வடக்கு பாய்கிறது, தெற்கு பதுங்குகிறது

By ச.மணிகண்டன்

சமீப காலமாகப் பலதரப்பட்டவரின் பார்வையும் ஐஏஎஸ் எனும் இந்திய ஆட்சிப் பணி மீது விழுந்துவருகிறது. விழிப்புணர்வு, புரிதல், சமூகத்தில் மதிப்பு, மரியாதை, பொறுப்பு, அதிகாரம், சேவை செய்வதற்கான சரியான இடம் போன்ற அம்சங்கள் இந்திய ஆட்சிப் பணியின் மீதான ஈர்ப்புக்குக் காரணம். தேசிய அளவில் இந்த மதிப்புமிக்க பணியில் கோலோச்சுவதில் உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களே முன்னணியில் உள்ளன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களையும் சேர்த்துப் பார்த்தால், நாட்டின் மக்கள்தொகையில் 20 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது உத்தரப்பிரதேசம். கல்வி அறிவில் 69.72 சதவீதத்துடன் 29-வது இடத்தில்தான் உள்ளது. 10.5 கோடி மக்கள்தொகையுடன் 3-வது இடத்திலுள்ள பிஹார், கல்வி அறிவில் 63.82 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல், இங்கு பெண்களைக் காட்டிலும் ஆண்களே கல்வி அறிவில் முன்னணியில் உள்ளனர்.

இந்தியும் உருதும் முதன்மை மொழிகளாக உள்ளன. பாலின விகிதத்திலும் ஏறக்குறைய 918 (பிஹார்), 912 (உ.பி.) அடுத்தடுத்த நிலையில்தான் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் கடைசி இரு இடங்களில்தான் இந்த மாநிலங்கள் உள்ளன. விவசாயத்தைச் சார்ந்துதான் பொருளாதாரம் உள்ளது. நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்டவை முதன்மைப் பயிர்களாக உள்ளன.

ஆட்சிப் பணியில் ஆர்வம்

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், சாலை, மின்சாரம், பள்ளி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நூலகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உட்படப் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் குறைவு. இதில் பிஹாரின் நிலை மிகவும் கவலைக்குரியது. உலகிலேயே ஆசிரியர் வருகையின்மை சதவீதம் அதிகமாக உள்ள மாநிலம் பிஹார்தான். வறுமைகோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகம். வாழ்வாதாரத்துக்காகப் பெரும்பாலானோர் மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆனால், படிப்பை முடிக்கும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலமாகத் தொழில் சார்ந்த வேலைவாய்ப்பையும் அரசுப் பணியையுமே இந்த இரு மாநிலங்களிலும் விருப்பமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உட்பட அதிகாரம் சார்ந்த பணிக்கு மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுதான் இவர்களின் முதல் தேர்வாக உள்ளது.

கூடும் எண்ணிக்கை

தேசிய அளவில் அதிகப்படியான இந்திய ஆட்சிப் பணியாளர்களை (ஐஏஎஸ்) உருவாக்கும் மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகியவை விளங்குகின்றன. ஐஏஎஸ் அதிகாரிகளில் இவ்விரு மாநிலங்களின் பங்கு மட்டும் ஆண்டுக்கு 25 சதவீதம். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதீத வளர்ச்சி கண்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், பிஹாருக்கு அடுத்த நிலையிலேயே தமிழகம் உள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இருந்தும் இந்த நிலை உள்ளது. தேசிய அளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்குவதில் முதல் 8 மாநிலங்களில் தென்னிந்தியாவில் இருந்து இடம்பிடித்துள்ள ஒரே மாநிலம் தமிழகமே. ஒருபுறம் பெருமையாக இருந்தாலும், இதுவும் பின்னடைவே.

வசதிகள் இருந்தும் குறைவு

உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களில் இருப்பதைவிட பள்ளிகள், கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட அனைத்து அம்சங்களும் தென்னிந்தியாவில் அதிகம். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாகா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவை இவற்றில் சிறந்து விளங்கினாலும், ஆட்சிப் பணியில் இடம்பிடிப்பதில் மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் 2014-2018 (1291, 1129, 1079, 980, 782) என சிவில் சர்வீசஸ் பணி இடங்கள் குறைக்கப்பட்டு நிரப்பப்பட்டுவருகின்றன. அதிலும், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெறும் 782 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.

அதே நேரம், புள்ளி விவரப்படி நாடு முழுவதும் 1,500 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாக, கடந்த ஆண்டு மத்தியப் பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார்.

2017-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் தமிழகத்திலிருந்து 50-க்கும் குறைவானவர்களே வெற்றி பெற்றனர். படித்த படிப்புக்கான வேலை, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் வெளிநாடு சென்று அதிக ஊதியத்துடன் பணிபுரிய வேண்டும் என்பதே, தென்னிந்தியாவில் பெரும்பாலானோரின் கனவு. அதை நோக்கி  பயணித்துக்கொண்டு, தங்களின் எல்லையைச் சுருக்கிக் கொள்கின்றனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்