பெண் இன்று

மதுவால் வீழ்ந்த குடும்பம் மகளால் நிமிர்ந்தது | வானவில் பெண்கள்

எஸ்.விஜயகுமார்

பெண்கள் மயானத்துக்குச் செல்ல இன்றளவும் சிலர் அனுமதிப் பதில்லை. அவர்களுக்கு சீதாவைப் பார்த்தால் திகைப்பு எழலாம். காரணம், சேலம் மாநகரின் மையத்தில், பரபரப்பான சாலையை ஒட்டியுள்ள டிஎவிஎஸ் மயானத்தில் சீதா (38) எவ்வித அச்சமும் இன்றிச் சடலங்களை அடக்கம் செய்துவருகிறார். பலரின் வாழ்க்கைப் பயணம் முடியும் இடத்தில், இவர் தனது வாழ்க்கையை 13 வயதில் தொடங்கினார். தனது வாழ்க்கையை சீதாவே விவரிக்கிறார்: “அம்மா, சகோதரிகள் எனச் சிறு வயதில் எல்லாரையும் போல மகிழ்ச்சியாக இருந்தது எங்கள் வீடு. ஆனால், எங்கள் அப்பாவின் மதுப்பழக்கம் அனைவரது மகிழ்ச்சியையும் அன்றாடம் அடித்துவிரட்டிவிடும். தினமும் குடித்துவிட்டு வந்து, அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்து அம்மாவை அடித்து உதைப்பார். அவரது கொடுமையைத் தாங்க முடியாமல் என் அம்மா தற்கொலை செய்துகொண்டார். எங்கள் வாழ்க்கை திசைமாறிய தருணமும் அதுதான்.

மதுவுக்கு அடிமையாகிவிட்ட தந்தையுடன் பெண் குழந்தைகள் இருக்கக் கூடாது என்பதற்காகத் தந்தைவழிப் பாட்டி ராஜம்மாள் என்னையும் என் சகோதரி களையும் தன் பராமரிப்பில் வைத்துக் கொண்டார். மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்யும் பணியைச் செய்துவந்தார் பாட்டி. நான் அவருக்கு உதவ முற்பட்டபோது, எல்லாரையும் போல என்னையும் பள்ளிக்குச் சென்று படிக்க அறிவுறுத்தினார். என் அம்மாவின் மரணத்தில் இருந்து மீள முடியாததால் நான் பள்ளிக்குச் செல்லவில்லை.

பாட்டிக்கு உதவத் தொடங்கினேன். ஒருமுறை ஒரு குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்வதற்காகச் சிலர் வந்த போது, பாட்டிக்கு உதவி செய்பவர்கள் வெளியே சென்றிருந்தனர். எனவே, மயானத்தில் நானே குழியை வெட்டி அடக்கம் செய்துவிட்டேன். அப்போது எனக்கு 13 வயது. கடந்த 25 ஆண்டு களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், ஆதரவற்றோர் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளேன். ஆதரவற்றவர்களின் சடலங்கள் மட்டுமே 10 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். ஆதரவற்றவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் வர மாட்டார்கள். இறந்தவர் பெண்ணாக இருந்தால், அந்தச் சடலத்துக்கு நானே அனைத்துச் சடங்குகளையும் செய்து, பால் ஊற்றி நல்லடக்கம் செய்துவிடுவேன். ஆண் சடலம் என்றால், அருகிலுள்ள மற்றொரு மயானத்தில் உள்ளவர் சடங்குகளைச் செய்து விடுவார். ஆதரவற்றோர் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான செலவுகளை நானே செய்துவிடுவேன். மற்ற சடலங்களைக் கொண்டுவருபவர்கள் செலவுக்குக் கொடுப்பதை வாங்கிக்கொள்வேன். இவ்வளவுதான் வேண்டுமென்று கேட்டு வாங்குவது கிடையாது.

இங்கே பகல், இரவு, நல்ல நாள், கெட்ட நாள் என எதுவும் இல்லை. தினமும் காலையில் வந்தால் மாலை வரை மயானத்தில்தான் இருப்பேன். சிலர் இரவிலும் சடலங்களைக் கொண்டுவருவார்கள். அந்த நேரத்திலும் வீட்டில் இருந்து வந்து, சடலத்தை அடக்கம் செய்துவிட்டுச் செல்வேன். அமாவாசை அன்றும் இரவில் மயானத்துக்கு வந்திருக்கிறேன். எப்போதும் பயந்தது கிடையாது. இவ்வளவு ஆண்டுகளில் பேய், பிசாசு என எதையும் பார்த்ததில்லை, எந்த அமானுஷ்யமான சப்தத்தையும் கேட்டதில்லை. ஆனால், இரவில் சடலம் கொண்டுவருவோம் என்று யாராவது சொன்னால், மயானத்துக்கு வந்து காத்திருப்பேன். அந்த நேரத்தில் போதை மனிதர்களால் ஆபத்து வரும் என்று பயந்து வாயிற்கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு, மயானத்துக்குள்ளேதான் இருப்பேன். வெளியே இருப்பதைவிட, இங்கிருப்பதுதான் பாதுகாப்பாக இருக்கும்.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் போன்றவற்றை அடக்கம் செய்யும்போது, அருவருப்பில்லாமல் அவர்களையும் என் குடும்பத்தினராகவே கருதி அடக்கம் செய்வேன். ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் சடலங்களை இறக்கிவைப்பது, குழியை வெட்டிச் சடங்குகளை செய்வது என அனைத்து வேலைகளையும் செய்வேன்.

சில மரணங்கள் நம்மை உலுக்கிவிடும். தம்மம்பட்டி அருகே ஒரு வீட்டில், குழந்தைகள் கறி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டதால் 100 ரூபாயைக் கொடுத்து அதில் 50 ரூபாய்க்கு மட்டுமாவது இறைச்சியை வாங்கிவருமாறு ஒரு பெண் தன் குடிகாரக் கணவனிடம் சொல்லியிருக்கிறார். குழந்தைகள் பசியோடு இருக்க, சாப்பாடு செய்துவிட்டுக் குழம்புக்கான மசாலாவை அரைத்து வைத்துத் தயாராக இருந்தபோது, 100 ரூபாய்க்கும் குடித்துவிட்டு வெறுங்கையோடு கணவன் வீடு திரும்பினான். குழந்தைகளின் பசி ஏக்கத்தைப் போக்க முடியவில்லையே என்று நொந்து, அடுப்பில் இருந்த நெருப்பை எடுத்துத் தனக்குத் தீவைத்துக் கொண்டார் அந்தப் பெண். அருகில் இருந்த அவருடைய 16 வயதுப் பெண்ணும், அம்மாவைப் பிரிந்து இருக்க மாட்டேன் என்று கூறியபடியே, எரிந்துகொண்டிருந்த தாயை இறுக்கி அணைத்துத் தானும் தீயில் எரிந்தார். அவர்கள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்த சில நாள்களில் உயிரிழந்து, இங்கே கொண்டு வரப்பட்டனர். அவர்களது சடலங்களை அருகருகே அடக்கம் செய்தபோது, 13 வயதுக்குப் பின்னர் மீண்டும் என் தாயின் மரணத்தைக் கண்டதுபோல இருந்தது. மனம் கனத்துப்போனது. குடியால் சீரழியும் குடும்பங்களை எப்படி மீட்கப்போகிறோம்?

வாழ்க்கையில் மகிழ்ச்சி, துக்கம் எதுவும் என்னைப் பாதிக்காது. எல்லாவற்றையுமே ஒரே மாதிரியாகப் பார்க்கும் மனநிலை வந்துவிட்டது. வாழ்க்கையை அதன் போக்கில் ஓடவிட்டு எதிர்பார்ப்பு இல்லாமல் அமைதியாக வாழ்வது, கவலையற்ற நிலையைத் தருகிறது” என்று சீதா பேசிக்கொண்டிருக்க அழைப்பு மணி ஒலித்தது. செல்போனை எடுத்து, சடலம் வர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டபடி வரப்போகும் ஒருவருக்கான இடத்தைத் தேர்வு செய்யக் கிளம்பினார். இவரைப் போன்றவர்களுக்கு அரசு ஏதேனும் ஒரு வகையில் உதவினால் இவர்களது வாழ்க்கையும் மேம்படும்.

SCROLL FOR NEXT