தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசுவாமி பெருமாள் கோயிலில் ராம சகோதரர்கள் நால்வரும் அருள்பாலிக்கின்றனர். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் வீணையுடன் காட்சி தருவது சிறப்பு. தென்னக அயோத்தி என்று போற்றப்படும் இக்கோயிலை 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் என்ற மன்னர் கட்டினார்.
அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. இதுகுறித்து தனது குலகுரு வசிட்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டார் தசரத மன்னர். குலகுருவும், புத்திர காமேஷ்டி யாகம் செய்யும்படி கூறினார். அதன் பலனாக திருமாலே அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சைத்ர மாதம் வளர்பிறை நவமி திதி, புனர்பூசம் நட்சத்திரத்தில் ஸ்ரீராமபிரான் கவுசல்யா மூலம் அவதரித்தார்.
இவரது அவதாரத்தை ஒட்டி திருமாலோடு உடன் இருக்கும் ஆதிசேஷன், சங்கு, சக்கரம் ஆகிய மூன்றும் திருமாலோடு பூலோகத்தில் அவதரிப்பேன் என்று அடம்பிடித்தன. அதனாலேயே ஆதிசேஷன் லட்சுமணராக (ஆயில்யம் நட்சத்திரம்) சுமித்ரா மூலம் அவதரித்தார். சங்கு, சக்கரம் பரதனாகவும் (பூசம் நட்சத்திரம்) சத்ருகுனனாகவும் (ஆயில்யம் நட்சத்திரம்) கைகேயி மூலம் அவதரித்தனர்.
இவர்களில் லட்சுமணர் ராமபிரானை மிகவும் நேசித்தார். அதனால் நான்காவது தொட்டிலில் இருந்த இளைய பெருமாள் அழுது அடம் பிடித்து ராமபிரானுடன் ஒரே தொட்டிலில் உறங்கியதாகக் கூறுவதுண்டு. அதில் இருந்தே ராமபிரானும் இளைய பெருமாளும் மிகவும் பாசமுள்ள சகோதரர்களாக இருந்தனர் என்பதை அறியலாம்.
காட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட போது ராமபிரானுக்கு முன்னர் காடு செல்ல கிளம்பியவர் இளைய பெருமாள். ராமபிரான்காடு செல்ல காரணமாக இருந்த தனது தாயை நிந்தனை செய்தவர் பரதன். மேலும்
அண்ணனுக்கு பதில் தற்காலிக ஆட்சி நடத்தியபோது அண்ணனது பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து மரியாதை செலுத்தி வந்தவர் பரதாழ்வார். சத்ருக்கனன் ராமபிரான் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
இப்படிப்பட்ட சகோதரர்களுக்கு ஒருமித்த சகோதரிகளே மனைவியாக அமைந்தனர். ராமபிரானை ஜனகரின் மகள் சீதையும், லட்சுமணரை சீதையின் சகோதரி ஊர்மிளாவும் திருமணம் செய்து கொண்டனர். பரதனுக்கும் சத்ருக்கனனுக்கும் ஜனகரின் தம்பி குசத்வஜனின் மகள்கள் மாண்டவியும் சுருதகீர்த்தியும் முறையே துணையாக அமைந்தனர்.
அனைவரும் ஒற்றுமையாக இருந்த சமயத்தில்தான் ராமரின் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்க ஏற்பாடாயிற்று. அதன்பிறகு ராமபிரானுடன் இளைய பெருமாள் கானகம் சென்றது, ராமர் ஹனுமன் சந்திப்பு, ராவணனின் வீழ்ச்சி என்று பல நிகழ்வுகள் நடைபெற்ற பிறகு, ராமபிரானுடன் சீதாபிராட்டி, இளையபெருமாள், ஆஞ்சநேயர், வானரர்கள் அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்தி வந்தடைந்தனர்.
அயோத்தி போல் குடந்தையில்... பட்டாபிஷேகத்தன்று ராமபிரான், தனது சகோதரர்கள், கானகத்தில் தன்னுடன் பல இன்னல்களை அனுபவித்த பிராட்டி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தனக்கு சேவை செய்த ஆஞ்சநேயருடன் கொலு வீற்றிருந்தார். அயோத்தியில் மட்டுமே உள்ள இக்காட்சியை தென்னகத்தில் உள்ள அனைவரும் காணவேண்டும் என்பதற்காக தென்பகுதியில் இருந்து பட்டாபிஷேகத்துக்குச் சென்ற மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தென்னக காசி என்று சொல்லப்படும் புனித இடமான கும்பகோணத்தில் வடிவமைத்தனர்.
அயோத்தியில் சீதாபிராட்டியும் ராமபிரானும் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இத்தலத்தில் இருவரும் திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ஒரே ஆசனத்தில் ராமபிரானும் சீதாபிராட்டியும் அமர்ந்துள்ளனர். (இதையே பட்டாபிஷேக கோலமாகவும் கருதுவதுண்டு) ராமபிரானின் இடது புறம் சத்ருக்கனனும், வலதுபுறம் பரதனையும் ஆஞ்சநேயரையும் காணலாம்.
இளைய பெருமாள் ராமபிரான் வில்லையும் சேர்த்து பிடித்தபடி காணப்படுகிறார். ஆஞ்சநேயர், தனது கோபம், போர்க்குணம் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு மனஅமைதியுடன் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறார்.
கல்வி கேள்வியில் சிறந்தவரான ஆஞ்சநேயர் இசையிலும் வல்லவர் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது. வீணை மீட்டி ராமாயணத்தை பாடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பரதன் குடை பிடித்தும், சத்ருக்கனன் சாமரம் வீசியும் நிற்கும் காட்சிகள் பக்தர்களை ஈர்க்கின்றன.ராமருக்கு தனிக்கோயில்கள் பல ஊர்களில் உள்ளன. பரதனுக்கும் கேரளாவில் தனிக்கோயில் உள்ளது.
ஆனால் ராமசகோதரர்கள் நால்வரும் சேர்ந்து இருப்பது போல் கோயில் இருப்பது அபூர்வம். இக்காட்சியைக் கொண்டு உத்தரபிரதேசம் அயோத்தி, சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் அதன்பிறகு கும்பகோணத்தில் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், பூவராக பெருமாள் அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள பெருமாள் சந்நிதி உள்ளது. ராமாயண காட்சிகள் மூலிகை வர்ணத்தைப் பயன்படுத்தி சுவர்களில் மூன்று வரிசையில் வரையப்பட்டுள்ளன. மூன்று முறை பிரகாரத்தில் வலம் வந்தால் ராமாயண காட்சிகளை வரிசையாகக் கண்டுவிடலாம். இக்கோயில் ஒரு சிற்பக்கூடமாகத் திகழ்கின்றது.
முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் நல்ல வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள் திருமாலின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் நிலையில் உள்ளன. ரதி மன்மதன் சிலைகளையும் இவற்றில் வடித்திருப்பது காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன. ஸ்ரீராமநவமி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று ராமபிரான் பிராட்டியுடன் தேரில் எழுந்தருளி வீதியுலா வருவார். மாசி மகத்தன்று ராமபிரானும் சீதாபிராட்டியும் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குவர். திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து திருமணக் (பட்டாபிஷேக) காட்சியைக் கண்டால், அத்தடை விலகி விரைவில் அனுசரணையான துணை அமையும்.
அமைவிடம்: குடந்தை நகரின் நடுநாயகமாக பெரிய கடைவீதியின் தென் கோடியில் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.