பேச்சு. உடனே அதே ஸ்டைல்ல பன்னீர் தோசை, கோபி மஞ்சூரியன் தோசைன்னு அடிச்சு விட்டோம். பக்கத்து ஸ்டேஷன்ல இருந்து எல்லாம் ரயில் ஏறி வந்து சாப்பிட்டுப் போனாங்க.
ஓடிய மெக் டோனால்டு
மெக் டோனால்டு கடைக்குக் கூட்டம் குறைஞ்சு, கொஞ்ச நாள்ல அவங்க கடையைக் காலி பண்ணிட்டாங்க. பக்கத்துலயே நாங்க ஒரு கடையை பிடிச்சோம். தோசை மட்டும்தான். ஆனா, வெளிநாட்டுக்காரன் எதை எல்லாம் வெச்சு நம்மளை மயக்கினானோ அதே அயிட்டங்களை நம்ம தோசையில புகுத்தினேன்.
அமெரிக்கன் சாப்ஸி தோசை, சில்லி, சோயா நூடுல்ஸ் தோசை, சிஸ்வான் தோசை, ஜிஞ்சர் தோசை, பன்னீர் தோசை, ஸ்பிரிங் ரோல் தோசை, சாலெட் ரோஸ்ட் தோசை, ஹாராபாரா தோசை (பாலக் கீரை தோசை), மகாராஜா தோசைன்னு மொத்தம் 104 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினோம்.
கிளைகள்
நாலைஞ்சு வருஷத்துல மும்பையில ஐந்து கிளைகள் திறந்தோம். டெல்லி, ஜெய்ப்பூர், சூரத், பூனா, நாக்பூர் ஆகிய ஊர்களிலும் கிளைகள் திறந்தோம். அப்படியே நியூசிலாந்து, அரபு எமிரேட்ஸ், ஓமன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கட்டார், பக்ரைன், தான்சானியா ஆகிய ஊர்களிலும் இப்ப எங்கள் கிளைகள் இருக்கு. சொந்த ஊரை மறக்கக் கூடாதேன்னு இப்போ சென்னையில் கிளை திறக்கும் முயற்சியில் இருக்கோம்.” என்றார்.
கணபதி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago