பெண் இன்று

இதுவும் உருப்படும் வழிதான் | உரையாடும் மழைத்துளி - 29

தமயந்தி

புத்தகம் வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல அருகிவரக்கூடிய ஒரு சூழல் என்று இக்காலக்கட்டத்தை நாம் சொல்கிறோம். பெருகிவரும் கணினிப் பயன்பாடும் அதற்கு ஒரு முக்கியமான காரணம். அனைத்தையுமே காட்சிரீதியாகப் பார்க்க ஆரம்பித்த பிறகு வாசிக்கும் பழக்கம் என்பது குறைந்துவருகிறது. இது மனித மனம் சார்ந்த மாற்றம்.

புத்தகக் காதல்: சென்ற முறை நான் ரயிலில் பயணித்தபோது எனக்கு எதிரில் நடுத்தர வயதில் ஒரு பெண் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த காட்சி மிக அழகான ஒரு காட்சியாக இருந்தது. அந்தப் பெண்ணுக்கு ரயிலில் தன்னைச் சுற்றி நடக்கும் எந்தப் பிரச்சினையிலும் ஈடுபாடு இல்லை. தான் வாசிக்கும் உலகம் குறித்து அவர் மிகவும் கவலைப்பட்டதாகத் தெரிந்தது. சில நேரம் அவர் உச்சு கொட்டிக்கொண்டார். அவர் வாசிக்கும் புத்தகத்தில் இருக்கும் உலகத்தில் வாழும் மனிதர்களை நினைத்துக் கவலைப் பட்டுக்கொண்டிருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

நீண்ட நேரம் கழித்து அவரிடம் பேச்சு கொடுத்தேன். சிறு வயதிலேயே திருமணம் ஆனதால் குடும்பப் பொறுப்புகள் வந்துவிட, ஒருகட்டத்தில் அவை எல்லாமே தீர்ந்த பிறகு தனக்கான நேரத்தை இப்படி வாசிக்கும் பொழுது களாக அவர் மாற்றிக்கொண்டதைச் சொன்னார். “உங்களுக்கும் வாசிக்கப் பிடிக்குமா?” என்று அவர் கேட்டபோதே, அதில் நிறைந்த வாஞ்சை இருந்தது. “உங்களிடம் புத்தகங்கள் இருக்கின்றனவா?” என்று அவர் கேட்டார். அந்த நொடியில் அவர் மிகவும் பேரழகாக இருப்பதுபோல் தோன்றியது. என் பையில் இருந்த புத்தகங்களை அவர் எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டும்போது அதில் மிகப் பெரிதான ஒரு காதல் இருந்தது. உண்மையில் பார்த்தால் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பெண்கள் ஆண்களைவிட அதிகமாக வாசிக்கின்றனர்.

அதிகமாக வாசிக்கும் பெண்கள்: உலக அளவில் ஆண்களின் வாசிக்கும் சதவீதம் 44.4ஆகத் தற்போது குறைந்துவிட்டது. பெண்கள் இன்னும் அதே 55 சதவீதமாகக் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாகத் தங்களுடைய எண்ணிக்கையில் இருந்து குறையாமல் வாசிப்புப் பழக்கத்தை மேற்கொண்டுவருகின்றனர். ஒரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சமூகத்திலும் வாசிப்பதால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று நாம் நிச்சயமாக ஆலோசிக்க வேண்டும். தனி மனிதருக்கு இன்னொரு மனிதரின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய சமூகச் சூழலில் ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள்கூட மிக மிகக் குறைந்துவிட்டன. அப்படி இருக்கும்பட்சத்தில் மெல்ல மெல்ல மனித இயல்பின் ஈரத்தன்மை குறைந்துவருகிறது என்பதைப் பல இடங்களில் பார்க்கிறோம். குறிப்பாகச் சமூக ஊடகங்களில் ஏதோவொரு பெண்ணின் ஒளிப்படத்திற்குக் கீழே இடம்பெறும் அவ்வளவு கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அது நமக்குப் புலப்படுகிறது.

குறைவாக வாசிக்கும் இளைஞர்கள்: புத்தகங்கள் வாசித்து அதைப் பற்றிப் பேசும் வழக்கமும் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதன் சதவீதமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 60.5% பெண்கள் புத்தகங்களை வாசிக்க முயன்று, அதில் 50% பெண்களே வாசித்து முடிக்க இயலும் சூழ்நிலையில் உள்ளனர். 45 கோடி இளைஞர்கள் இருக்கும் இந்தியாவில் 33 கோடி இளைஞர்களே படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 8 கோடி இளைஞர்களே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அப்படியெனில் வெறும் 25% இளைஞர்களே வாசிக்க முயல்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக ஒரு மனிதர் 200இல் இருந்து 400 வார்த்தைகள் வரை வாசிப்பதாகத் தெரிகிறது.

ஏன் வாசிக்க வேண்டும்?- என் பால்ய காலத்துச் சிநேகிதியின் அத்தை ஒருவர் தன் வாழ்நாளைப் புத்தகம் வாசிப்பதற்காகவே செலவழித்தார். அவர் தன்னுடைய சொத்தாகவும் சேர்மான மாகவும் ஒரு கண்ணாடி பீரோ முழுக்கப் புத்தகங்களைச் சேமித்து வைத்திருந்தார். இன்று அவர் இல்லை என்றாலும், அந்தக் குடும்பம் அந்தப் புத்தக அலமாரியை இன்னும் நேசித்துவருகிறது. தாங்கள் வாங்குகிற நகைகளையும் நிலங்களையும்விடப் புத்தகங்கள் அறிவுசார் பரம்பரை வளர்ச்சிக்கான முக்கியப் பங்கை ஆற்றிக்கொண்டே இருப்பது பலருக்குப் புரிவதில்லை என்பதே மிகத் துயரமானது. இன்னும் சில வீடுகளில் பெண்கள் வாசித்தால் அல்லது எழுதினால், “உருப்படற வேலையப் பாரு” என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். என்ன ஒரு அழிச்சாட்டியமான புரிதல் அது.

வாசிப்பதன் மூலமாகப் பொருளாதார ரீதியாக மனிதர்கள் பணம் ஈட்டுவது சாத்தியமானால், அப்போது வாசிப்பது என்பது உருப்படாத விஷயமாக இருக்காது. ஒரு மனித மனதின் வளர்ச்சிக்கு வாசிப்பது எந்த அளவுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது என்பதை யாரும் அறிவதே இல்லை. வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் அதைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியாகவும் ஊன்றுகோலாகவும் வாசிப்பே இருக்கும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் வாசித்தால் அது அந்தக் குடும்பத்தில் 10 பேர் கல்வியறிவு பெறுவதற்குச் சமமானது. ஒரு சமூகத்தில் 10 பெண்கள் வாசித்தால் அது 100 பேர் கல்வியறிவு பெறுவதற்குச் சமமானது. இந்த அரசு பெண்களுக்குக் கட்டணம் இல்லாப் பேருந்துகளைச் சாத்தியப்படுத்தியதுபோல் பெண்கள் வாசிக்கும் வகையில் படிப்பகங்களைச் சாத்தியப்படுத்த வேண்டும். அதுவே பெண்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும்.

(உரையாடுவோம்)

SCROLL FOR NEXT