சேதி தெரியுமா? - நீட்: கருணை மதிப்பெண் வழங்க முடியாது

By கனி

2018 நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வெழுதிய 24,000 மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கில், நவம்பர் 22 அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மொழிபெயர்ப்பு தவறுகளுக்காகக் கருணை மதிப்பெண்கள் வழங்க முடியாது, பிராந்திய மொழியில் படிக்கும் மாணவர்களுக்கும் போதுமான ஆங்கில அறிவு இருக்க வேண்டுமென்று தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

 

கஜா: ரூ. 15,000 கோடி நிவாரண நிதி தேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 15,000 கோடி வழங்க வேண்டும் என்று நவம்பர் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். நவம்பர் 16 அன்று தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலால் வீடுகள், விவசாய நிலங்கள், மரங்கள், கால்நடைகள், மின்கம்பங்கள் போன்றவை கடுமையாகச் சேதமடைந்தன. இந்தப் புயல் காரணமாகத் தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்தனர்.

கிராமங்களில் குறையும் கல்வியறிவு

யுனெஸ்கோவின் ‘2019 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை’ நவம்பர் 20 அன்று பெர்லினில் வெளியானது. இந்தியாவின் கிராமங்களிலிருந்து ஏழு நகரங்களுக்குக் குறிப்பிட்ட பருவங்களில் புலம்பெயரும் 80 சதவீதக் குழந்தைகளுக்குக் கல்வியறிவு கிடைப்பதில்லை என்றும் இவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையில் உலகம் முழுவதும் பள்ளிச் செல்லும் வயதிலுள்ள புலம்பெயர்ந்த, அகதிக் குழந்தைகளின் சதவீதம் 2000-ம் ஆண்டிலிருந்து 26 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்பு

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், அம்மாநில சட்டப்பேரவையை நவம்பர் 21 அன்று கலைத்தார். ஜூன் மாதம் மக்கள் ஜனநாயகக் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சியிலிருந்து பாஜக விலகியதால், அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெகபூமா முஃப்தி தலைமையில் ஆட்சியமைக்க முயற்சி நடைபெற்றது. ஆனால், அதற்குள் சட்டசபையைக் கலைத்து ஆளுநர் உத்தரவிட்டார்.

s3jpg100 

யானை வழித்தடம்: சூழலியல் கூருணர்வு மண்டலம்

நாடு முழுவதுமுள்ள யானை வழித்தடங்களைச் சூழலியல் கூருணர்வு மண்டலங்களாக (Eco Sensitive Zones) மாற்ற வேண்டும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நவம்பர் 19 அன்று அறிவுறுத்தியது. இது தொடர்பாக முடிவெடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.

 

சர்வதேச விண்வெளி மையம்: 20 ஆண்டுகள்

சர்வதேச விண்வெளி மையம் (ISS) தொடங்கி 20 நவம்பர் 2018, அன்று இருபது ஆண்டுகள் நிறைவடைந்தது. 20 நவம்பர் 1998, அன்று அமெரிக்க நிதியில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ‘ஸர்யா’ கட்டுப்பாட்டுத் தொகுதி கஜகஸ்தானிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சர்வதேச விண்வெளி மையம் பூமியின் சுற்றுப்பாதையில் பெரிய விண்கலமாக இயங்கிவருகிறது. இந்த மையத்தை விண்வெளியில் வசிப்பது, பணியாற்றுவது குறித்த ஆராய்ச்சிக்கு நாசா பயன்படுத்துகிறது.
 

s4jpgright

மிக்கி மவுஸுக்கு 90 வயது

வால்ட் டிஸ்னி உருவாக்கிய மிக்கி மவுஸ் கதாபாத்திரம் 18 நவம்பர் 2018, அன்று தன் 90-வது பிறந்தநாளைக் கண்டது. ‘ஸ்டீம்போட் வில்லி’ அமெரிக்க அனிமேஷன் குறும்படத்தில்தான் முதன்முதலில் மிக்கி மவுஸ் கதாபாத்திரம் 18 நவம்பர் 1928, அன்று உலகுக்கு அறிமுகமானது.

மிக்கி மவுஸின் 90-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, டிஸ்னி நிறுவனம், ஷினோலா நிறுவனத்துடன் இணைந்து ‘கடிகாரம், கைக் கடிகாரம், டைரி, இதழ், பை, ஆடியோ கருவி’ ஆகியவை அடங்கிய மிக்கி மவுஸ் கலெக்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

 

மாற்றப்பட்ட கிலோகிராமின் வரையறை

130 ஆண்டுகளுக்குப் பிறகு, கிலோகிராமின் வரையறையை உலக விஞ்ஞானிகள் மாற்றியமைத்திருக்கின்றனர். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற 26-வது ‘எடைகள், அளவைகளுக்கான பொது மாநாட்டில்’ உலகின் 60 நாடுகள் இணைந்து வாக்களித்து கிலோகிராமின் வரையறையை மாற்றி இருக்கின்றன.

இனி கிலோகிராம் மின்னோட்டம் (electric current) வழியாக வரையறை செய்யப்படும் என்று இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு 20 மே 2019, அன்றிலிருந்து உலகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.
 

நான்கு தவளைகள் கண்டுபிடிப்பு

வடகிழக்கு மாநிலங்களின் இமயமலைப் பகுதிகளில் நான்கு புதிய கொம்புத் தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ‘தவளை மனிதர்’ எஸ்.டி. பிஜு உள்ளிட்டோர் அடங்கிய குழு 14 ஆண்டுகள் ஆய்வின் வழியாக இந்த நான்கு புதிய கொம்புத் தவளைகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகம், பிரிட்டனின் தேசிய வரலாற்று அருங்காட்சியகம், அயர்லாந்தின் யுனிவர்சிட்டி காலேஜ் டப்ளின் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன.
 

ஆறாவது முறையாக தங்கம்

டெல்லியில் நவ. 24 அன்று நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் ஆறாவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். 48 கிலோ பிரிவின் இறுதிச் சுற்றில் உக்ரைன் நாட்டின் ஹன்னா ஒக்ஹோடாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மேரி. உலக சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் வெல்லும் 6-வது தங்கம் இது. இதற்கு முன்பு  2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேரி கோம் தங்கம் வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்