ஆனந்த ஜோதி

தோரணமலை முருகன் கோயிலில் அறப்பணிகள்

கே.சுந்தரராமன்

தோரணமலையின் பெருமை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆன்மிகமலையில் அறப்பணிகள் நடைபெற்று வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இயற்கை அழகுடன் அமைந்துள்ள குன்றுதான் இந்த தோரணமலை. இங்கு இயற்கையாக அமைந்த குகைக்குள் முருகப் பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

உலகம் சமநிலை அடைய தென்திசை நோக்கி வந்த அகத்தியர் இம்மலையின் சிறப்பை கண்டு இங்கேயே மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டார். தன் சீடர்களுக்கு சகல பாடத்தையும் கற்பிக்கும் மாபெரும் பாடசாலையை இங்கு அமைத்தார். காசி வர்மன் என்ற மன்னனின் தலையில் புகுந்து அவரை அவஸ்தைக்கு உள்ளாக்கிய தேரையை கபால அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்.

அவருக்கு உதவியாக இருந்த தேரையரை இங்கேயே இருந்து மருத்துவப் பணியாற்ற பணித்தார். அதன்படி தேரையர் தோரணமலை பகுதியில் இருந்து சேவை செய்து இங்கேயே முக்தி அடைந்தார். இத்தலம் பற்றி உலகுக்கு தெரிய வைத்த பெருமை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன், அவருடைய மனைவி ஆ.சந்திரலீலா, மகன் ஆ.செண்பகராமன் ஆகியோரை மட்டுமே சாரும்.

ஒரு காலத்தில் தென்காசி - கடையம் சாலையில் இருந்து தோரணமலை செல்ல சரியான பாதை கிடையாது. மழை, வெயிலுக்கு ஒதுங்க இடம் கிடையாது. கோடையில் தாகத்துக்கு தண்ணீர் கிடையாது. பசியாற உணவு கிடையாது. இப்படி எதுவுமே இல்லாத நிலையில் இருந்த தோரணமலையில் எல்லாம் கிடைக்கும் என்ற இன்றைய நிலையை அடைய தந்தையும் மகனும் எடுத்த முயற்சிகள் ஏராளம். 1965-ம் ஆண்டு அறங்காவலராக பொறுப்பு ஏற்ற ஆதிநாராயணன் பள்ளிக்கூட ஆசிரியர்.

பணிநேரம் முடிந்து தோரணமலை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தார். தரமான சாலை, குடிநீருக்கு கிணறு, ஆற்றையும், ஓடையையும் கடக்க பாலம், பக்தர்கள் மலைமீது ஏற படிக்கட்டுகள் - இப்படி பணிகள் தொடர்ந்தன. தோரணமலையின் பெருமைகளை பறைசாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அறப்பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.

தென்காசி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது, வீடு வீடாகச் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவார். நலத் திட்ட உதவிகள், திருமண உதவிகள் என்று பல உதவிகள் செய்துவந்த தந்தைக்கு உதவிகரமாக அவரது மகன் ஆ.செண்பகராமனும் இருந்துள்ளார். வரும் பக்தர்களுக்கு அன்னதானம், உழவாரப் பணி, மாணவர்களை தத்து எடுத்து படிக்க வைத்தல் என்று மகனின் அறப்பணிகள் தொடர்கின்றன.

தற்போது 6 மாணவர்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி உட்பட பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு வாசிப்பு திறனை மேற்கொள்ள பயிற்சி, திருக்குறளை ஒப்பிக்கும் போட்டி, ஆன்மிக பேச்சுப் போட்டி, ஸ்லோகங்கள் ஒப்பிக்கும் போட்டி, கோடைக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் என்று ஊக்கம் தரப்படுகிறது.

தோரணமலை முருகன் கோயிலில் தனது பெற்றோரின் நினைவாக, கே.ஆதிநாராயணன் & ஆ.சந்திரலீலா நினைவு நூல் நிலையத்தை ஆ,செண்பகராமன் கடந்த 2022-ல் அமைத்துள்ளார். ஆன்மிகம், சித்தர்கள் பற்றிய நூல்கள், வேலைவாய்ப்பு தொடர்பான புத்தகங்கள், அறிவுசார் புத்தகங்கள், எஸ்எஸ்சி, வங்கித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, இந்து அறநிலையத் துறை, நெட், செட், டெட், எஸ்ஐ, பிசி, திறனாய்வுத் தேர்வு, 10 மற்றும் 12-ம் வகுப்பு பாடப் புத்தகங்களுக்கான கையேடு, யுஜிசி, யுபிஎஸ்சி, ஆகிய தேர்வுக்கான புத்தகங்கள் என்று ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள் இங்கு வந்து படிப்பதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. தற்போது அங்கேயே தங்கி 7 மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு படித்து வருகின்றனர். மேலும் ராணுவம், காவல் துறையில் வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கு பயிற்சி உபகரணங்கள் இங்கு உள்ளன. தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு வழிபாடும் சமூக நலன் சார்ந்தே உள்ளது. தமிழ்மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் விவசாயம் செழிக்க வருணகலச பூஜை நடத்தப்படுகிறது. தைப்பூசதினத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று முக்கிய பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

தமிழ் புத்தாண்டு தினத்தில் சமூகப்பணி செய்வோருக்கு விவசாயிகள் கையால் தோரணமலையான் விருது வழங்கப்படுகிறது. தினமும் அன்னதானம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும். கோயிலில் நவீன குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்காசி அருகே முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன் - சந்திரலீலா வசித்த வீட்டில் தற்போது மாலைநேர படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவசமாக படித்து வருகின்றனர்.

கிராமப்புற இளைஞர்கள் விளையாட விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை ஆதிநாராயணன் வகுத்த பாதையில் மகன் ஆர்.செண்பகராமன் சென்னையில் இருந்து மாதத்துக்கு 4 முறையாவது தோரணமலை கோயிலுக்கு வந்து வளர்ச்சிப் பணிகளையும், அறப்பணிகளையும் மேற்கொண்டு வருவது போற்றத்தக்கது. கூடுதல் விவரங்களுக்கு 9965762002 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT