கடந்த ஆண்டு நிகழ்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிக மிகக் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய மனைவி பொற்கொடி மீதும் அவருடைய குழந்தை மீதும் மக்களின் அன்பும் அரவணைப்பும் கருணையும் இரக்கமும் அதிகரித்தன.
ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்குப் பிறகு கணவர் சார்ந்த கட்சியிலேயே பொற்கொடி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக அமர்த்தப்பட்டபோது அவருக்கு அது மிகப் பெரிய ஆறுதலாக மட்டுமல்ல; தன் கணவரின் கொள்கைகளை முன் நின்று எடுத்துச் செல்ல ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்று கருதினேன்.
அரசியலில் பெண்கள்: பெண்கள் பொதுவாக அரசியல் தளத்திற்கு வரும்போது அவர்கள் இரண்டாம்தர பிரஜையாகவே நடத்தப் படுகின்றனர். ஜெயலலிதா என்னும் மாபெரும் ஆளுமையாக ஒரு பெண்மணி உருவாவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்குப் பின்னால் அவர் எத்தனையோ சவால்களை, போராட்டங்களை, வலிகளை, நிராகரிப்புகளைச் சந்தித்திருக்கக்கூடும். அவருடைய கடுமையைக்கூட அதனுடைய எதிரொலி யாகத்தான் நாம் கருத வேண்டும். ஆண்களை அவர் தன் காலில் விழச் செய்ததையெல்லாம் யோசித்துப் பார்த்தால் அவர் மனதில் எங்கோ ஒரு மூலையில் தான் ஒடுக்கப்பட்ட தருணங்களை மீட்டெடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு பெண்மணியாகவே நம் கண் முன் தோன்றுவார்.
பொற்கொடிக்கு ஜெயலலிதா போல் ஆகும் ஆசைகள் பெரிதாக இருப்பது போல் தோன்றவில்லை. அவர் தன் கணவரின் மரணத்திற்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் அதேநேரம் தன் கணவரின் நல்ல கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஓர் ஆயுதமாகவே அந்தப் பதவியைப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. உள்கட்சிப் பூசலில் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியாது; அது வெளியே விமர்சனத்திற்கு வரவும் செய்யாது. சில நாள்களுக்கு முன்பாக அவர் ஏதோ ஒரு சர்ச்சையில் - விவாதத்தில் ஈடுபட்ட ஒரு காணொளியைப் பார்த்தேன். ஆனால், அப்போதுகூட அது உள்கட்சியில் நடந்த ஒரு பூசல் என்று தோன்றவில்லை. திடீரென்று அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாகவும், அவர் தன்னுடைய வீட்டையும் குழந்தையையும் கணவருடைய கொலை விசாரணையையும் கவனித்துக் கொள்வதற்காக விடுவிக்கப்பட்டார் என்றும் சொன்ன காரணம் உலகத்தின் அத்தனை பெண்களின் முகத்திலும் அறைவதுபோல் இருந்தது.
ஏற்க முடியாத காரணம்: எவ்வளவு பெரிய அரசியல் போராட்டம் செய்தபோதும் பெண்களை வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பொம்மைகளாக மட்டுமே இந்தச் சமூகத்தில் சிலர் பார்க்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம். அதை மீறி ஒரு பெண் சமூக - அரசியல் தளத்திற்கு வரும்போது அவளை விமர்சனம் செய்ய ஆயிரம் காரணம் இருந்தாலும் மிக மிகக் கேவலமாக மட்டம் தட்டுவதற்கு, “போ... போய் வீட்டைப் பார் முதலில்” என்று சொல்வதுதான் உச்சபட்ச கொடுமையான விஷயமாகும். இப்படி ஒரு காரணத்தைக் காட்டி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்துப் பெரிய எதிர்வினைகளைச் சமூக ஊடகங்களில்கூடப் பார்க்க முடியவில்லை.
ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கட்சியில் இருந்துகொண்டு கட்சிப் பணியைப் பார்த்து, அதோடு சேர்த்து அவருடைய வீட்டையும் பார்க்க முடியும் என்று நம்பும் ஒரு கட்சி ஏன் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மட்டும் அவருடைய கட்சியையும் பார்த்துக் கொண்டு குழந்தையையும் பார்த்துக்கொண்டு கணவரின் கொலை வழக்கையும் பார்த்துக்கொண்டு வாழ முடியாது என்று முடிவெடுத்தது? அதுவும் ஒரு பெண் தேசிய அளவில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கட்சியில் இது போன்ற ஒரு காரணத்தைக் காட்டி ஒரு பெண்ணை வெளியேற்றுவது எவ்வளவு பெரிய அநியாயம்.
சிறகை முறிக்கக் கூடாது: ஓர் எதிர்கருத்து இருக்கிறது என்றால், அது சார்ந்து பொற்கொடியை நீக்க வேண்டும் என்றால் அந்தக் காரணத்தைத்தானே சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டுப் பெண் என்றால் கண்டிப்பாக வீட்டை மட்டுமே கவனித்துக்கொள்ள வேண்டும், கட்சிப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்று சொல்வது இன்னொரு கொலையை இவர்கள் செய்வதுபோலத்தான் இருக்கிறது.
பொற்கொடி கட்சிப் பணியைப் பார்த்ததால் அவர் சுட்ட தோசை கருகிவிட்டது என்று அவருடைய குழந்தை எங்காவது வந்து கட்சிப் பொறுப்பில் இருக்கும் முக்கியஸ்தர்களிடம் புகார் அளித்ததா அல்லது அவர் கட்சிப் பொறுப்பைக் கவனித்துக்கொள்வதால் வீடுபெருக்கப்படாமல் கிடக்கிறது என்று அவருடைய குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் புலம்பித் தீர்த்தார்களா? எதுவுமே இல்லாமல் ஒரு பெண் கேள்வி கேட்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக “வீட்டு வேலையை மட்டும் பார்” என்று சொல்வதுபோல் இருக்கக்கூடிய இந்த அறிக்கை கண்டனத்துக்கு உரியது.
ஒரு கட்சியில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கட்டும், அதில் சிலர் பொற்கொடிக்கு எதிராக இருப்பவர்களை ஆதரிப்பவர் களாகக்கூட இருக்கலாம். அரசியல் காரணங் களைக் காட்டிக்கூட பொற்கொடியைக் கட்சியை விட்டு நீக்கலாம். ஆனால், எந்தவொரு சூழலிலும் பொற்கொடி வீட்டை கவனித்துக்கொள்வதற்காகக் கட்சிப் பொறுப்பை விட்டு அனுப்பப்படுகிறார் என்று அவமானப்படுத்தி, ஒரு பெண் சிறகை விரித்து அரசியல் வானில் பறக்க எத்தனிப்பதைத் தடுப்பது நியாயமல்ல. அப்படி நாம் செய்யும்போது நாம் வீழ்வதற்கு வேறு காரணங்கள் எதுவும் தேவையே இருக்காது.
(உரையாடுவோம்)