திருச்சி மாவட்டம், தொட்டியம் அனலாடீஸ்வரர் கோயில், தீராத நோய்கள் தீர்க்கும் திருத்தலமாக போற்றப்படுகிறது. வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்னும் 3 அரக்கர்களும் தாரகாசுரனின் புதல்வர்கள் ஆவர்.
முன்னொரு காலத்தில் இவர்கள் மூவரும் அரிதினும் அரிதான வரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்தனர். மூவரும் தங்களுக்கு பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட காவல் மிக்க அரணில் தங்கி வானவீதி எங்கும் சஞ்சரித்து உலாவும் வரம் வேண்டும் என்று வேண்டினர். சற்றும் யோசிக்காமல், பிரம்மதேவரும் வரம் அளித்தார்.
அசுரர்கள் மூவரும், தேவர்கள் மற்றும் தவ முனிவர்களுக்கு பல இன்னல்களை விளைவித்தனர். இதுதொடர்பாக தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பரமன், பூமியைத் தேராகவும், சூரிய, சந்திரர்களைக் குதிரைகளாகவும், நான்முகனை சாரதியாகவும், மகா மேரு மலையை வில்லாகவும், ஆதிசேஷனை வில்லின் நாணாகவும், திருமாலை சிறகாக அமைத்தும் அக்கினி தேவனை அம்பின் முனையாகவும், ஏனைய தேவாதி தேவர்களை எல்லாம் போர்க் கருவிகளாக மாற்றியமைத்தும் போர்க் கோலம் பூண்டு வாயுவின் வேகத்தை விட அசுர கதியில் செயல்படத் தொடங்கினார்.
அம்பின் அக்கினி கிளம்பிப் போய் மூன்று அசுரர்களையும், முப்புரங்களையும் சுட்டெரித்து சாம்பலாக்கியது. மாசிலாமணியாகிய தேவாதி தேவன் இறைவன் செய்த அட்ட வீரட்டங்களில் இந்த திரிபுர தகனமும் ஒன்றாக விளங்குகிறது.
முன்னதாக, வானவீதியில் விரைந்து வந்து கொண்டிருந்த வேளையில் நிலவளம், நீர்வளம் மிக்க ஒரு திருத்தலத்தில் நான்முகன் செய்த யாக குண்டத்தின் மீது பரம்பொருள் இறங்கி ஆவேசத்துடன் நர்த்தனம் புரிந்தார். இவ்வாறாக, அக்னி குண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால் இத்தல ஈசனின் நாமம் அனலாடீஸ்வரர் என காரணப் பெயராக விளங்குகிறது.
நான்முகன் வேள்வி செய்த யாக குண்டமே தற்போது அம்பாள் திரிபுரசுந்தரி தீர்த்தமாக (கிணறு) அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ளது. பல காலம் தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த தீர்த்தப் பிரசாதத்தை அருந்தி வர அவர்களின் பிணி நீங்கும் என்பது ஐதீகம். நாவுக்கரசர், அருணகிரிநாதர், காரைக்கால் அம்மையார் இந்த நர்த்தனத்தைப் பற்றி பாடியுள்ளனர். இந்த திரிபுர சம்ஹார சம்பவத்தை எடுத்துச் சொல்லும் விதமாக, தொட்டியம் ஸ்ரீ அனலாடீஸ்வரர் கோயிலில் இடதுகை வில்லை வளைப்பது போலவும், வலக்கை விரல் அம்பு விடுவது போலவும் உற்சவ மூர்த்தியை வடிவமைத்துள்ளனர்.
பிரம்மன் இத்தலத்தில் தங்கி யாகம் மேற்கொண்டதால் பிரம்மபுரம் என்றும், மத்திய மலையை அடுத்துள்ளதால் மத்தியாசல ஷேத்திரம் என்றும், சிவபிரான் மூன்று மதில்புரங்களையும் எரித்த காரணத்தால் திரிபுர சம்ஹார ஷேத்திரம் எனவும் பல பெயர்களால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. எனினும், கோயில் கல்வெட்டுச் செய்தியில் இவ்வூர்ப்பெயர் கௌத்த ராஜநல்லூர் என்பதாகும். பிற்காலத்தில் தொட்டியர் எனப்படும் இனமக்கள் பெருமளவில் இங்கு வந்து குடியேறிய காரணத்தால் பிற்காலத்தில் ஊர்ப் பெயர் மருவி தொட்டியம் என அழைக்கப்படலானது.
நான்குபுறமும் உயர்ந்த திருமதிலும், இரு சுற்றுக்களைக் கொண்டும் பெரிய ஆலயமாக கிழக்குப் பார்த்த வண்ணம் இக்கோயில் அமைந்துள்ளது. பிரதான வாசல் சாலக்கோபுர வாசலுடன் உள்ளது. கிழக்குச் சுற்றில் பலிபீடம், செப்புக்கவசம் போர்த்திய கொடிமரம், நந்தீசர் மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இதையடுத்து, மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதன் வழியே உள்பிரகாரம் செல்லலாம்.
உள்சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் மண்டப கட்டுமானமாக அமைந்துள்ளது. இந்த திருப்பணிகளை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்புஇத்தலத்தில் கோட்டை, அரண்மனை ஆகியவற்றைக்கட்டி பாளையக்காரராக ஆட்சி செய்த ஜங்கராயன் என்ற சிற்றரசன் கட்டியதாக சொல்லப்படுகிறது.
உள்சுற்று மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. கருவறை மூலவராக, சாந்நித்தியமிக்க ஸ்ரீஅனலாடீஸ்வர் அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலையும், தொட்டியமும் அக்னித் தலங்களாகும். மூலவர் விமானம் வேசர வடிவில் அமைந்துள்ளது. சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் தனிக்கோயிலாக திரிபுரசுந்தரி அம்பாள் சந்நிதி உள்ளது. தினமும் 4 கால பூஜை நடைபெறுகிறது.