அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பரஸ்பர வரி விதிப்பு திட்டத்தை 90 நாட்களுக்கு (சீனாவைத் தவிர) நிறுத்தி வைத்துள்ளார். அதே போல் மின்னணுப் பொருட்களுக்கான வரிகளையும்குறைத்தார். அவர் ஏன் அதைச் செய்தார்? அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி உயர்வு ட்ரம்ப்பை இந்த நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தியிருக்கலாம்.
அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியவர்கள் (ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) தங்களிடம் உள்ள அமெரிக்க அரசு பத்திரங்களை விற்கத் தொடங்கியதால் இது நடந்தது. இதனால் அவற்றின் விலை குறைகின்றன (இதன் விளைவாக அவற்றின் வட்டி உயரும்). அமெரிக்காவின் கடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 121% ஆக உள்ளது. மேலும் அதில் சுமார் 7 ட்ரில்லியன் டாலரை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் மறுநிதியளிப்பு செய்யப்பட வேண்டும்.
எனவே அவர்களின் வட்டிச் சுமை கணிசமாக அதிகரிக்கும். 90 நாள் காலம் முடிந்த பிறகும், ட்ரம்ப் தனது பரஸ்பர வரி திட்டத்தை இடைநிறுத்தலாம் அல்லது குறைக்கலாம். ஏற்கெனவே அது பெரியதாக்கத்தை உருவாக்கியிருப்பதால், அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து உலக நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வார்.
இந்திய சூழ்நிலை: ஒப்பீட்டளவில், இந்தியா தற்போது சிறந்த நிலையில் உள்ளது. ஏனெனில் இந்தியாவுக்கு குறிப்பிட்ட எதிர்மறை செய்தி எதுவும் இல்லை. மேலும், சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற பல போட்டி நாடுகளை விட இந்தியா மீது முன்மொழியப்பட்ட பரஸ்பர வரிகள் குறைவாக இருந்தன.
மேலும், வர்த்தகம் தொடர்பான விஷயங்களைக் கையாளும் இரு நாடுகளின் அமைச்சகங்களுக்கிடையில் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது. இருதரப்பு வர்த்தக ஏற்பாடு (BTA) மிக விரைவில் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. அதன் பிறகுஒப்பந்தத்தின் கீழ் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பரஸ்பர வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவை நோக்கி ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த கடுமையான நிலைப்பாடு, அதன் சீனா +1 உத்திக்கு இந்தியா ஒரு உந்துதலை வழங்குவதற்கான சாத்தியமான வாய்ப்பையும் திறக்கிறது. இது பல துறைகளில் (சிறப்பு ரசாயனங்கள், மருந்துகள், மின்னணு உற்பத்தி, வாகனங்கள் போன்றவை) உற்பத்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கக்கூடும்.
இந்திய பங்குச் சந்தைகள்: பரஸ்பர வரி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஆரம்பத்தில் மிகையாக எதிர்வினையாற்றியதாகத் தெரிகிறது. மேலும், கடந்த ஒரு மாதமாக உள்நாட்டில் பல நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வரி தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக சந்தைகள் இதை அங்கீகரிக்கவில்லை.
மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பது, வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது மற்றும் சாதகமான பருவமழை எதிர்பார்ப்பு ஆகியவை நேர்மறையான அம்சங்கள் ஆகும். செப்டம்பர் 2024 முதல் இந்திய பங்குச் சந்தைகள் இறங்கத் தொடங்கியதால், இப்போது நிறுவன பங்குகளின் மதிப்பு முன்பு இருந்ததைப் போல அதிகமாக இல்லாமல் நியாயமாக உள்ளன.
மேலும், அமெரிக்காவில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தால் அமெரிக்க டாலர் பலவீனமடைய தொடங்கின. அதாவது Dxy குறியீடு (அமெரிக்க டாலர் மற்றும் பிற நாணயங்கள்) 100-க்குக் கீழே சரிந்துள்ளது (இது சில மாதங்களுக்கு முன்பு 109 வரை உயர்ந்தது).
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரால் உலகளாவிய மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்குசுமார் 65 டாலராக வீழ்ச்சியடைய வழிவகுத்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பார்வையில் இவை இரண்டும் மிகவும் நேர்மறையானவை, ஆனால் இவை அனைத்தும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
காலாண்டு வருவாய் பருவத்தின் விளிம்பில் இருப்பதால், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் தங்கள் வருவாய் மாநாட்டு அழைப்புகளின்போது நிதியாண்டு 2025-26-க்கு வழங்கிய வழிகாட்டுதலின் மூலம் பல்வேறு துறைகளுக்கான எதிர்கால EPS வளர்ச்சியின் அளவை அளவிட ஆர்வமாக உள்ளனர்.
பின்னர் விரைவாக முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர். குறிப்பாக உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களின் ரொக்ககையிருப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடி என்ற ஆரோக்கியமான நிலையை எட்டியுள்ளது. இது அவர்களுக்கு போதுமான வாங்கும் சக்தியை அளிக்கிறது.
உள்நாட்டு வாங்குதலில் இந்த எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் சந்தையை ஆதரிக்கும். ஆனால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளரின் வருவாய் உலகளாவிய மேக்ரோ-பொருளாதார குறிகாட்டிகளைப் பொறுத்தது. ஒட்டுமொத்தமாக, பரந்த சந்தையில் படிப்படியாக முதலீடுகளைக் குவிக்கத் தொடங்க இது ஒரு பொருத்தமான நேரமாகத் தோன்றும்.
இருப்பினும், உங்கள் பணத்தை முழுவதுமாக இப்போதே முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது. ஏனெனில் ஓரளவு நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து இருக்கும். இந்த நிச்சயமற்ற காலகட்டத்தை கடந்து, BTA கையெழுத்தானவுடன், கட்டண அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் பல, இறுதியில் பயனடையப் போகிறது.
எனவே, இந்தப் பங்குகளில் சிலவற்றில் உடனடியாக ஒரு பெரிய நேர்மறையான நகர்வை நாம் காணலாம்.
ஆனால் சில நஷ்டங்களும் இருக்கும். எனவே, மியூச்சுவல் ஃபண்ட் வழியாக முதலீடு செய்யலாம். குறிப்பாக, பல்வேறு துறைகள் மற்றும் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளை உள்ளடக்கிய திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. முக்கிய விஷயம் என்னவென்றால், சரியான நேரத்துக்காக காத்திருந்து முதலீடு செய்வது கடினம். எனவே, எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய இன்றே தொடங்குவது நல்லது.
- sunilsubramaniam27@gmail.com