உயிர் மூச்சு

நெய்தல் முன்வைக்கும் பல்திணை உரையாடல் | உலகப் புத்தக வாரம்

இராஜ.மதிவாணன்

தமிழகக் கடற்கரைப் பகுதியான சோழ மண்டலத்தின் திருவள்ளூர் தொடங்கி பாக் குடா, மன்னார் வளைகுடா வழியே மேற்கு மண்டலக் கடற்கரையின் கன்னியாகுமரி வரை 20 ஆண்டு காலத் தொடர் பயணம். ஒரு கடலோடியின் கண்களின் வழியே நெய்தல் தரிசனம்.

தந்தையின் கரம் பற்றி மகிழ்வுடன், வியப்புடன், பேராவலுடன் வழிப்பயணம் செல்லும் சிறுவனாக நான். எத்தனையோ புனைகதைகளில் மட்டுமே கடலைக் கண்ட எனக்கு, ஒரு நனவுலகத்தின் கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையை, கறுத்த கோடுகளுடன் வரைபடமாக நம் கண்முன் விரித்து, ஆழமாக, அகலமாக, ஆவேச அலைகளுடன் விரிகிறது, பேராசிரியர் வறீதையாவின் ‘துறையாடல்’.

சந்திப்பு, உரையாடல், விவாதம் என மூன்று பெரும் பிரிவுகளாகச் சுமார் ஆயிரம் பக்கங்களை நெருங்கி, பொது வான மனிதக் குலத்திற்கான, வரும் தலைமுறைகளுக்கான, கடல்சார் மக்கள் பற்றிய ஓர் அருமையான சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் ஆய்வுப் பெட்டகம் ‘துறையாடல்’.

ஏறத்தாழ 30 ஆண்டு காலமாகக் காடு காக்க, வனத் துறையுடன் இணைந்து மேற்கு மலைத் தொடர்ச்சியின் காளிகேசம் தொடங்கி மேகமலை வரை, 400க்கும் மேற்பட்ட மலையோர கிராமங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தும் ஒரு வீதி நாடகக் கலைஞனான நான், எம் மலைகளின் உச்சியில் நின்று பார்க்கும்போது ஒன்று மிகத் தெளிவாகத் தெரிகிறது.

மலையின் உயரத்தைவிட, கடலின் ஆழத்தைவிட, கடல்சார் மக்களின் அன்றாடப் பாடுகள் வலி மிகுந்தவை. முக்கியமாக, கடல்தான் கானகத்தின் தாய்என்பதை, உரக்கச் சொல்ல வேண்டும் என்கிற உண்மையையும் உணர வைத்திருக்கிறது. இயற்கைப் பேரிடர்களான ஒக்கி புயல், சுனாமி, மனிதப் பேரிடர்களான இறால் பண்ணை, அணுமின் நிலையங்கள் போன்றவற்றின் விளைவுகள்; இவற்றின் ஊடே எல்லை தாண்டும் மீனவர் சிக்கல்கள், மீனவ மக்களிடையே பிரிவினைகள், போட்டிகள், அரசின் பொருந்தாக் கொள்கைகள், கடல் மரணத் துயரம், மீனவ அபலைப் பெண்களின் அழுகுரல், புத்தக வழிப் பயணத்தில் நம் மனதை ஆங்காங்கே பாரமாகக் கனக்க வைக்கின்றன. இவற்றில் எதைச் சொல்ல.. எதை விட..? முழுமையும் ‘துறையாடல்’ விவரிக்கிறது.

ஓர் ஒளிப்படக் கலைஞனின் நேர்த்தியுடன் எழுத்துப்படைப்பைத் தந்திருக்கிறார் வறீதையா. உலகமயமாதலும், தனியார்மயமாதலும் இன்று சுற்றுச்சூழலை அடியோடு நாசமாக்குகிற வணிகப் பேரழிவு முயற்சிகள். அது காடோ, கடலோ, சமவெளியோ அல்லது பழங்குடியோ, மீனவனோ, விவசாயியோ... பாதிப்பு அடுத்த தலைமுறையில் அனைவருக்கும்தான் என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது.

கடல்சார், காடுசார், நிலம்சார் மனிதர்களாக, விளிம்பு நிலை மனிதர்கள் அந்நியப்பட்டு நிற்பது ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் அவமானம். இந்தத் தளங்கள் ஒன்றுபட வேண்டும். திணைக் குழுக்களுக்கு இடையே உரையாடல்களை முன்னெடுப்பதே காலத்தின் தேவை என்பதை ‘துறையாடல்’ அழுத்தமாக முன்வைக்கிறது.

ஓர் ஒக்கி புயல், சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், வயநாடு நிலச்சரிவு நமக்கு உணர்த்துவது இயற்கையின் விதிகளை மனிதன் முறி யடிக்க முயன்றால், அதன் விளைவு எதிர்கொள்ள முடியாத பேரழிவு என்கிற படிப்பினைதான். பேராசிரியர் வேதசகாய குமார், மறைந்த சுரேஷ் தர்மா, பேராசிரியர் பிரான்சிஸ் ஜெயபதி, களியல் அந்தோணி சாமி போன்ற ஏராளமான கருத்தாளர்களின் உரையாடல்கள் கண் திறக்க வைக்கின்றன. இதுபோன்ற இயல்பான பதிவுகள்தான் வரலாறுகள். காடும் கடலும் சமவெளிகள் வழியே அதன் மக்களுடன் இணையட்டும்.

துறையாடல்,
தொகுப்பாசிரியர்:
வறீதையா கான்ஸ்தந்தின், பக்கங்கள் 975,
கடல்வெளி வெளியீடு,
விலை: ரூ.1,100/-.
தொடர்புக்கு: 94422 42629

- கட்டுரையாளர், இயற்கை விழிப்புணர்வுச் செயல்பாட்டாளர்; arumbugal07@gmail.com

SCROLL FOR NEXT