பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழியில்தான் பயின்றேன். பள்ளிப் பருவத்தில் உண்டான மொழி மீதான ஆர்வம் பல எதிர்ப்புகளையும் இன்னல்களையும் கடந்து கல்லூரியில் இளங்கலைத் தமிழில் சேர வழிவகுத்தது. இதற்குக் காரணம் பாடத்திட்டங்களின் வழி என்னுள் நுழைந்த வாசிப்பும் மொழியின் ஈர்ப்பும்தான். தமிழின் பெருமையைப் பேசுவதாலோ கேட்பதாலோ மட்டுமே அறிந்துகொள்ள இயலாது என்பதை நான் படித்த நூல்கள் எனக்கு உணர்த்தின. நாள்தோறும் வாசிக்க, வாசிக்க ஒரு புதிய அனுபவத்தையும் வாசகர் தன் நிலையை ஆராய்ந்து பார்க்கும் முயற்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை என் வாசிப்பு அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்.
தன்னைச் சுற்றிச் சமூகம் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திய படைப்பு இமையம் எழுதிய ‘பெத்தவன்’ என்னும் குறுநாவல். இந்நாவல் சாதி என்னும் மனநிலை சமூகத்தில் எவ்வாறு பிரிவை ஏற்படுத்துகிறது என்பதை எனக்கு உணர்த்தியது. தந்தைக்குத் தன் மகள் காதலிக்கிறாள், அதுவும் வேற்றுச் சாதியைச் சேர்ந்தவனைக் காதலிக்கிறாள் என்பது குற்றமாகத் தோன்றவில்லை. தந்தையும் குடும்பமும் கவலைப்படுவதெல்லாம் தன் ஊராரும் சாதியினரும் தன்னை எவ்வாறெல்லாம் இகழ்வார்கள் என்பதைப் பற்றித்தான். இந்தப் பகுதியை இமையம் மிகக் கூர்மையாக எழுதியிருந்தார். அடுத்து என்ன நிகழும் என்னும் பரபரப்புடன் நான் அதை வாசித்தேன். சாதி எவ்வாறெல்லாம் மனிதனை ஆளும் என்பதை இந்நாவல்தான் எனக்கு உணர்த்தியது. இந்நாவலின் தந்தை கதாபாத்திரம் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது. இன்றும் இத்தகைய அவலம்தான் பெரும்பான்மையான இடங்களில் காணப்படுகிறது என்பதை இதுபோன்ற படைப்புகள் வழியே நான் கண்டுகொண்டேன்.
இமையம் எழுதிய ‘செல்லாதப் பணம்’ என்னும் நாவலை அடுத்து வாசித்தேன். குடும்பத்தை எதிர்த்து நிகழும் காதல் திருமணத்தையும் அதனால் விளையும் இன்னல்களையும் இந்நாவல் சிறப்பாகப் பேசியிருந்தது. ஏன் சமூகம் இப்படி இருக்கிறது என்கிற கேள்விதான் இந்நாவலைப் படித்தவுடன் எனக்குள் உருவானது. அதுமட்டுமல்லாது, பணம் என்பது வெறும் காகிதம் மட்டும்தான்; அதனால் ஓர் உயிரைப் பிடித்து வைக்க இயலாது என்பதை இந்நாவல்வழி உணர்ந்து கொண்டேன்.
தொடர்ந்து புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கினேன். முதலில் அவரது நடை பிடிபடவில்லை. தொடர்ந்து படித்ததன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது வடமொழி கலந்த நெல்லைத் தமிழ் பிடிபடத் தொடங்கியது. சென்னைத் தமிழில் அவர் எழுதிய கதைகளும் எனக்குப் புதிதாக இருந்தன. ‘பொன்னகரம்’, ‘நியாயம்’, ‘பால்வண்ணம் பிள்ளை’ போன்ற அவரது சிறுகதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். அங்கத நடையால் இப்போது எனக்குப் பிடித்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் என்பேன்.
பொழுதுபோக்கினாலும் கட்டாயத்தினாலும் விளைந்த புத்தக வாசிப்பு இன்று என்னையும் சமூகத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது. என்னதான் சிறுகதைகளும் நாவல்களும் புனைவுத்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும் அவை சமூக யதார்த்தத்தை எடுத்துரைக்கின்றன. நவீன இலக்கிய வாசிப்பு, சமூகம் பற்றிய என் பார்வையை மாற்றியிருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
- பா. தீபிகா, அன்னம்பேடு, திருவள்ளூர்.