வணிக வீதி

செயற்கை  நுண்ணறிவுத் தொழில்நுட்பம் - வாய்ப்பா? ஆபத்தா?

செய்திப்பிரிவு

சாட்ஜிபிடியுடன் பல தலைப்புகளில் கேள்வி கேட்டு அரட்டையடிக்கும்போது எல்லாருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பங்கள் நாளைக்கு நம்மைப் போன்ற மனிதர்களுடைய வேலைகளையெல்லாம் பறித்துக் கொண்டுவிடும் என்று சொல்கிறார்களே. இது எந்த அளவுக்கு உண்மை?

வரலாற்​றில் எந்​தப் புதுத் தொழில்​நுட்​பம் அறி​முக​மாகும்​போதும் முந்​தைய தலை​முறைத் தொழில்​நுட்​பத்​தைப் பின்​பற்றி வந்​தவர்​களுக்கு சிறு நடுக்​கம் உண்​டாவது இயல்​பு​தான். ஒரு​வேளை, தங்​களால் இந்​தப் புதிய திறமை​யைப் புரிந்​து​கொள்ள முடி​யாதோ, தங்​களு​டைய பழைய திறமை இனி தேவையற்​றவை​யாகக் கருதப்​படுமோ, புதி​ய​வர்​கள் தங்​களைப் பின்​னுக்​குத் தள்​ளி​விடு​வார்​களோ என்​கிற கவலைகளெல்​லாம் அவர்​களுக்​குள் ஏற்​படும்.

அந்​தக் கவலைகளையே எரிபொருளாகப் பயன்​படுத்​திக் கொண்டு கற்​றுக் கொள்​வார்​கள், முன்​னேறு​வார்​கள். அதன் பிறகு அவர்​கள் இந்​தப் பழைய கால​கட்​டத்​தைத் திரும்​பிப் பார்த்​தால், 'அட, இதுக்கா அச்​சப்​பட்​டோம்!' என்று சிரிப்​பார்​கள். ஆனால், செயற்கை நுண்​ணறிவு என்​பது அந்​தத் தொழில்​நுட்ப மாற்​றங்​களி​லிருந்து மிக​வும் வேறு​பட்​டது.

ஏனெனில், இங்கு மனிதர்​கள் ஒரு​வரோடு ஒரு​வர் போட்​டி​யிடப் போவ​தில்​லை, அவர்​கள் சிந்​திக்​கக்​கூடிய இயந்​திரங்​களோடு போட்​டி​யிட வேண்​டி​யிருக்​கிறது. இப்​படி ஒரு போட்​டியை இதற்கு முன் மனிதன் எதிர்​கொண்​ட​தில்​லை. அதனால், இதன் எதிர்​காலத்​தைப் பற்றி அவனுக்​குத் தெரிய​வில்​லை. அது அவனை மேலும் அச்​சுறுத்​துகிறது.

எடுத்​துக்​காட்​டாக, ஒரு​வர் மளி​கைக்​கடை​யில் பணிபுரி​கிறார். அவருடைய வேலை, வாடிக்​கை​யாளர்​கள் வாங்​கு​கிற பொருட்​களை வீடு வீடாகச் சென்று கொடுக்க வேண்​டும். இதற்​காக அவருக்கு ஒரு மிதிவண்டி கொடுக்​கப்​பட்​டிருக்​கிறது. அவரும் அதை நன்கு பயன்​படுத்​தித் தன்​னுடைய வேலை​யைச் சிறப்​பாகச் செய்​கிறார்.

சில ஆண்​டு​களுக்​குப் பிறகு, அவருடைய கடை மிகப் பெரி​தாக வளர்ந்​து​விடு​கிறது. 'இனிமே சைக்​கிள்ல போய் டெலிவரி கொடுக்​கிறதெல்​லாம் சரிப்​ப​டாது. பைக் ஓட்​டத் தெரிஞ்ச ஒருத்​தரை வேலைக்​குச் சேர்க்​கப்​போறேன்' என்​கிறார் முதலா​ளி.

'வேண்​டாம் முதலா​ளி. எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்க. நானே பைக் ஓட்​டக் கத்​துக்​கறேன்' என்​கிறார் இவர், அதன்​படி ஒரே வாரத்​தில் இருசக்கர வண்​டியை ஓட்​டக் கற்​றுக்​கொண்டு தன்​னுடைய வேலை​யைக் காப்​பாற்​றிக் கொள்​கிறார். இல்​லா​விட்​டால், அவருடைய வேலை பைக் ஓட்​டத் தெரிந்த இன்​னொரு​வருக்கு சென்​றிருக்​கும்.

இன்​னும் சில ஆண்​டு​கள் ஓடு​கின்​றன. அந்த மளி​கைக்​கடை மேலும் பெரி​தாகிறது. 'இனிமே பைக்ல போய் டெலிவரி கொடுக்​கிறதெல்​லாம் சரிப்​ப​டாது. நான் ஒரு ட்ரோன் (பறக்​கும் இயந்​திரம்) வாங்​கப்​போறேன்' என்​கிறார் முதலா​ளி.

இப்​போது அந்​தப் பணி​யாளர் என்ன செய்​வார்? முன்பு அவரால் பைக் ஓட்​டக் கற்​றுக்​கொள்ள முடிந்​தது. ஆனால் இப்​போது ட்ரோனைப் போல் பறக்க முடி​யாதே! அடுத்த சில ஆண்​டு​களில் உலகெங்​கும் பெரும் எண்​ணிக்​கையி​லான பணி​யாளர்​கள் கிட்​டத்​தட்ட இதே​போன்ற ஒரு குழப்​பத்​தைத்​தான் எதிர்​கொள்​ளப் போகிறார்​கள் என்​கிறார்​கள் வல்​லுநர்​கள்.

அதாவது, இப்​போது மனிதர்​கள் செய்​கிற பல வேலைகளை செயற்கை நுண்​ணறி​வின் துணை​யோடு இயங்​கும் கணினிகளோ மற்ற இயந்​திரங்​களோ செய்​யத் தொடங்​கி​விடும். மனிதர்​களால் அவற்​றுடன் போட்​டி​யிடக்​கூட முடி​யாது. நிறு​வனங்​களுக்​கும் இவற்​றில் முதலீடு செய்​வது​தான் வசதி​யாக​வும் சிக்​க​ன​மாக இருக்​கும் என்​ப​தால் இதற்​கு​முன் நாம் பார்த்​தி​ராத வேலை​யில்​லாத் திண்​டாட்​டம் வரப்​போகிறது என்​பது இவர்​களு​டைய கணிப்​பு.

பில்​கேட்​ஸ், ஒபாமா கருத்​து.. இங்கு 'பணி​யாளர்​கள்' என்று சொல்​லப்​படு​வோர் அடிமட்ட வேலைகளைச் செய்​கிறவர்​கள் (Blue-collar Workers) மட்​டுமல்ல. எல்​லாத் துறை​களி​லும் உள்ள எல்​லா​வித​மான வேலைகளை​யும் (White-collar Workers) செயற்கை நுண்​ணறிவு பாதிக்​கக்​கூடும். எடுத்​துக்​காட்​டாக, 'இன்​றைய செயற்கை நுண்​ணறிவு மாதிரி​கள் மென்​பொருள் பொறி​யாளர்​களை​விடச் சிறப்​பாக மென்​பொருள் எழுதுகின்​றன' என்​கிறார் அமெரிக்க முன்​னாள் அதிபர் பராக் ஒபா​மா, 'இது​போன்ற வேலைகளுக்​கெல்​லாம் ஆபத்து வரக்​கூடும் என்று யாரும் இது​வரை கற்​பனைகூடச் செய்​த​தில்​லை.'

`ஆசிரியர்​கள், மருத்​து​வர்​கள் போன்ற மிகுந்த திறமை தேவைப்​படும் பணி​களைக்​கூட வருங்​காலத்​தில் செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பம் கையிலெடுத்​துக் கொண்​டு​விடும்' என்​கிறார் மைக்​ரோ​சாஃப்ட் நிறு​வனர் பில் கேட்​ஸ். செயற்கை நுண்​ணறி​வுத் துறை​யில் இது​வரை ஏற்​பட்​டிருக்​கும் மாற்​றங்​களை​யும், குறிப்​பாக முந்​தைய ஓரிரு ஆண்​டு​களுக்​குள் அது நிகழ்த்​தி​யிருக்​கும் பாய்ச்​சல்​களை​யும் பார்க்​கும்​போது இந்​தக் கணிப்​பு​கள் ஓரளவு உண்​மை​தான் என்று ஊகிக்​கலாம்.

தொழிற்​சாலைகளில்.. செயற்கை நுண்​ணறிவு நுழை​யாத, அல்​லது கட்​டுப்​படி​யா​காத இடங்​களில்​கூட, தானி​யங்​கி​யாக்​கம் (Automation) நுழைந்​து​விடும். இங்கு ஏற்​கெனவே வரையறுக்​கப்​பட்ட விதி​முறை​களின் அடிப்​படை​யில் இயந்​திரங்​கள் செயல்​படு​கின்​றன. அவை சொந்​த​மாகச் சிந்​திப்​பது அடுத்த நிலை. அவ்​வாறு சிந்​திக்​கா​விட்​டாலும் அவை அந்​தச் செயலை நன்கு நிறைவேற்​றி​விட்​டால் போதும்.

எடுத்​துக்​காட்​டாக, ஒரு தொழிற்​சாலை​யில் வெவ்​வேறு பகு​தி​களை ஒன்​றாகச் சேர்ப்​பது, நட், போல்ட் போட்டு முடுக்​கு​வது போன்ற வேலைகளை மனிதர்​கள் செய்து கொண்​டிருக்​கிறார்​கள். அவர்​கள் என்ன செய்​கிறார்​களோ அதை அப்​படியே விதி​முறை​களாக மாற்றி இயந்​திரங்​களுக்​குக் கற்​றுக் கொடுத்​து​விட்​டால், அவை நாள் முழுக்க அதே வேலை​யைச் செய்து கொண்​டிருக்​கும்.

இது​போல் நாள்​தோறும் நாம் செய்​கிற பல வேலைகளைத் தானி​யங்​கி​யாக்​கத்​தின் மூலம் விரை​வாக்​கலாம், சிறப்​பாக்​கலாம். இது ஏற்​கெனவே நம்​மைச் சுற்றி மெது​வாக நடந்து கொண்​டு​தான் இருக்​கிறது. வருங்​காலத்​தில் இது இன்​னும் விரை​வாகப் பரவும். அதன்​மூலம் பல வேலைகளுக்கு மனிதர்​கள் தேவைப்​பட​மாட்​டார்​கள்.

அதே​நேரம் இந்த இயந்​திரங்​களின் மிகச் சிறப்​பான செயல்​திறனுக்கு வரம்​பு​கள் உண்டு என்​பதை நாம் நினை​வில் வைக்​கவேண்​டும். அதாவது, அவற்​றால் ஒரு வேலை​யைத் திரும்​ப திரும்​பப் பலமுறை சிறப்​பாகச் செய்ய இயலும். அதைச் சற்று மாற்​றியமைப்​பது, அல்​லது, அதில் ஏற்​படக்​கூடிய பிழைகளைப் புரிந்​து​கொண்டு திருத்​து​வது போன்​றவற்றை அவற்​றால் சமாளிக்க இயலாது. எனினும், செயற்கை நுண்​ணறி​வும் தானி​யங்​கி​யாக்​க​மும் கை கோக்​கும்​போது இதி​லும் பல முன்​னேற்​றங்​கள் வரும் என்று ஊகிக்​கலாம்.

மனித குறுக்​கீடு தேவை.. ஆக, ஒரே வேலை​யைச் சோர்​வின்​றித் திரும்​பத் திரும்​பச் செய்​வ​தில் தானி​யங்​கி​யாக்​கம் முன்​னிற்​கப் போகிறது. மனிதர்​கள், அமைப்​பு​களின் பேச்​சைப் புரிந்​து​கொள்​வது, அதற்​கேற்ப நடவடிக்கை எடுப்​பது, பல இடங்​களி​லிருந்து தகவல்​களைத் திரட்​டு​வது, அவற்​றின் அடிப்​படை​யில் அவர்​களு​டன் உரை​யாடு​வது, மொழிபெயர்ப்​பது போன்​றவற்​றில் செயற்கை நுண்​ணறிவு முன்​னிற்​கப் போகிறது.

எனினும், இவை கருவி​கள்​தான். வயலினை​யும் புல்​லாங்​குழலை​யும் வீணை​யை​யும் மிருதங்​கத்​தை​யும் சரி​யானபடி கோத்து நல்​லிசையை உண்​டாக்​கக்​கூடிய ஒரு கலைஞரைப்​போல் இவற்​றைச் சரி​யாகப் பயன்​படுத்​தும் திறமை வாய்ந்த மனிதர்​கள் இனிமேலும் தேவைப்​படு​வார்​கள்.

என்​ன​தான் இயந்​திரங்​கள் தொடர்ந்து கற்​றுக் கொண்​டிருந்​தா​லும், ஒவ்​வொரு வேலைக்​கான பணி​யோட்​டத்​தி​லும் (Workflow) மனிதக் குறுக்​கீடு தேவைப்​படு​கிற பல புள்​ளி​கள் இருக்​கத்​தான் செய்​கின்​றன. அதாவது, வல்​லுநர்​களுக்​கும் இன்​னும் தேவை உள்​ளது. அவர்​கள் இந்​தக் கருவி​களைத் தங்​களுக்​கான உதவி​யாள​ராகப் பயன்​படுத்​திக் கொண்டு இன்​னும் செயல்​திறன் மிக்​கவர்​களாக ஆகிறார்​கள்.

எடுத்​துக்​காட்​டாக, ஒரு நாளைக்கு இரண்டு அறு​வைச் சிகிச்​சைகளைச் செய்து கொண்​டிருந்த ஒரு மருத்​து​வர் செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பத்​தைத் தன் உதவி​யாள​ராகப் பயன்​படுத்​திக் கொண்​டால் ஒரு மணி நேரத்​தில் 4 அறு​வைச் சிகிச்​சைகளைச் செய்​து​விடலாம்.

ஏனெனில், இப்​போது இவர் செய்து கொண்​டிருக்​கிற பல வேலைகளை அந்த உதவி​யாளர் இன்​னும் விரை​வாகச் செய்​து​விடும், அவற்றை இவர் மேற்​பார்​வை​யிடு​வார், ஏதாவது தவறு செய்​தால் திருத்​து​வார், தான் மட்​டும் செய்ய வேண்​டிய, தன்​னால் மட்​டும் செய்​யக்​கூடிய வேலைகளைத் தானே செய்​து​விட்டு அடுத்த அறு​வைச் சிகிச்​சையை நோக்​கிச் சென்று விடு​வார்.

வேலை​வாய்ப்பு பெரு​கும்: இங்கு ஒரு மனிதருடைய (மருத்​து​வர்), அவர் சார்ந்​திருக்​கும் நிறு​வனத்​துடைய (மருத்​து​வ​மனை) செயல்​திறனைச் செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பம் மேம்​படுத்​துகிறது. அதனால், இப்​படி யாரெல்​லாம் தொழில்​நுட்​பத்தை உதவி​யாள​ராகப் பயன்​படுத்​திக் கொள்​கிறார்​களோ, அவர்​களு​டைய வேலை​வாய்ப்பு பெரு​கும், குறை​யாது.

ஆக, நாம் கேட்க வேண்​டிய கேள்வி​கள்: செயற்கை நுண்​ணறிவை என்​னுடைய வேலையை இன்​னும் சிறப்​பாகச் செய்​யப் பயன்​படுத்​திக் கொள்​வது எப்​படி? அதை ஒரு கரு​வி​யாகப் பயன்​படுத்தி நான் இன்​னும் நன்​றாகப் பணிபுரிவது எப்​படி? என்​னுடைய துறை​யில் இது தொடர்​பாக என்​னவெல்​லாம் மாற்​றங்​கள், முன்​னேற்​றங்​கள் நடந்து கொண்​டிருக்​கின்​றன? அவற்றை நான் கற்​றுக்​கொள்ள என்ன வழி?

இந்​தக் கேள்வி​கள் எல்லா வேலைகளைச் செய்​கிறவர்​களுக்​கும் பொருந்​தும். சிலருக்கு இவற்​றின் பதில் சற்று கசப்​பான​தாக​வும் இருக்​கலாம். அதாவது, தான் இப்​போது பார்த்​துக் கொண்​டிருக்​கிற வேலை சிந்​திக்​கத் தெரிந்த ஓர் இயந்​திரத்​தால் செய்​யக்​கூடியது​தான் என்று அவர்​கள் உணரலாம். அப்​படிப்​பட்ட வேலைகளுக்​குத்​தான் இந்​தத் தொழில்​நுட்​பத்​தால் உடனடி ஆபத்து இருக்​கிறது.

தொடர்ந்து கற்க வேண்​டும்: அப்​போது, அவர்​கள் உடனடி​யாகத் தங்​களு​டைய திறன் மேம்​பாட்​டைப் பற்றி யோசிக்​கத் தொடங்க வேண்​டும். அதாவது, தங்​களு​டைய அனுபவம், திறமை​களைப் படிக்​கல்​லாகப் பயன்​படுத்​திக் கொண்டு அதே துறை​யில், அல்​லது அது சார்ந்த இன்​னொரு துறை​யில் செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பத்தை உதவி​யாள​ராகக் கொண்டு செயல்​படும்​வித​மான ஒரு வேலைக்கு மாறு​வதைப் பற்​றிச் சிந்​திக்க வேண்​டும், அதற்​காகப் படிக்​க​வும், பயிற்சி பெற​வும் தொடங்க வேண்​டும்.

எடுத்​துக்​காட்​டாக, அந்த மளி​கைக்​கடைப் பணி​யாள​ரால் ட்ரோனைப் போல் பறக்க முடி​யாது​தான், ஆனால், அதை இயக்​கக் கற்​றுக் கொள்​ளலாம். அதன் பிறகு அவர் வெயி​லில் அலைந்து திரி​யாமல், நான்​கைந்து ட்ரோன்​களை வைத்​துக்​கொண்டு ஊர் முழு​வதும் அரிசி, பருப்பு டெலிவரி செய்​ய​லாம்.

இதைக் கேட்​ப​தற்கு மலைப்​பாக இருக்​கலாம். ஆனால், இன்​றைய இணை​யத்​தில் கிட்​டத்​தட்ட எல்​லாப் புதிய தொழில்​நுட்​பங்​களும் இலவச​மாகவே படிக்​கக் கிடைக்​கின்​றன. கற்க வேண்​டும் என்ற விருப்​பம் நமக்கு இருந்​து​விட்​டால் போதும். இயந்​திரங்​கள் தொடர்ந்து கற்​கின்ற உலகத்​தில் நாம் கற்​கத் தயங்​கி​னால் எப்​படி? தொழில்​நுட்ப முன்​னேற்​றத்தை யா​ராலும் தடுக்க முடி​யாது.

எனினும், 'பழையன கழிதலும் புதியன புகுதலும்​' என்​ற வி​திப்​படி தன்​னுடைய திறமை​களை அவ்​வப்​போது புதுப்​பித்​துக்​ கொண்​டிருக்​கிற மனிதனின்​ இயற்​கை நுண்​ணறி​வு அதைப்​ பயன்​படுத்​திக்​ கொண்​டு, அதோடு சேர்​ந்​து வளரும்​ என்​று நம்​புவோம்​.

- nchokkan@gmail.com

SCROLL FOR NEXT