கோடை விடுமுறையின்போது குழந்தைகளின் புத்தக வாசிப்புக்காக, ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை வாலிப முஸ்லிம் தமிழ்க் கழகம் எங்கள் வீட்டுத் திண்ணையில் அமைத்திருந்த சிறிய நூலகம் எனக்கு வாசிப்பு உலகை அறிமுகப்படுத்தியயது. ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் 25 பைசா கொடுத்து அதில் உறுப்பினரானேன். அங்கு தொடங்கிய வாசிப்பு, புத்தக அடிமையாகவே என்னை மாற்றிவிட்டது.
ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு புத்தகங்கள் எனத் தொடர்ந்த வாசிப்பு, அந்த விடுமுறைக்குள் சிறியதும் பெரியதுமாக 120 புத்தகங்களை வாசிக்கவைத்தது. ஒவ்வொரு நூலும் ஒரு புதிய அனுபவம். நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பழங்கதைகள் என எல்லாமே வாசித்தேன். ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு உலகங்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தக் கதைகளில் இருப்பவர்கள் என் அருகிலேயே வாழ்ந்தவர்களாகத் தோன்றினர். நான் அவர்களுடன் சென்றேன். அவர்களுடன் சிரித்தேன். அவர்களுடன் அழுதேன். அந்த வாசிப்பு அனுபவம், என் அறிவு உலகை விரிவுபடுத்தியது. கதைகளின் மாயாஜால உலகிற்குள் நுழைந்து, என்னை மறந்து வாசிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒருமுறை ‘பொன்னியின் செல்வன்’ வாசிப்பில் நான் மூழ்கிப் போயிருந்தபோது, அடுப்பில் பால் வைத்து என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, கடைக்குச் சென்றிருந்தார் அம்மா. நான் கதையில் மூழ்கியிருக்க, பால் கருகி கரும்புகை வீட்டைச் சூழ்ந்திருந்தது. அம்மா ஓடோடி வந்து அடுப்பை அணைத்தார். அவ்வளவு மெய்மறந்த நிலை வாசிப்பில் எனக்கு.
ஆசிரியர் பணியில் சேர்ந்த பின் வகுப்பறையில் மாணவர்களுக்குச் சொல்லத் தேவையான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். தன்னம்பிக்கையை, நேர்மறை எண்ணங்களைக் கதைகளாக அவர்களுக்குச் சொன்னேன். ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நூலகத்தின் பொறுப்பாசிரியராக ஒவ்வொரு நாளும் மாணவச் செல்வங்களைப் புத்தகங்களை வாசிக்க வைக்கிறேன். நானும் வாசிக்கிறேன்.
பள்ளிப் பணி, வீட்டுப் பணி முடித்தபின் இரவு நேரத்தில் புத்தகம் படிப்பதையும், சிறு சிறு ஆக்கங்களை எழுதுவதையும் இன்றும் வழக்கமாக வைத்திருக்கிறேன். முகவைமதி என்கிற பெயரில் ஒரு வலைப்பூ உருவாக்கி அதில் எழுதிவருகிறேன்.
- க.வளர்மதி, ரெகுநாதபுரம், ராமநாதபுரம்.