சீரான சாலை வசதியோ போதிய போக்குவரத்து வசதியோ எந்தவிதமான தொலைத்தொடர்பு வசதியோ இல்லாமல்தான் இருந்தது தர்மபுரியிலுள்ள சிட்லிங்கி மலைப் பள்ளத்தாக்கு. இந்தப் பகுதி மக்களில் 90 சதவீதத்தினர் மலைவாசிகள். இரண்டு கிராமங்களில் லம்பாடி மலைவாழ் மக்களும் தலித் மக்களும் வாழ்கின்றனர். தங்களுடைய குழந்தைகளைச் சிறப்பாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருந்தது. ஆனால், இத்தனை இடர்ப்பாடுகளுக்கு இடையில் கல்வி என்பது பெருங்கனவாக இருந்துவந்தது. இந்நிலையில்தான் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான நூலகமாகவும் கல்வி மையமாகவும் 2004-ல் ‘துளிர்’ தொடங்கப்பட்டது.
தொழில் கல்வித் திட்டம்
வழக்கமான கல்வித் திட்டத்தைப் பின்பற்றிப் பாடம் நடத்துதல் இங்கே பெரிய அளவில் பலனளிக்கவில்லை. அதன் பின்னர்தான் வாழ்க்கைச் செயல்பாடுகளைக் கல்வியில் இணைத்தல் என்ற உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள் ‘துளிர்’ அமைப்பை நிறுவிய அனுராதாவும் கிருஷ்ணாவும். அதிலும் கைத்தொழிலில் நேர்த்தியானவர்களாகத் திகழும் லம்பாடி பழங்குடியின மக்களின் சந்ததியினர்களுக்குக் கைவேலைப்பாட்டுடன் இணைந்த தொழில் கல்வித் திட்டம் மாயங்கள் செய்தது. செயல்வழிக் கல்வியாகக் கற்பிக்கத் தொடங்கிய பிறகு பத்து, பிளஸ் டூ வகுப்புப் பரீட்சையில்கூட அவர்கள் தேர்ச்சி பெறத் தொடங்கினர்.
இதைக் கண்டு பூரிப்படைந்த சிட்லிங்கி மக்கள் தங்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பெற்று முன்னேற வேண்டும் என ஆசைப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பொற்கைக் கைவினைக் கலைஞர்கள் சங்கம், சிட்லிங்கி பள்ளத்தாக்கு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பில் (SOFA) உள்ள 600 விவசாயிகளின் குழந்தைகள், மலை வாழ்மக்கள், மருத்துவமனைப் பணியாளர்களின் குழந்தைகள் படிக்க ஒரு பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதன் பிறகு குழந்தைகளுக்கான முழுநேரப் பள்ளியாக ‘துளிர்’ மாற்றப்பட்டது. தற்போது பள்ளிக் கல்வித் துறை அங்கீகாரம் பெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையே குழந்தைகளும் செய்ய ஆசைப்படுகிறார்கள். இதில் முக்கியமானது வேலை. பெற்றோருடன் எப்போதும் குழந்தைகளும் வீட்டில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். குழந்தைகளாகவே செய்யும் வேலைகளும் பெரியோருடன் சேர்ந்து செய்யும் வேலைகளும் அவர்களை மகிழ்விக்கின்றன. இயல்பானதாக அவை இருக்கும்பட்சத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் குழந்தைகளின் பலமாக அது மாறுகிறது. இதை அடிப்படையாக வைத்துக் குழந்தைகள் சிந்தித்துச் செயல்பட, ஒவ்வொரு விஷயத்தையும் சுலபமாகப் புரிந்துகொண்டு கற்க அத்தியாவசியமானதாகச் செயல்வழிக் கற்றல் இருக்கிறது. மூளை, மனம், கை மூன்றும் இணைந்த செயல்பாடாகக் கல்வி இருக்க வேண்டும் என்பதே எங்கள் பாடத்திட்டத்தின் குறிக்கோள்” என்கிறார்கள் ‘துளிர்’ பள்ளியின் ஆசிரியர்கள்.
அறிவியல் முதல் நிகழ்த்துக் கலைவரை
சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள உயிரியல் பாடத்துக்கான வகுப்பு இந்தப் பள்ளியில் இவ்வாறு நடத்தப்படுகிறது: செடிகள் பற்றிய வகுப்பு, வகுப்பறையில் நடத்தப்படுவதில்லை. தோட்டத்தில் நடைபெறுகிறது பள்ளி வளாகத்தில் சூரிய ஒளியே இல்லாத இடத்தில், சூரிய ஒளி நேரடியாகக் கிடைக்குமிடத்தில், நிழலும் வெயிலும் கலந்த ஒரு பகுதி என இடங்களைத் தேர்வுசெய்து விதைகள் விதைக்கப்படுகின்றன. அந்த விதைகள் ஒவ்வொன்றும் செடியாகத் துளிர்விடுவது முதல் வளர்ந்து தழைப்பதுவரை அத்தனை செயல்களிலும் தினந்தோறும் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். வெயிலில் உள்ள செடியின் வளர்ச்சியையும் நிழலில் வளரும் செடியின் வளர்ச்சியையும் அளவிடுகிறார்கள். அது குறித்து நோட்டுப்புத்தகத்தில் பதிவுசெய்கிறார்கள். தங்களுக்குள் கலந்துரையாடுகிறார்கள்.
பட்டுப்பூச்சியின் வளர்ச்சி பற்றிய பாடம் வேறு வடிவம் பெறுகிறது. ஒரு மாணவன் பாட்டில் ஒன்றில் கம்பளிப் புழுக்களை அடைத்து எடுத்து வந்தான். அது என்னவாகும் என விளக்கினான். அது சாப்பிடும் இலைகளைச் சக மாணவர்கள் கொண்டுவந்து தூவுகிறார்கள். அவையும் சாப்பிட்டன. பின் கூடுகட்டத் தொடங்கின. அதிலிருந்து பட்டாம்பூச்சி இறக்கையுடன் வெளிவந்தது. இப்படிப் பாடத்தில் உள்ள பல பகுதிகளைச் சமூகத்திலிருந்து பாடத்துக்கு எடுத்து வரும்போது பாடத்தின் தன்மை பரந்துபட்டதாக மாறுகிறது.
இதேபோல 4-ம், 5-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களான நாட்டுப்புறக் கலைகள் பாடப் பகுதிக்குப் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், களியல் ஆட்டம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பயிற்சி முடிந்ததும் மாணவர்களின் நிகழ்த்து கலை பள்ளியில் விழாவாக ஊரின் பொது வெளியில் நடைபெற்றது.
ஆசிரியர்கள் ஆன மாணவர்கள்
கைவினைப் பாடத்துக்கு லம்பாடி மலைவாழ் பெண்கள் துணியில் பூ வேலைப்பாடு சொல்லிக்கொடுத்தனர், பனை ஓலைப் பொருட்கள், மூங்கில் பொருட்கள் செய்வதற்குப் பாரம்பரியக் கலைஞர்களை ஈடுபடுத்தத் தொடங்கினர். அவர்கள் தயாரித்த கைவினைப் பொருட்களின் எண்ணிக்கையும் அழகும் கதையாக, கனவாக, படைப்பாற்றலாக வெளிப்பட்டிருந்தது.
சூரிய ஒளி மின்சாரம், சூரிய ஒளியில் குக்கர் போன்ற வசதிகள் ‘துளிர்’ பள்ளியில் உள்ளதால் பாடங்களை வாழ்வுசார்ந்ததாக மாற்றுவது அங்கே சுலபமாக நிகழ்கிறது. பாடப் பகுதியாக இந்தச் சிந்தனை மாற்றப்படுகிறது. இதனால் மின்விசிறி, டார்ச் லைட், சைக்கிள் பம்பு, அலைபேசி என மின், மின்னணு, அதிநவீனத் தொழில்நுட்பச் சாதனங்களைக்கூட இந்தப் பள்ளி மாணவர்கள் பிரித்துப்போட்டு அவற்றின் இயற்பியலை அக்குவேறு ஆணிவேறாகச் செயல்வழியில் கற்றுத் தேர்ந்துவிடுகிறார்கள்.
“துளிரின் பலமாக நாங்கள் கருதுவது மாணவர்கள் இன்னும் இயற்கைச் சூழலில் வாழ்வது, விவசாய வேலைகளில் அவர்களிடம் வெளிப்படும் நேர்த்தி, முழுக் கவனத்துடன் செயல்களில் ஈடுபடும் பாங்கு என அடுக்கிக்கொண்டே போகலாம். சக்திவேல், பெருமாள், அம்பிகா போன்றவர்கள் எங்கள் துளிர் மையத்தில் படித்து மேல்படிப்பு முடித்து இங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். அவர்களின் ஈடுபாடு பள்ளிக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. அதோடு இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றப் பணியாளர்களின் குழந்தைகள், விவசாயிகளின் குழந்தைகள் கூடுதல் பலம்” என்கிறார்கள் அனுவும் கிருஷ்ணாவும். இயற்கையோடு இயைந்து வாழ்தல் கல்விக்குக் கைகொடுக்கும் என்ற சிந்தனையை நம் மனத்தில் துளிர்விடச்செய்கிறது இந்த ‘துளிர்’ பள்ளி.
பள்ளியைத் தொடர்புகொள்ள: 80983 98762
கட்டுரையாளர்:
கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago