கோவையைச் சேர்ந்த அருணாவுக்குச் சிறு வயது முதலே எளியோருக்கு உதவுவதில் ஆர்வம். படித்து முடித்ததும் தன் தோழியோடு சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகள் 60 பேருக்கு உணவு கொடுத்ததோடு சிறு சிறு உதவியையும் செய்தார். கோவைக்கு அருகில் உள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும் உதவிசெய்தார். அதில் கிடைத்த நிறைவு அருணாவைத் தொடர்ந்து அது சார்ந்தே இயங்க வைத்தது.
மாற்றுத்திறனாளிகள், பழங்குடியின மக்களுக்கு உதவுவதற்காக அவர்களோடு நெருங்கிப் பழகியபோதுதான் நம்மைச் சுற்றி ஏராளமானோர் பல்வேறு பிரச்சினைகளால் அல்லல்படுவது அருணாவுக்குப் புரிந்தது. தன் வேலை நேரம் போக மற்ற நேரத்தைச் சேவை செய்வதற்காக ஒதுக்கிக்கொண்டார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவைப்படும் உதவியைக் கேட்டறிந்து கொடையாளிகள் அல்லது வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவற்றைச் செய்துகொடுக்கிறார். பழங்குடியின மக்களுக்கு வீட்டுக்கூரை அமைத்துத் தருவது, கல்வி உதவி, மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்றவற்றையும் செய்துதருகிறார். தண்டுவடப் பாதிப்புக்கு ஆளானோருக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்களை நடத்துவதிலும் அவர்களை வெளியே அழைத்துச் செல்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.
“முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோரில் பலரும் சக்கர நாற்காலியிலேயே முடங்கிவிடுவர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென்றால்கூடப் பிறரது உதவி தேவை. அவர்களுக்கும் நம்மைப் போலவே வாழும் உரிமை இருக்கிறதுதானே. அதனால், மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்துவரை அவர்களை உற்சாகப்படுத்துவதும் வெளியே அழைத்துச் செல்வதும்தான் என் முதல் வேலை. பார்வையற்ற குழந்தைகளைத் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறோம். தண்டுவடப் பாதிப்புக்கு ஆளானவர்கள் சிலரை அடுத்த வாரம் பொள்ளாச்சிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவிருக்கிறோம்” என்கிறார் அருணா.
நான்காண்டுகளாகச் சேவை செய்துவந்தபோதும் அதைத் தொண்டு நிறுவனமாகப் பதிவுசெய்யும் எண்ணம் அருணாவுக்கு இல்லை. பயிற்சி முகாம் ஒன்றை அரசுடன் இணைந்து நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டபோதுதான் நிறுவனத்தின் பதிவு எண்ணைக் கேட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 2022இல் உதயமானதுதான் ‘ஸ்வதர்மா ஃபவுண்டேஷன்’ (https://swadharmafoundation.org.in/.
“நானும் என் நண்பர் அபிஷேக்கும் சேர்ந்து இதைத் தொடங்கினோம். எங்களோடு தன்னார்வலர்கள் சிலரும் பணிபுரிகிறார்கள். கோவை கிருஷ்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் எங்களோடு இணைந்து தன்னார்வலராகப் பணியாற்றுகிறார்கள். தற்போது இந்துஸ்தான் கல்லூரியின் மாணவியரும் தன்னார்வலர்களாக இணைய இருக்கிறார்கள்” என்கிறார் அருணா. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் 700க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடும்பங்களுக்கும் உதவியிருப்பதாகச் சொல்கிறார்.
“பொதுவாக கூடலூர், கோத்தகிரி, குன்னூர் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு உதவுவோம். பாலமலை, ஆனைகட்டி பகுதிகளுக்குத் தேவையையொட்டிச் செல்வோம். செவித்திறன் குறைபாடு கொண்ட ஒரு சிறுமிக்குக் காது கேட்கும் கருவி பொருத்த ஆறு லட்சம் வரை செலவாகும் என்றார்கள். கிரௌடு ஃபண்டிங் மூலம் அந்தப் பணத்தைத் திரட்டிக்கொடுத்தோம். தற்போது அந்தச் சிறுமிக்குக் காது கேட்கிறது. அதேபோல் ஆறு வயது வரைக்கும் ஒரு சிறுவன் நடக்க முடியாமல் இருந்தார். எங்களது சோஷியல் மீடியா பக்கத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு உதவ முடியுமா என்றனர். வேறொரு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு இப்போது அவர் ‘வாக்கர்’ வைத்து நடக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். இலவசப் பயிற்சி, சிகிச்சை முகாம்கள் நடக்கிற இடங்களைத் தேவைப்படுவோருக்குத் தெரியப்படுத்துவோம். பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். உதவிக்காக நிறைய கோரிக்கைகள் வருவதால் கார்ப்பரேட் நிறுவனங்களையும் அணுகிவருகிறோம்” என்று சொல்லும் அருணா, இந்த வாழ்க்கையின் பயனே பிறருக்கு உதவத்தானே என்கிறார்!