கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக உடல் சோர்வு, அதிக வியர்வை, உடல் வெப்பம் அதிகரித்தல் போன்ற கோடைக்காலத்துக்கே உரிய உடல் பாதிப்புகளை மக்கள் ஏற்கெனவே அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
பருவக் காலத்துக்கு ஏற்ப நம்முடைய உணவுமுறையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் மற்ற பருவக் காலங்களைவிடவும் கோடைக் காலத்தில் சாப்பிடும் உணவில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும்.
உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, சரியான உணவுப் பழக்கம் இல்லையெனில் உடல் தளர்ச்சி, உடல் உஷ்ணம் கூடுதல், அடிக்கடி தாகம் ஏற்படுதல், நீர்ச் சத்து குறைதல் வாய்ப்பு போன்றவை ஏற்படும். கோடைக்காலத்தில் கிடைக்கும் சில சிறப்பு உணவுப் பொருள்கள் நம் உடலுக்குப் பல நன்மைகளை வழங்குகின்றன.
இவை சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலை நீர்ப் பற்றாக்குறையிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அந்த வகையான சில முக்கியமான உணவு வகைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
கோடை உணவு வகைகள்:
தர்பூசணி: உடலின் வெப்பத்தைத் தணிக்கவும், தேவையான திரவச் சத்துகளை வழங்கவும் தர்பூசணி சிறந்தது. இது சுமார் 90% தண்ணீர் அடங்கியதாக இருப்பதால், வெயிலால் ஏற்படும் தாகம், உடல் சோர்வு, நீரிழப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது. தர்பூசணியில் விட்டமின் ஏ, பி6, சி மற்றும் பலவிதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது உடல் நலத்திற்குப் பல பயன்களை அளிக்கிறது.
நுங்கு: கோடையின் கடும் வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த இயற்கை உணவு நுங்கு. இது உடல் வெப்பத்தைக் குறைத்து, வெயிலால் ஏற்படும் தாகம், சோர்வைக் குறைத்து உடல் சூட்டைத் தடுக்கிறது. நுங்கில் ஈரப்பதம், நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளதால், நம் உடலைத் தூய்மையாக்கும் இயற்கையான எலெக்ட்ரோ லைட்டாகச் செயல்படுகிறது. இது ஜீரண சக்தியை மேம்படுத்தி, சிறுநீரகங்களைச் சுத்தமாக்கும். மேலும், தோலில் ஏற்படும் வெப்பப் புண்கள், தளர்வு போன்ற கோடை சார்ந்த பிரச்சினைகளையும் தடுக்கிறது.
கம்பங்கூழ்: கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில், உடலைக் குளிர்விக்கச் சிறந்த பாரம்பரிய பானம் கம்பங்கூழ். கம்பு, கேப்பை போன்ற தானியங்களில் உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. சுட்டெரிக்கும் வெயிலில், பசி இல்லாமல் புத்துணர்வுடன் இருக்க, காலை நேரத்தில் மோர் கலந்த கம்பங்கூழ் அருந்தலாம். இது உடல் சூட்டைக் குறைத்து, கொழுப்பைக் கரைக்கும், ரத்தத்தைச் சுத்தமாக்கும், மலச்சிக்கலைத் தீர்க்கும்.
முலாம்பழம்: கோடைக்காலத்தில் பரவலாகக் கிடைக்கும் பழமாக முலாம்பழம் உள்ளது. இதில் நிறைவான அளவில் ஏ, சி, இ போன்ற விட்டமின்கள், பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குவதோடு, தோல் மற்றும் கண்களின் நலத்தையும் பேணுகின்றன.
இயற்கையான குளிர்பானங்கள்: மோர், எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு கலந்து குடிக்கும் பானங்கள் உடலைக் குளிர்விப்பது மட்டுமல்லாமல், ஜீரண சக்தியையும் மேம்படுத்துகின்றன. மேலும், பனைவெல்லம், இளநீர், நெல்லிக்காய்ச் சாறு, கரும்புச் சாறு போன்றவை இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டவை.
நீர்ச்சத்துமிக்க காய்கறிகள்: வெயில் காலத்தில் தண்ணீரை மட்டும் பருகுவது போதாது; உடலின் நீர்நிலைச் சமநிலையைக் காக்க, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டியது அவசியம். வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், தக்காளி, பூசணிக்காய், பீர்க்கங்காய், பச்சை முட்டைகோஸ் போன்ற காய்கள் தண்ணீருடன் சேர்த்துத் தேவையான சத்துகளையும் வழங்குகின்றன.
பாதாம் பிசின், சப்ஜா விதைகள்: பாதாம் பிசின், சப்ஜா விதைகள் இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கொண்டவை. இவை உடல் உஷ் ணத்தால் ஏற்படக்கூடிய தலைமுடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சினை களைத் தவிர்ப்பதோடு முடியை அடர்த்தியாக வளரச் செய்யவும் உதவுகிறது.
மேலும், பாதாம் பிசினை நாம் தொடர்ச்சியாகச் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய சருமமும் இயற்கையிலேயே இளமையான தோற்றத்தைப் பெற உதவுகிறது. சப்ஜா விதைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை என்பதால், செரிமானத்தை மேம்படுத்துகின்றன. மேலும், பசியைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் பயன்படுகின்றன.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
எண்ணெய் உணவுகள்: கோடைக்காலத்தில் எண்ணெய்ச் சத்து அதிகம் கொண்ட உணவு, துரித உணவு – சக்கை உணவு, வறுத்த உணவு போன்றவற்றை உண்டால் உடல்நலத்திற்குப் பாதகமாக அமையும். இவை உடலுக்குள் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டவை. அதன் விளைவாக முகத்தில் பருக்கள் தோன்றலாம். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும்.
சர்க்கரை கலந்த பானங்கள்: சோடா, கார்பனேட்டட் பானங்கள், பல வண்ணக் குளிர்பானங்கள் போன்றவற்றில் அதிக சர்க்கரை உள்ளது. இது உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும். இந்தப் பானங்கள் உடலில் உள்ள நீரின் அளவைக் குறைத்து நீரிழப்பை ஏற்படுத்தும். சர்க்கரை பானங்களில் கலோரி அளவு அதிகம் என்பதால் இவற்றைத் தொடர்ந்து அருந்தினால் உடல் பருமனும் அதிகரிக்கும்.
மது: சிலர் கோடைக்காலங்களில் குளிர்ந்த ஒயின் அல்லது ஐஸ் கலந்த மதுவை விரும்பி அருந்துவார்கள். இவை உடலுக்குக் குளிர்ச்சியை வழங்குவதற்குப் பதிலாக, உடலின் வெப்பநிலையை மேலும் உயர்த்தி, நீரிழப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக உடலில் நீர்ச்சத்து குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்; இது உடல்நலக்கேடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
தேநீர், காபி: கோடைக்காலத்தில் தேநீர், காபி அதிகமாகக் குடிப்பது உடலுக்குப் பயனளிக்காது. இவற்றுக்குப் பதிலாக, தேவையானவர்கள் கிரீன் டீ போன்ற மாற்றுகளைத் தேர்வு செய்யலாம்.
மசாலாப் பொருள்கள்: மிளகாய், மிளகு, மஞ்சள், சீரகம் போன்ற மசாலாப் பொருள்கள் உடலுக்கு உஷ்ணத்தைத் தரும் தன்மை கொண்டவை. இவற்றைக் கோடைக்காலத்தில் அதிகம் உண்பதனால், உடல் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், மிகவும் காரமாக இருக்கும் மசாலா உணவு வகைகள், வயிற்றில் எரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தி செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கும்.
கோடைக்காலம் கடுமையான வெயிலையும், உடலில் அதிக நீரிழப்பையும் ஏற்படுத்தும். இதை எதிர்கொள்ள இயற்கை நமக்கு அளித்துள்ள சத்தான உணவுப் பொருள்களை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தக் கோடையைச் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் கடக்கலாம்.
டயட் அட்டவணை
- snekasiva3007@gmail.com