தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடி ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்துப் பேசிய காணொளி வெளியானதைத் தொடர்ந்து அவரது பெண் வெறுப்புப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. மக்களவை உறுப்பினர் கனிமொழி, ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தக் காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இத்தகைய கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்குப் பலதரப்பிலும் கண்டனங்கள் வலுத்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிரான கருத்து களைப் பொதுவெளியில் பேசுவது இது முதல் முறையல்ல. 2022இல் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, நிகழ்ச்சியொன்றில் மேடையில் இருந்தபடி ஊராட்சி மன்றப் பெண் தலைவரைப் பார்த்து அவரது சாதி என்ன எனக் கேட்டார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண், ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். அவரது இந்த அணுகுமுறையைப் பலரும் கண்டித்திருந்தனர். அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தங்கள் பகுதியில் உள்ள குறைகளைச் சொன்ன பெண்ணைப் பார்த்து, “நீ வாயை மூடு” என்றார்.
பின்னர், தமிழக அரசின் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துத் திட்டத்தைப் பற்றி கூட்டமொன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான விடியல் பயணத்தை, ‘ஓசி பயணம்’ எனக் குறிப்பிட்டார். தற்போது மீண்டும் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார். அமைச்சர் பொறுப்பை வகிக்கும் ஒருவர் பொதுவெளியில் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுகூடவா அமைச்சருக்குத் தெரியாது. செய்தி ஊடகங்களும் காட்சி - சமூக ஊடகங்களும் பெருகிவிட்ட இந்நாளில் தங்களின் செயல்பாட்டை லட்சக்கணக்கானோர் பார்ப்பார்கள் எனத் தெரிந்தும் அமைச்சர் ஒருவர் இப்படித் தொடர்ந்து பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிவருவதைப் பலரும் விமர்சித்துவருகிறார்கள்.