உப்புத் தண்ணீரில் இருந்து எரிபொருள்: திருப்பூர் மாணவி சாதனை

By இரா.கார்த்திகேயன்

 

னிதர் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர், மற்றொன்று எரிபொருள். உலகின் பெரும் தட்டுப்பாடாக மாறவிருக்கும் எரிபொருளுக்கு மாற்றாக மாற்று எரிபொருளை வெற்றிகரமாகக் கண்டுபிடித்திருக்கிறார் திருப்பூர் மாணவி எம். யோகேஸ்வரி. இவர் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்திய இளைஞர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ‘இன்ஸ்பையர்’ எனப்படும் ‘Innovation in Science pursuit for Inspired Research’ போட்டியை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான இந்தப் போட்டியில் முதல் பரிசை 17 பேரும் இரண்டாம் பரிசை 16 பேரும் மூன்றாம் பரிசை 17 பேரும் வென்றுள்ளனர். இவர்களுக்கு இடையில் மாநில அளவில் மூன்றாம் பரிசை வென்றிருக்கிறார் யோகேஸ்வரி. மூன்றாவது பரிசைப் பெற்றிருந்தாலும், சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்காக அவர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

சாதனைக்குப் பின்னால்

அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார் என்பதை மாணவி யோகேஸ்வரியிடமே கேட்டோம்.“வீடுகளில் நீரைச் சூடுபடுத்த ஹீட்டர் பயன்படுத்துவதைப் போல, உப்பு நீரில் மின்சாரத்தைச் செலுத்தும்போது, அது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என இரு அயனிகளாகத் தனித்தனியாகப் பிரியும். நான் கிராஃபைட் கம்பி கொண்டு உப்புநீரைச் சூடு செய்தேன்.

இப்படிச் செய்யும்போது, உப்பு நீரில் இருந்து ஹைட்ரஜன் நீர்க்குமிழிகள் அதிக அளவில் வெளியேறும். அந்த ஹைட்ரஜன் நீர்க்குமிழி முட்டைகளில் இருந்து வெளியேறும் வாயுவைச் சேகரிக்க, டியூப் ஒன்றை உப்புநீரில் போட்டேன். அதன் வழியாகத் தயாராக வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில் வாயுவைச் சேகரித்தேன். இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் செல்லும் டியூப்பை நீக்கிவிட்டு, சிலிண்டரில் இருந்து மற்றொரு டியூப் மூலம் ஹைட்ரஜன் வாயுவை பைக்கில் செலுத்த வாகனம் இயங்கத் தொடங்கியது. இந்த ஆய்வுக்காகப் பள்ளிக் கல்வித் துறை எனக்கு ரூ. 10,000 வழங்கியது. கிராஃபைட்டுக்கு மாற்றாக காரியம், தாமிரம், ஸ்டீல் இவற்றில் ஏதாவது ஓர் உலோகத்தையும் பயன்படுத்தலாம். இந்தச் சோதனையை நான் பலமுறை செய்துபார்த்து இப்போது வெற்றிகண்டிருக்கிறேன்” என்றார்.

அயராது ஆராயும் மனம்

தன்னுடைய மாணவியைப் பற்றிப் பள்ளி ஆசிரியை பி.சுதா கூறுகையில், “யோகேஸ்வரியின் தொடர் முயற்சிக்கு எங்களுடைய பள்ளி நிர்வாகம் உறுதுணையாக இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் சிறப்பான மாற்றாக இருக்கும். ஒரு லிட்டர் உப்புத் தண்ணீரில் இரு சக்கர வாகனத்துக்கு எவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய உள்ளோம்” என்றார்.

தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் சாதாரண வேலைபார்த்து வருகிறார் இவருடைய தாய் அம்சவல்லி. தந்தையோ குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டார். இத்தனை இக்கட்டான சூழலிலும் தன்னுடைய மகள் சாதித்திருப்பதைக் கண்டு பெருமைகொள்கிறார் இவருடைய தாய். “பொதுவாகவே யோகேஸ்வரி அறிவியல் பாடத்தை ஆர்வத்துடன் படிப்பாள். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகும், விடுமுறை நாட்களில்கூட நெல் எப்படி விளைகிறது, பறவைக்குச் சிறகு எப்படி முளைக்கிறது?... இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை ஆராய்ச்சி செய்துகொண்டே இருப்பாள். வீட்டின் சிரமமான சூழ்நிலையால் துவண்டுவிடாமல் அவள் சாதித்திருப்பது மகிழ்ச்சியே” என்கிறார் இவருடைய தாய்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்