இளமை புதுமை

கொஞ்சம் இனிப்பு... கொஞ்சம் துவர்ப்பு... | வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபி - 1

ஆர்.ஜே. ஆனந்தி

என் பாதங்கள் புல்லை முத்தமிட்டுக் கொண்டிருக்க, என் செவிகள் ‘மியாவ்’ என்கிற பாடலில் திளைத்தபடி இருந்தன. அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடையே பன்மொழி பேசும் மக்கள் உடல்நலனுக்காகவும் மனநலனுக்காகவும் நடைபயின்று கொண்டிருந்தனர்.

12ஆம் தளத்திலிருக்கும் வீட்டு பால்கனி ஒன்றின் கூண்டிலிருந்த கிளி, நான் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பார்த்து ‘கீகீ..’ என்று என் கவனத்தை ஈர்க்க முயன்றுகொண்டிருந்தது. இப்படி அனைத்தையும் ரசித்தபடி வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் நான், நான் அனுபவித்த வாழ்க்கையின் சுவையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? எந்த ஊரு? எந்த மொழி? தான் ஆணா, பெண்ணா? தான் எந்த வரலாற்றின் தொடர்ச்சி என்பதெல்லாம் தெரிவதற்கு முன்பே, அம்மாவின் ஸ்பரிசம் பட்டதும் இயற்கையாகவே பாலை அருந்தி வளர்ந்த நமக்கு வாழத் தனியாகக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை.

இந்தப் பூவுலகில் நாம் பிறந்ததற்கான வாய்ப்பு லட்சம் கோடிகளில் ஒன்று. நம் பிறப்பே ஓர் அதிசயம்தான். அப்படியிருக்கும்போது நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? எல்லோரையும் போல் சும்மா வாழ்ந்துவிட்டால் போதுமா? அதை ரசித்து அனுபவிக்க வேண்டாமா?

ஓர் உற்சாகச் செய்தியை அறியும்போது இனிப்பைப் பகிர்வோம். ஆனால், இனிப்பை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அது திகட்டிவிடும். நெல்லிக்காயின் துவர்ப்பு ஒரு தனி ருசி. அதைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது கிடைக்கும் அந்த வித்தியாச இனிப்பை ருசித்து அனுபவிக்காமல் இருப்பது சரியா? ‘சந்தோஷமாக வாழணும்’ என்று ஆசைப்பட்டு மகிழ்ச்சியைத் தேடி அலைந்துகொண்டிருப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை.

அது நம் கைக்கு வந்ததும், ‘என்ன வாழ்க்கைடா இது, வாழ்க்கை எதை நோக்கிப் போகுதுன்னு தெரியலையே’ என்று புலம்புபவர்களை நான் பார்த்திருக்கிறேன். துவர்ப்பும் அறுசுவைகளில் ஒன்றுதானே? இனிப்பை எப்படி மனம் ஏற்றுக்கொள்கிறதோ, அதேபோல துவர்ப்பையும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

வலிகளைத் தவிர்த்துவிட்டு வாழ நினைப்பது, வாழ்க்கையையே தவிர்ப்பதற்குச் சமம். எப்போது எல்லா உணர்வுகளுக்கும் நாம் சமமாக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அப்போதுதான் முழுமையான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும். அப்படி அறுசுவையையும் சுவைத்து வாழ ஒரு சீக்ரெட் ரெசிபி இருந்தால் எப்படி இருக்கும்? ஒன்று அல்ல, நிறையவே இருக்கின்றன.

நம் உணவுப் பழக்கம், பழகும் மக்கள், கேட்ட பாடல்கள், வாசித்த புத்தகங்கள், குடும்பம், நண்பர்கள், சமூகம், நாம் ரசிப்பவர்கள், நம்மை ரசிப்பவர்கள், செல்லப்பிராணிகள், முகம் தெரியாதவர்கள், நன்கு தெரிந்தவராக இருந்து பிறகு அந்நியராக மாறியவர்கள், குழந்தைகள், நம் வாழ்க்கையின் பருவங்கள், இயற்கையின் பருவங்கள், நாம் வாழ்ந்த வீடுகள், நாம் நடந்த பாதைகள், நாம் அழைத்த பெயர்கள், நம்மை அழைத்த குரல்கள், நாம் செய்தவை, செய்யாதவை என்று எல்லாமே நம் வாழ்க்கையின் சுவைகள்தான்.

இது எல்லாமே வாழ்க்கை என்கிற ரெசிபியில் ரொம்ப முக்கியமான மூலப்பொருள்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையையும் அறுசுவையாக மாற்றுவது அந்த வாழ்க்கையை வாழ்பவரின் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சீக்ரெட் ரெசிபி உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோல, பரந்து விரிந்த பிரம்மாண்டப் பிரபஞ்சத்தைச் சுவைக்க வேண்டு மென்றால், நம்மைச் சுற்றி இருக்கிற விஷயங்களை முதலில் சுவைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ரசிக்கத் தெரியாத வாழ்க்கையும் ருசிக்கத் தெரியாத உணவும் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் குப்பைக்குச் சமம். அப்படி உங்கள் வாழ்க்கையையும் குப்பையாக்காமல் சின்னச்சின்ன விஷயங்களை, வெற்றி தோல்விகளை, வாக்குவாதங்களை, வருத்தங்களை, இழப்புகளை, உழைப்பை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்காக, ரசிப்பதற்காக, ருசிப்பதற்காக, என்னடா வாழ்க்கை இது என்று வாழ்க்கையைக் குறை சொல்லிக்கொண்டிருக்காமல், இருக்கிற குறையை உணர்த்து, அதை மாற்றிக்கொள்வதில்தான் வாழ்க்கையின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ரெசிபிகளைத்தான் இனி ஒவ்வொரு வாரமும் பார்ப்போம்.

(ரெசிபி வரும்)

- ananthi.iyappa@live.in

SCROLL FOR NEXT