பணமதிப்பிழப்பின் வடுக்கள் அதிகமாகும்
2016 நவம்பர் 8 அன்று அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வடுக்கள் காலப்போக்கில் மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். பணமதிப்பிழப்பு அறிவித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து பேசிய அவர், “நாட்டின் ஒவ்வொரு மனிதரும் வயது, பாலினம், மதம், பணி, இனம்... இப்படி எந்த வித்தியாசமும் இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்தியப் பொருளாதாரம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து இன்னும் மீளவில்லை” என்று தெரிவித்தார்.
கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி
கர்நாடகாவில் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் (பெல்லாரி, ஷிமோகா, மாண்ட்யா) இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 3 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நவம்பர் 6 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் நான்கு தொகுதிகளில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி வெற்றிபெற்றது. ஷிமோகா மக்களவைத் தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது.
வேலைவாய்ப்பின்மை 6.9 சதவீதமாக உயர்வு
நாட்டின் வேலைவாய்ப்பின்மை சதவீதம் அக்டோபரில் 6.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன், தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 47-48 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகரித்து 2018 அக்டோபரில் 2.95 கோடியாக அதிகரித்திருக்கிறது.
மீண்டுவருகிறது ஓசோன் படலம்
தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஓசோன் படலம் தற்போது அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவருவதாக ஐ.நா. ஆய்வு நவம்பர் 5 அன்று தெரிவித்தது. ‘1987 மான்ட்ரியல் ப்ரோட்டோகால்’ மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட வாயுக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதால், ஓசோன் படலம் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிலிருந்து மூன்று சதவீதம்வரை பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அக்டோபர் புரட்சியின் 101-வது ஆண்டு
ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி நடைபெற்று 101 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும்விதமாக மாஸ்கோவில் நவம்பர் 7 அன்று நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 300 ஆண்டுகால ஜார் மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அக்டோபர் புரட்சி, உலக மக்கள் புரட்சிகளில் முக்கியமானது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவர்கள் விளாடிமிர் லெனின், ஜோசஃப் ஸ்டாலின் ஆகியோரின் படங்களுடன் மக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
இருமொழி பேசும் இளைஞர்கள்
நாட்டின் நகரங்களில் வசிக்கும் 52 சதவீத இளைஞர்கள் இருமொழி பேசுபவர்களாகவும், 18 சதவீத இளைஞர்கள் மும்மொழி பேசுபவர்களாகவும் இருப்பதாக சமீபத்தில் வெளியான மக்கள்தொகை தரவுகளின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள்தொகையில், நகரங்களில் 44 சதவீதத்தினர் இருமொழி பேசுபவர்களாகவும் கிராமங்களில் 22 சதவீதத்தினர் இருமொழி பேசுபவர்களாகவும் இருக்கின்றனர்.
என். ராமுக்கு ‘ராஜா ராம் மோகன் ராய்’ விருது
மூத்த பத்திரிகையாளர், 'தி இந்து' பதிப்பகக் குழுமத்தின் தலைவர் என். ராமுக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ‘ராஜா ராம் மோகன் ராய்’ விருதை நவம்பர் 5 அன்று அறிவித்தது. பத்திரிகைத் துறையில் அவரது சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தேசிய ஊடக தினமான நவம்பர் 16 அன்று இந்த விருது அவருக்கு அளிக்கப்படவிருக்கிறது. 2018-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சிறந்த பத்திரிகையாளர் விருதுகளையும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அறிவித்தது.
துப்பாக்கி சாம்பியன்ஷிப்பில் தங்கம்
எட்டாவது ஆசிய வேட்டைத்துப்பாக்கி சாம்பியன்ஷிப்பில் ஆடவர் பக்கவாட்டு எறிதட்டுச் சுடுதல் (Skeet) போட்டியில் முதன்முறையாக இந்தியாவின் சார்பில் தங்கம் வென்றிருக்கிறார் அங்க வீர் சிங் பஜ்வா. குவைத்தில் நவம்பர் 6 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனாவைச் சேர்ந்த டி ஜின் வெள்ளிப் பதக்கத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சயீத் அல் மக்டோம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
ரசகுல்லா நாள் அறிவிப்பு
மேற்கு வங்க மாநில அரசு, அம்மாநிலத்தின் பிரபல இனிப்புப் பண்டமான ரசகுல்லாவின் சிறப்பை விளக்கும்வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 14 அன்று ‘ரசகுல்லா நாள்’ கொண்டாடப் போவதாக நவம்பர் 7 அன்று அறிவித்தது. ரசகுல்லா இனிப்புப் பண்டத்துக்கு ‘புவியியல் குறியீடு‘ (Geographical Indication) வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவானதையொட்டி நவம்பர் 14-யை ரசகுல்லா நாளாக அறிவித்திருக்கிறது மேற்கு வங்க அரசு.
பழங்குடியினர் பல்கலைக்கழகம்
மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் அமைவதற்கு மத்திய அமைச்சரவை நவம்பர் 8 அன்று
ஒப்புதல் வழங்கியது. இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு முதற்கட்டமாக ரூ. 420 கோடியை ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago