திரையில் ‘ஒலி’யின் வரவு நாடகக் கலைக்குத் தேய்மானத்தையும் நாடகக் கலைஞர்களுக்குத் திரையுலகம் என்கிற புதிய வாசலையும் திறந்துவிட்டது. சலனப் படங்களில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத கம்பெனி நாடக நடிகர்கள், பேசும்படம் வந்ததும் திரையுலகின் மீது தீவிர ஈர்ப்பு கொண்டனர்.
அதற்குக் காரணம், நாடகங்களைப் பேசும் படம் அப்படியே பிரதியெடுத்ததுதான். தமிழ் பேசும்பட உலகம் 100 படங்கள் என்கிற எண்ணிக்கையைத் தொட முயன்ற முதல் 7 ஆண்டுகளுக்குள் நாடக உலகையே அது முழுவதுமாகச் சார்ந்து நின்றது.
மேடையில் புகழ்பெற்ற நாடகங்கள் ஸ்டுடியோக்களில் நடிக்கப்பட்டன. தாங்கியில் நிலையாக நிறுத்தப்பட்ட கேமராவில் ஒரே நிலையான கோணத்தில் அவை படமாக்கப் பட்டன. இவ்வாறு நாடகங்கள் அப்படியே படச்சுருளில் பதிவு செய்யப்பட்டதன் வழியாக நுழைந்த நாடகப் பாடல்கள் தற்போது வரை தமிழ் சினிமாவின் முக்கியக் கூறுகளில் ஒன்றாக நிலைபெற்றுள்ளன.
புத்தாயிரத்துக்குப் பிறகான கதை சொல்லும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குறிப்பாக க்ரைம் த்ரில்லர் கதை சொல்லும் முறை காரணமாகப் பாடல்கள் திரைக்கதையின் வேகத்துக்குத் தேவையற்ற தடை எனக் கருதப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போய்விட்டது.
ஆனாலும் அவை, சினிமாவிலிருந்து முற்றாக அகல மறுப்பது, தாய்க் கலையான நாடகத்தின் தாக்கம் எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டு கிறது. அதேபோல், சினிமாவைக் காட்சியின் கலையாக முன்னகர்த்துவதில் தமிழ் வெகுஜன சினிமா இன்னும்கூடப் பழைய கோட்பாடுகளைக் கடந்து வர மனமில்லாமல் தேங்கி நிற்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
400 அடி 1000 அடியானது! - பேசும்பட யுகம் தொடங்கிய 10 ஆண்டுகளுக்கு முன்னரே, பாடல்களைப் புறந்தள்ளிய பயில்முறை சபா நாடகங்கள், தொழில் முறைக் குழுக்களாக 1920களில் தேர்ச்சி பெற்றுவிட்டன. குறிப்பாக சுகுண விலாச சபா நாடகங்களில் பல, 40களில் வரிசையாகப் படமானபோது ஓரளவுக்கு சினிமா தன்னுடைய மேற்கத்தியத் தன்மையை உணரத் தொடங்கியிருந்தது எனலாம்.
தமிழ் சினிமாவின் கதை சொல்லல் என்பதே மேற்கத்திய நாடக முறையிலிருந்து கடன் வாங்கப்பட்டதுதான். பம்மல் சம்பந்த முதலியார் மேற்கத்திய ‘அங்க’ முறையி லேயே தன் நாடகங்களை எழுதியது திரை வடிவத்துக்கும் பொருந்தியதால் அவருடைய நாடகங்கள் அடுத்தடுத்துப் படமானதில் வியப்பில்லை.
பேசும் படம் உருவான முதல் 5 ஆண்டுகள் வரை, ஒரு கம்பெனி அல்லது சபா, நாடகத்தைத் திரைப்படமாக்கத் தேர்வு செய்தால், அந்த நாடகத்தின் மொத்தக் குழுவினரும் கல்கத்தா, பம்பாய், கோலாப்பூர், புனே ஆகிய நான்கு நாகரங்களில் ஏதாவது ஒன்றுக்கு ரயிலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த நான்கு நகரங்களில்தான் ‘சவுண்ட் ஸ்டுடியோக்’கள் இருந்தன. அழைத்துச் செல்லப்படும் படக்குழுவினர், படப்பிடிப்பு முடியும்வரை ஸ்டுடியோவிலேயே தங்கியிருந்து மேடையில் ஏற்று நடித்ததை அப்படியே நடித்தனர்.
நடிகர்கள் 400 அடி படச்சுருள் முடியும் வரையில் நடித்தனர். இதனால் ஒரு டேக் என்பது 400 அடியாக இருந்தது. பின்னர் அடுத்த 400 அடிப் படச்சுருள் மாற்றப்பட்டதும் விட்ட இடத்தி லிருந்து நடிப்பைத் தொடர்ந்தனர். இந்தத் தடையால் நடிகர்களின் மேடை நடிப்பில் தொடர்ச்சியின்மையும் தொய்வும் ஏற்பட்டதால் 1000 அடி பிலிம் சுருளைப் பொருத்தும் விதமாக கேமராக்களில் ‘மேகசின்’கள் பெரியதாக ஆக்கப்பட்டன.
மதராஸில் சவுண்ட் ஸ்டுடியோ! - தமிழ் பேசும் படங்களைத் தயாரிக்க, மகாராஷ்டிரம், வங்காளம் என வட மாநில நகரங்களுக்குப் போய்க்கொண்டிருந்த நிலையை மாற்றிக் காட்டினார் ஒரு சலனப் பட விநியோகஸ்தர். ‘எக்ஸிபிட்டர் பிலிம் சர்வீஸ்’ என்கிற நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஏ.நாராயணன், ஒரு கட்டத்தில் சலனப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.
ஒலியின் வரவுக்குப் பிறகும் தமிழர்களும் தென்னிந்தியர்களும் வடமாநில நகரங் களுக்குச் செல்வதைக் கண்ணுற்ற இவர், ‘சவுண்ட் சிட்டி’ என்கிற தென்னிந்தி யாவின் முதல் சவுண்ட் ஸ்டுடியோவை 1.4.1934இல் சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் தொடங்கினார்.
இங்கே தயாராகும் பேசும் படங்களுக்கு ஒலிப்பதிவாளராகத் தன்னுடைய மனைவி மீனாவையே அமர்த்தி னார். அவ்வகையில் இந்திய சினிமாவின் முதல் பெண் ஒலிப்பதிவாளராக ஆனார் மீனா நாராயணன். வட இந்தியாவைச் சார்ந்திருக்காமல், முழுவதும் தென்னிந்தியத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்களைக் கொண்டு ‘சவுண்ட் சிட்டி’யில் இவர்கள் தயாரித்த பேசும்படம் ‘சீனிவாச கல்யாணம்’ (1934). சவுண்ட் சிட்டியைத் தொடர்ந்து பல ஸ்டுடியோக்கள் கோடம்பாக்கத்தில் சூழ் கொண்டன.
முதல் பாடலாசிரியர்! - சென்னையில் சவுண்ட் ஸ்டுடியோக்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்ட பின் நாடகக் கலைஞர்கள் திரையுலகம் நோக்கிக் குவியத் தொடங்கினர். கம்பெனி நாடக் குழு வாத்தியார்கள் பலர் சென்னை ஸ்டுடியோக் களுக்குப் படையெடுத்தனர். அவர்களுக்கு அங்கே ராஜமரியாதை அளிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் முதல் பேசும்படம் என்று எடுத்துக்காட்டப்பட்டு வரும் ‘காளிதாஸ்’ (1931) படத்துக்கு அனைத்துப் பாடல் களையும் எழுதி, தமிழ்த் திரை உலகின் முதல் பாடலாசிரியர் என்கிற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுக்கொண்டவர் மதுரகவி பாஸ்கரதாஸ்.
700க்கும் அதிகமான நாடகப் பாடல்களை எழுதியிருக்கும் இவர், ‘காளிதா’ஸில் தொடங்கி, ‘வள்ளி திருமணம்’ (1933), ‘போஜராஜன்’ (1935), ‘சந்திர ஹாசன்’ (1936), ‘ராஜா தேசிங்கு’ (1936), ‘உஷா கல்யாணம்’ (1936), ‘தேவதாஸ்’ (1937), ‘சதி அகல்யா’ (1936), ‘ராஜசேகரன்’ (1937), ‘கோதையின் காதல்’ (1941), ‘நவீன தெனாலிராமன்’ (1941) வரை 10 படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இவற்றில் 1935ல், போஜராஜன் படத்தில் மட்டுமே 45 பாடல்களை எழுதிக் குவிக்க அத்தனையும் அந்தப் படத்தில் இடம் பிடித்தன. மெட்டுகளை உயர்த்திப் பிடிக்கும் கவித்துவமும் தேசப் பக்தியும் இவரது பாடல்களில் முதன்மைப்பட்டாலும் காதலும் நகைச்சுவையும் சரிசமமான பங்கை வகித்தன. ஒரு பாடலாசிரியராகத் திரையுலகில் பாஸ்கரதாஸ் தொடங்கி வைத்த ராஜபாட்டை, பல தாசர்களை உருவாக்கியது.
பாரதிதாசன், கம்பதாசன், ராமதாசன், வாணிதாசன், கண்ணதாசன் வரை இது நீண்டது. தன் எழுத்தின் வழியாகப் பேசும் படவுலகில் பெரும் புகழ்பெற்ற முதல் கம்பெனி நாடக ஆளுமை என்றால் அவர் பாஸ்கரதாஸ்தான். சபா நாடக உலகிலிருந்து திரைக்குள் நுழைந்து புகழ்பெற்ற தொடக்கக் கால ஆளுமைகளில் பம்மல் சம்பந்த முதலியாரும் கந்த சாமி முதலியாரும் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற வர்கள் ஆகிறார்கள்.
கந்தசாமி முதலியார் நல்ல கல்வியாளர், செல் வந்தர். சுகுண விலாச சபாவின் ‘மனோகரன்’ நாடகத்தில் ‘வசந்தசேனை’ கதாபாத்திரம் ஏற்று நடிக்கத் தொடங்கியவர். நாடகக் கலையின் மீதிருந்த காதலால் தாம் பார்த்து வந்த அரசுப் பணியை உதறித்தள்ளி விட்டு முழுநேர நாடக ஆசிரியர் ஆனவர்.ஒரு கட்டத்தில், சிறுவனாக இருந்த மகன் எம்.கே.ராதாவை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்துவிட்டு அங்கேயே இவரும் நாடக ஆசிரியராகச் சேர்ந்தார்.
அங்கே சக ஆசிரியராக இருந்த காளி என்.ரத்னம் பயிற்சி பெற்று வந்த சிறார் நடிகர்களிடம் கண்டிப்பு காட்டினார். ஆனால், கந்தசாமி முதலியார், மாணவர்களுக்கு அன்பாகச் சொல்லிக்கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றார். இதனால் இவரிடம் நாடகம் கற்கச் சிறார் மாணவர்கள் குவிந்தனர்.அப்படி அவரிடம் சிறுவனாகச் சேர்ந்த பி.யூ.சின்னப்பா, தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக ஆனார்.
பின்னாளில் தமிழ் சினிமாவின் நகைச்சுவையை உயர்ந்த தரத்தில் வைத்த என்.எஸ்.கிருஷ்ணன், எதிர்மறை நகைச்சுவை நடிப்புக்குப் பெயர்பெற்ற பாலையா, சிறந்த குணச்சித்திரம் என்று பெயர்பெற்ற எம்.ஜி.சக்ரபாணி, திராவிட அரசியல் வளர்ச்சிக் குப் பெரும் காந்தமாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் உள்படப் பலர், கந்தசாமி முதலியாரின் மாணவர்களாக மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரிடம் பால்யம் முதல் நடிப்பைப் பயின்று வளர்ந்த வர்கள்தான். அப்படிப்பட்ட கந்தசாமி முதலியாரின் நாடகச் செயல்பாடுகளால் தமிழ் சினிமா கண் விழித்துக்கொண்டதும் நடந்தது.
(விழிகள் விரியும்)
- jesudoss.c@hindutamil.co.in