உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் மறைவாழ்வில் முக்கியமான காலகட்டம் தவக்காலம். அதன் உச்சகட்டமே இறுதி வாரமான புனித வாரம் ஆகும். புனித வாரத்தின் தொடக்கமான ஞாயிறன்று குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாகச் செல்வர். அன்றுதான் யேசுபிரான் சிலுவையில் அறையப்பட தன்னையே முன்வந்து ஒப்புக் கொடுக்க எருசலேம் நகரை நோக்கிப் பயணப்பட்ட நாளாகும்.
தனக்குச் சிலுவை மரணம் நேரப் போகிறது, அத்தருணத்தில் சீடர் மட்டுமல்லாது, குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்துகொண்டு தன்னுடன் ஓடிவரும் மக்களும் கூட தன்னை விட்டு விலகிவிடுவர் என்பதை அறிந்திருந்தும், கருணை பொங்கும் உள்ளத்துடன் தன்னையே அளிக்க மகிழ்ச்சியுடன் பயணிக்கிறார் யேசு பெருமான்.
அந்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்குப் பின்னால் எல்லையற்ற சோகம் ஒளிந்து கொண்டிருக்கும். ஏனெனில் அடுத்த 5 நாட்களுக்குள் பசுமையும் தூய்மையுமே வடிவான குருத்தோலை போன்ற யேசுபிரானின் உடல் நொறுக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுவார்.
அடுத்த நொடி நமக்கு வாழ்க்கையில் என்ன நேரும் என்பது யாரும் அறிய முடியாத ஒன்று. எனவே கடவுளின் வல்லமைக்குத் தன்னை அளித்து எது நேரினும் அது கடவுளின் சித்தம் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு மனநிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் கலையை நமக்குக் கற்றுத் தருகிறார்.
அடுத்து வரும் வியாழன், யேசுபிரானால் புனித வியாழனாக மாறுகிறது. ஏனென்றால் அன்றுதான் தன் சீடர்களை சேர்த்து அவர்களுடைய காலடியில் அமர்ந்து பாதங்களை துடைத்து தன்னுடைய உள்ளத்தில் எல்லையற்ற பணிவை வளர்த்துக் கொள்கிறார். இதன் மூலம் மக்களுக்கு ஒருவரை ஒருவர் பணிவுடன் ஏற்று அரவணைத்து உள்ளத்தில் வெறுப்பை நீக்கித் தூய்மையை வளர்த்துக் கொள்ளும் ஒரு வாழ்வியலைக் கற்றுத் தருகிறார்.
அறநெறி சார்ந்த வாழ்வியலை புறம் தள்ளி வாழ்ந்த மக்களையும், அவர்களைத் தவறான வழியில் வழிநடத்தி வந்தவர்களையும் அவர் துணிவுடன் எதிர்த்துப் போராடினார். அறநெறிகளில் ஆழ்ந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், சுயச்சார்பு சுயக் கட்டுப்பாட்டுடன் இறை நம்பிக்கையை மையமாகக் கொண்டு வாழவும் மக்களுக்கு அறிவுறுத்தி வந்தார் யேசுபிரான்.
அதன் காரணமாக அவரை கொலைக் குற்றத்துக்கு ஆளாக்க எண்ணியவர்கள் அவரைக் கைது செய்து அந்நாட்டு மன்னர் மூலம் கொலை தண்டனையை நிறைவேற்ற முயல்கின்றனர்.
ஆனால் மாசற்ற செம்மறிப் புருவையாகிய அவரிடம் எந்தக் குற்றத்தையும் காண முடியாத அரசரோ, தண்ணீரால் தன் கைகளைக் கழுவிக் கொண்டு ‘ஒரு குற்றமும் செய்யாத இவருடைய ரத்தப் பலி என்னைச் சேராதிருக்கட்டும்' என்று தன்னை விடுவித்துக் கொள்கிறார். ஆனால் கொடுங்கோலர்களின் கைகளில் பலியாகிறார் யேசு.
உடல் நொறுங்கி துன்ப வெள்ளத்தில் மூழ்கும்போதும், அத்துன்பத்தைத் தனக்கு இழைத்தவர்களுக்காக மனம் வெதும்பி இறைவனிடம் மன்னிப்பு வேண்டி ஜெபம் செய்கிறார். அதன் மூலம் தன்னுடைய உடலின் ஒவ்வொரு அணுவையும் புத்துயிர்ப்பிக்கச் செய்து வீரியம் பெற வைக்கிறார்.
ஒருவர் இழைக்கும் துன்பம் மூளையில் எண்ணமாகப் பதியப்படாதபோது அது ஒருவருக்கு இன்பமாக மாறும் என்ற சத்தியத்தை செயல்விளக்கமாகத் தருகிறார். அதன் மூலம், ஒவ்வொருவரும் தன்னுடைய உடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம், உடலைத் தாண்டி ஆன்மாவை வலுப்படுத்த முடியும் என்று கற்றுக் கொடுக்கிறார்.
அந்தப் பரிணமிப்பின் இறுதிக் கட்டமே யேசுவின் புத்துயிர்ப்பு. அநித்தியமான உடலை நித்தியமான ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியும் என்ற சித்த சக்தியை மனிதர்களுக்கு உணர்த்துகிறது யேசுவின் புத்துயிர்ப்பு. எனவே இந்த நான்கு நாட்களும் நமக்கு நான்கு பாடங்களைக் கற்றுத் தருகின்றன.
ஒன்று - எது நேரினும் அழுது புலம்பாமல், அதை இறை வல்லமையால் நேர்ந்த ஒன்று என்று முழுமையாக முன்வந்து ஏற்றுக் கொள்வது. இரண்டு - எல்லையற்ற பணிவை ஒவ்வொரு நொடியிலும் வளர்த்துக் கொள்வது. மூன்று - துன்பம் இழைப்போர் யாராக இருந்தாலும் அவர்களைத் தீர்ப்பிட்டு உருவகப்படுத்தாமல், அவர்களுக்கு நன்மையே விளைய வாழ்த்தி ஜெபிப்பது.
நான்கு - உடல் ஒரு கருவியே தவிர அதுவே நிரந்தரம் அல்ல என்ற உண்மையை உணர்வது. அதனால் ஒவ்வொரு நொடியிலும் நாமும் நம் பழமைக்கு இறக்க முடிந்தால் புதிதாய்ப் பிறக்க முடியும் என்ற உறுதியைப் பெறுகிறோம். யேசுபிரான் அன்று கற்றுக் கொடுத்த இந்த 4 பாடங்களும் இன்று உலக மக்கள் அனைவருக்கும் குடும்பங்களில், அன்றாட உறவுகளில், பணித்தளங்களில், அமைதிக்கான உளவியல் சார்பான பாடங்களாக மாறி வருகின்றன. புத்துயிர்ப்பு பெருவிழா வாழ்த்துகள்!
- kulandhaisamy.gpf@gmail.com