உயிர் மூச்சு

விழிப்புணர்வைப் பரவலாக்கும் காட்டுயிர் புத்தாக்க மையங்கள்

வெ. கிருபா நந்தினி

தமிழ்நாட்டின் அரிய உயிரினங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாதுகாக்கவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்லுயிர்ப் பாதுகாப்புக்காகத் தமிழ்நாட்டுப் பள்ளி, கல்லூரிகளில் புதுமை களுடன் கூடிய புத்தாக்க மையத்தை நிறுவுவதற்கான திட்டம் தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் (TANII) திட்டத்தின் கீழ் உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC) மூலம் முன்வைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் புத்தாக்க மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றன.

புத்தாக்க மையங்களுக்கான: முக்கியக் குறிக்கோள்களில் முதன்மையானது, ஒவ்வொரு மையமும் அந்தந்த மாவட்டங்களில் தனித்துவம்மிக்க, இன்றைய கவனத்துக்கு வராத, அழிந்துவரக்கூடிய உயிரினங்களைக் கருப்பொருளாகக் கொண்டு அவற்றின் முக்கியத்துவத்தையும், வாழ்விடச் சிக்கல்களையும் பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

சாம்பல் அணில்: அந்த வகை உயிரினங் களில் ஒன்று மேற்கு மலைத் தொடரின் கிழக்குச் சரிவில் மட்டும் வாழும் சாம்பல் நிற அணில். பழனி மலை, சின்னாறு வன உயிரின சரணாலயம், சிறுமலை -காவேரி வன உயிரின சரணாலயம் போன்ற பகுதிகளில் இது காணப்பட்டாலும் அதிக எண்ணிக்கையிலும், சிறப்பான வாழ்க்கை முறையுடனும் காணப்படும் இடமாக விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் காட்டுப்பகுதி உள்ளது.

இதன் காரணமாக இந்தப் புத்தாக்க மையம் திருவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் மதுரை கள இயக்குநர், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆகியோரின் வழிகாட்டுதலில் இத்திட்டம் நிறுவப்பட்டது.

சாம்பல் நிற அணிலைப் பாதுகாக்க வெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மட்டும் போதாது என்பதை உணர்ந்த வனத்துறை, சாம்பல் நிற அணில் வாழ்விடத்தின் ஊடே மையத்தை நிறுவ முன்வந்தது. மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்புடன் பயன்பாட்டில் இல்லாத செண்பகத்தோப்பு பழங்குடியினர் பள்ளி இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இங்கு அணில் பற்றிய தகவல்கள், சுவரொட்டிகள், உருவ அமைப்புகள் போன்றவை உருவாக்கப் பட்டன. உயிரினத்தின் முக்கியத்துவத்தைத் திரையிட்டு விளக்கப் பெரிய திரை அமைக்கப்பட்டு, அக்டோபர் 2024 முதல் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

நேரடிக் களப் பயிற்சி: இத்திட்டத்தின் பயன் மாவட்டத்தின் கடைக்கோடி பள்ளிக்கும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்துடன் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க கிரிட் அமைப்பு முறை பயன்படுத்தப்பட்டு, அனைத்துப் பகுதி பள்ளிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது மாணவர்கள், ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து 20 - 30 மாணவர்கள் அழைத்து வரப்பட்டு இவ்வகை அணில்களைக் காக்க வேண்டிய அவசியம் குறித்து உயிரியலாளர், தொழில் நுட்ப உதவியாளர் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து சிறார் செயல்பாட்டளர்கள் அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.

இது வகுப்பறைக் கல்வியாக மட்டு மல்லாமல், சாம்பல் நிற அணில் வாழ்விடக்காட்டுப் பகுதிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு நேரடியாகப் பார்த்து உணரும் வகையில், நடைப்பயணத்திற்கும் வனத்துறை ஏற்பாடு செய்கிறது. அணில் மட்டுமல்லாது காடு தொடர்பான மாணவர்களின் மற்ற கேள்விகளுக்கும் வனத்துறையினர் விளக்க மளிக்கின்றனர்.

சாம்பல் நிற அணில் வாழிடம், உண்ணும் உணவு, கூடு கட்டும் செயல்கள் என அனைத்தையும் மாணவர்கள் நேரடியாகக் கவனித்து அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு வருகின்றனர். இதன் மூலம் இயற்கை பற்றிய புரிதல் நிச்சயம் மேம்படும். தினசரி வாழ்க்கையிலும் இயற்கையைச் சீர்குலைக்காமல் வாழ முயல்வார்கள்.

தனித்துவ முயற்சிகள்:

* இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சாம்பல் நிற அணில் பற்றிய தகவல் தொகுப்பு அணில் வடிவ நூலாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
* ஓரிகாமி என்கிற காகித மடிப்புக் கலை பொம்மைகள் செய்முறை விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அணில் வடிவக் காகித மடிப்புக்கலை, சாம்பல் நிற அணில் புத்தாக்க மையம் பற்றித் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள், STEM பயிற்றுநர்கள், சேலம் – DIET மாணவர்கள் போன்றோருக்கும் இணையவழியில் கற்றுத் தரப்பட்டுள்ளது.
* மதுரை முதல் செங்கோட்டை வரை செல்லும் அரசுப் பேருந்தில் சாம்பல் நிற அணில் படம் வரையப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு அனைத்து விதமான மக்களுக்கும் கொண்டு செல்லப் படுகிறது. சாம்பல் நிற அணில் பற்றிய கலந்துரையாடலைப் பொது இடங்களில் ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் பற்றிக் குழந்தைகளிடையே பேசுவதும் இதன் மூலம் அதிகரிக்கும்.
* வன அலுவலகச் சுவர்களில் சுவரோவிய முறையில் வரையப்பட்டு, அப்பகுதி மக்களுக்குச் சாம்பல் நிற அணிலுடன் ஒன்றி வாழ்வது குறித்துப் புரியவைக்கப்பட்டுள்ளது.

புதிய மையங்கள்: விருதுநாகர் மாவட்டத்தின் 10 தாலுகாக்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் செண்பகத்தோப்பு புத்தாக்க மையத்திற்கு வந்துசென்றுள்ளனர். பெரும்பாலானோர் முதன்முறையாக நகரத்தைக் கடந்து பயணம் செய்துள்ளதாகவும், முதன்முறையாகக் காட்டை, மலையைப் பார்ப்பதாகவும், முதன்முறையாகச் சாம்பல் நிற அணிலைப் பார்ப்பதாகவும் கூறினர்.

இந்த மையம் தொடங்கப்பட்ட காலத்தில் இந்த ஊரின் சிறப்பு என்ன என்கிற கேள்விக்கு பால்கோவா என்கிற பதிலே வரும். தற்போது இந்த ஊரின் சிறப்பு சாம்பல் நிற அணில் என்று சொல்லும் அளவிற்குச் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 140க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

மீதமுள்ள பள்ளிகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க ஆவலாக வேண்டுகோள் விடுத்துள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் இதைக் கொண்டுசேர்க்கவும், சாம்பல் நிற அணில், அதன் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைகளுக்கு மேற்கு மலைத் தொடரைப் பாதுகாக்கவும் இத்திட்டம் மேம்பட்ட வகையில் தொடரப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் மேலும் ஆறு புத்தாக்க மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக் குரியது. இயற்கை சார்ந்த கல்வியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்று எதிர்காலத் தலைமுறைகளை இயற்கையுடன் இணைந்து வாழவைக்க இந்த மையங்களின் நிரந்தரச் செயல்பாடு அவசியம். எண்ணற்ற சூழல் பாதுகாவலர்களை இவை உருவாக்கும்.

- கட்டுரையாளர், பறவை ஆராய்ச்சியாளர், சுற்றுச்சூழல் கல்வியாளர்; knlifescience01@gmail.com

SCROLL FOR NEXT