தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள 2,000 அங்கன்வாடி மையங்களில் ‘எல்.கே.ஜி., யூ.கே.ஜி’ ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகஸ்ட் 15 அன்று தெரிவித்தார். சமூக நலத்துறையுடன் இணைந்து 2,000 அங்கன்வாடி மையங்களை ஆங்கிலவழி மழலையர் பள்ளிகளாக மாற்றுவதற்கான முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதன்முறையாக ரூ.70.08-ஆக. 14 அன்று குறைந்தது. ரிசர்வ் வங்கியின் தொடர் முயற்சியின் காரணமாகப் பின்னர் ரூ.69.84 ஆக வர்த்தகமாகத் தொடங்கியது. அரசியல், பொருளாதார நெருக்கடியின் காரணமாக துருக்கி நாட்டின் பணமான ‘லிரா’ கடும்வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. கடந்த ஓர் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான ‘லிரா’வின் மதிப்பு 50 சதவீதம் குறைந்திருக்கிறது. சந்தையில் ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் குறைந்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு
முதுபெரும் அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமரும் கவிஞருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் டெல்லியில் ஆகஸ்ட் 16 அன்று காலமானார். அவருக்கு வயது 93. அவர் இந்திய பிரதமராக மூன்று முறை (1996 – 13 நாட்கள், 1998-1999, 1999-2004) பதவிவகித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அல்லாமல் ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவுசெய்த முதல் இந்தியப் பிரதமர் இவர்.
1924 டிசம்பர் 25 அன்று, மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்த இவர், பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். பாரதிய ஜன சங்கம்தான் பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. நாடாளுமன்ற உறுப்பினராக 47 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். பத்து முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2015-ம் ஆண்டு இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் சாத்தியமல்ல!
அரசியலமைப்பில் திருத்தம் செய்யாமல் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் ஆகஸ்ட் 14 அன்று தெரிவித்தார். ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்கள் நடத்துவதற்கு ஆளும் பாஜக அரசு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகிறது.
இந்நிலையில், 2019 ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுடன் 2018 டிசம்பரில் நடத்த வேண்டிய மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை இணைந்து நடத்துவது சாத்தியமல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதனால், மிசோரம் சட்டமன்றம் காலம் நிறைவடையும் டிசம்பர் மாதத்தின் நடுவில் மற்ற மூன்று மாநிலங்களான மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் இணைந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சோம்நாத் சட்டர்ஜி காலமானார்
முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கொல்கட்டாவில் மாரடைப்பு காரணமாக ஆகஸ்ட் 13 அன்று மறைந்தார். அவருக்கு வயது 89. இவர் 2004-2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராகப் பதவிவகித்திருக்கிறார். 1968-ம் ஆண்டில் சிபிஎம் கட்சியில் சேர்ந்த இவர், அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் 1996-ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதி விருதைப் பெற்றிருக்கிறார்.
இவர் மக்களவை சபாநாயகராகப் பதவிவகித்தபோது, இவர் முன்னெடுத்த முயற்சி களால்தாம் நாடாளுமன்றத்தின் கேள்விநேரம் 2004 ஜூலை 5 அன்று முதன்முறையாக தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. ‘லோக்சபா’ தொலைக்காட்சியும் இவரது பதவிகாலத்தில்தான் தொடங்கப்பட்டது.
இஸ்ரோ: ரூ. 5,600 கோடி வருவாய்
மூன்று ஆண்டுகளில் இஸ்ரோ நிறுவனம் ரூ. 5,600 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இஸ்ரோவின் வணிக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட், வெளிநாடுகளுக்குச் செயற்கைக்கோள்கள் விற்பனை செய்ததிலும் சேவைகள் வழங்கியதிலும் 2015 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை ரூ. 5,600 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இதே காலகட்டத்தில் இஸ்ரோ பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 7,209 கோடி செலவு செய்துள்ளது.
இஸ்ரோவின் வணிக வருவாயில் 75 சதவீதம் செயற்கைக்கோள் தொடர்பு வர்த்தகத்தின் மூலம் கிடைக்கிறது. இஸ்ரோவின் செயற்கைக்கோள் சேவைகளை 84 தனியார் பெருநிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். இதில் ரிலையன்ஸ், சன் குழுமம் போன்ற நிறுவனங்கள் முக்கிய வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.
வாழ்வதற்குத் தகுதியான நகரம் வியன்னா
உலகில் வாழ்வதற்குத் தகுதியான நகரங்களில் முதல் இடத்தை ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னா பிடித்திருக்கிறது. எகானாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டிருந்த 2018 உலக வாழிடப் பட்டியலில் உலகின் 140 நகரங்கள் இடம்பெற்றிருந்தன. பாதுகாப்பு, செலவு, கல்வி, சுகாதாரம், வாழ்க்கைமுறை, உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நகரங்களின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரமும் மூன்றாவது இடத்தில் ஜப்பானின் ஒஸாகா நகரமும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவின் தலைநகரமான டெல்லி 112-வது இடத்தையும் மும்பை 117-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
24-வது உலகத் தத்துவ மாநாடு
24-வது உலகத் தத்துவ மாநாடு சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் 2018 ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெற்றது. தத்துவ சமூகங்களுக்கான சர்வதேச அமைப்பும் பெக்கிங் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தன. “மனிதனாக இருப்பதற்குக் கற்றுக்கொள்ளுதல்” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாக இருந்தது. 121 நாடுகளைச் சேர்ந்த 6,000 தத்துவ அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். அமர்வுகள், விரிவுரைகள், வட்ட மேசைக் கூட்டங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இந்த உலகத் தத்துவ மாநாட்டில் நடைபெற்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
55 mins ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago