இந்து டாக்கீஸ்

கலையைப் பின்தள்ளும் இச்சை | திரைசொல்லி 23

விஸ்வாமித்திரன் சிவகுமார்

அற்புதமான திரைக் காவியமான ‘சலங்கை ஒலி’ படத்தில் காட்சி யொன்று வரும். பாலு (கமல் ஹாசன்) ஒரு திறமை வாய்ந்த குச்சுப்புடி நடனக் கலைஞன். ‘வான் போலே வண்ணம்கொண்டு வந்தாய் கோபாலனே’ என்கிற பாடலின்வழி ஒரு திரைப்படத்தில் நடிக்க அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அப்பாடலைப் படம்பிடிக்கும் கோமாளித் தனமான இயக்குநர் ஒருவர், பாடலின் இதமான இசையொலிக்குச் சற்றும் தொடர்பில்லாத மலினமான நடன அசைவுகளை ஆடச்சொல்வார். பாலு விருப்ப மில்லாமல் ஆடிவிட்டு கண்கள் கசிய விசனத்தோடு நிற்பான். இப்பாடல் காட்சியை ஒரு திரைப்படமாக விரித்து எடுத்தோமெனில், அது கடந்த ஆண்டு மொராக்கோ நாட்டிலிருந்து வெளியான ‘அனைவரும் தூதாவை நேசிக்கிறார்கள்’ (Everybody Loves Touda) என்கிற படம்போல் உருவெடுக்கும்.

படத்தின் இயக்குநர் நபில் அயூச் 90களுக்குப் பின்னான மொராக்கன் சினிமாவுக்குப் புத்துயிர் ஊட்டியவர்களுள் ஒருவர். அவரது படங்கள் கதையம்சத்திலும் அதைச் சித்திரிக்கும் கலைநுட்பத்திலும் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டி ருப்பவை. அவற்றின் தொடர்ச்சியாக இந்தப் படமும் ஒரு முழுமைபெற்ற படைப்பு. படத்தின் நாயகியான தூதா ஒரு மேடைப் பாடகி.

மொராக்கோவினது ‘அய்டா’ (Aita) என்னும் மரபார்ந்த இசையின்மீது தீவிரக் காதல் கொண்டவள். ‘அய்டா’ பாடும் புகழ்பெற்ற இசை விற்பன்னர்களுக்கு அளிக்கப்படும் ‘ஷேக்கா’ (Sheika) என்கிற உயர்மதிப்பைப் பெற்றுவிடவேண்டும் என்கிற கனவைத் தன் உயிர்த்துடிப்பாகச் சுமந்திருப்பவள். ஆனால் உள்ளூரில் அவளது பாடலைக் கேட்கக் கூடுபவர்கள், அவளது குரலை ரசித்தாலும் உடலைப் பாலியல் நோக்கத்தோடு பார்வையால் ஊடுருவுகிறார்கள்.

அனைத்து இடர்ப்பாடுகளையும் சகித்தபடி, அன்பு, இழப்புணர்வு, சுதந்திரம் குறித்தான பாடல்களை மதுவிடுதி மேடை களில் பாடுகிறாள் தூதா. இந்தியாவின் பாரம்பரிய இசை வடிவமான கஸலின் மென்மைக் கூறுகளை ஒத்தது ‘அய்டா’. கணவனை இழந்த அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனால் கேட்கவோ பேசவோ இயலாது.

சைகை மட்டுமே அவர்களது தொடர்புமொழி. தூதாவுக்கும் அவளுடைய மகனுக்கும் இடையிலான பிணைப்புணர்வு ஆத்மார்த்தமாக வடிக்கப்பட்டக் காட்சிகளால் புனையப்பட்டுள்ளது. பார்வையாளரான நாம், நமது அன்னையிடம் கண்டடைந்த பல ஆதுரத் தருணங்களை நினைவூட்டுவன.

படத்தின் இயக்குநரான நபில் அயூச்சின் துணைவியும் மொராக்கோ சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநருமான மரியம் துசானி இப்படத்தில் இணைத் திரைக்கதையாளராகப் பங்களிப்பு செய்திருப்பது இத்தகைய கவித்துவ மான காட்சிகளுக்கு வித்திட்டிருக்கும் எனத் தோன்றுகிறது.

தான் வசிக்கும் சிறுநகரத்தில் தனது இசைக் கனவுக்கு எதிர்காலமில்லை என்றும் மாற்றுத் திறனாளி யான தன்னுடைய மகனின் கல்வித் தேவை யைப் பூர்த்தி செய்யமுடியாது என்றும் உணரும் தூதா, பெருநகரம் நோக்கி இடம்பெயர்கிறாள். அங்கிருக்கும் பெரிய மது விடுதிகளிலும் தூதாவைப் பாலியல் இச்சையுடனே பார்க்கும் ஆண்கள், அவளது குரலை ரசிப்பதை ஒரு போலிப் போர்வையாக அணிந்துகொள்கின்றனர்.

ஒரு தருணத் தில், ‘நான் வேசியல்ல, பாடகி’ என்றுகூடக் கூடியிருப்போர் மத்தியில் மனக்கிலேசத்துடன் அலறுகிறாள். பெண் என்பவள் அனைத்துத் தனித்துவங்களையும் கடந்து பாலியல் இச்சையைத் தீர்க்கும் உயிரியாகப் பார்க்கப்படுவது, நமது நாட்டுக்கு மட்டும் உரித் தானதல்ல என்பதை இக் காட்சியோட்டத்தின் போது நாம் செவியறை பெறுவது போல் உணர்கிறோம்.

ஆயினும் ஓர் அற்புதமான முதிய மனிதரும் படத்தில் வருகிறார். அவர் ஒரு வயலின் இசைக் கலைஞர். தூதா பாடும் மது விடுதியின் வாசலில் அமர்ந்து வயலின் வாசிக்கும் கலைஞர். அவள் ‘அய்டா’ இசையைப் பாடும் ஆற்றலில் ‘ஷேக்கா’ அந்தஸ்தைப் பெறுவதற்கான தகுதி இருப்பதை உணர்ந்து அவளை ஊக்கப்படுத்துகிறார். அவர் இசைக்க, தூதா பாட என அவ்வீதியில் ஒலிக்கும் பாரம்பரியச் சங்கீதம், நம்மை மெய்மறக்கச் வைத்துவிடுகிறது. இந்தப் படம் ஆஸ்கர் விருதைத் தவறவிட்டாலும் போட்டியில் பங்கேற்றதற்கான தகுதியைப் பெற்றதற்குக் கட்டியமாக இந்தப் பாடல் காட்சியே அமைந்திருக்கவேண்டும்.

‘அய்டா’ இசையைப் பாட அனுமதிக்கும் உயர்தர நட்சத்திர விடுதியொன்றில் செல்வந்தர்களுக்கு மத்தியில் பாடும் அரிய வாய்ப்பை அவளுக்குப் பெற்றுத்தருகிறார் அந்த இசைக்கலைஞர். தூதாவின் பொருளாதாரப் பிரச்சினையுடன், அவளது இசை யேக்கத்தையும் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு அது. பெரும் எதிர்பார்ப்புடன் மேலுந்து (Lift) வழியாகப் பல மாடிகளைக் கடந்து அவ்விடுதியின் உச்சிக்குச் செல்கி றாள். அந்த மேல் நகர்வு அவள் வசதிமிக்க வாழ்வை நோக்கி உயர்ந்து செல்கிறாள் என்பதைக் குறியீடாகச் செய்கிறது.

கவித்துவமும் இசைச்செறிவும் கொண்ட ‘அய்டா’ பாடலொன்றைப் பெரும் செல்வந்தர்கள் மத்தியில் பாடத் தொடங்குகிறாள். ‘அய்டா’ இசையை ஐனரஞ்சக இசையைப்போல் வெற்று களிப்புப் பொருளாக அவர்கள் செவியுறுவதைச் சில நிமிடங் களிலேயே உணர்ந்து விடுகிறாள். தனது உடல் மீதும், ‘அய்டா’ இசை மீதும் அவர்கள் ஈர்ப்புகொள்வதில் வெளிப்படும் பாசாங்கு மிகுந்த நுகர்வை எண்ணி அவசமுறுகிறாள்.

பாடுவதை நிறுத்திவிட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியேறி, கீழே இறங்குகிறாள்.vவளது பின்புறமாகக் கண்ணாடியில் மின்னும் கட்டிடங்களின் உயரமும் கீழிறங்குகிறது. தரைக்கு வந்துசேரும்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகி றாள் தூதா. தனது மரபார்ந்த இசைக் கனவு தன்னைச் சூழ்ந்த அடிநிலை வாழ்வோடு மட்டுமே யதார்த்தப்படக் கூடியது என்கிற தெளிவுக்கு வந்து அவள் புத்துணர்வு பெறுவதாக நமக்குச் சுட்டியபடி படம் நிறை வடைகிறது.

பாரம்பரியக் கலை என்பது வெறும் களிப்புப் பண்டமல்ல, காலகாலமாக நமது கலாச்சாரத்தின் உறவார்ந்த வேர்களை உறுதிப்படுத்திக்கொண்டே ஆழமாக வேர்கொண்டிருப்பது என்கிற செய்தியை நமது எண்ணத்துள் பதியமிடுகிறது படம். தூதாவாகத் தோன்றும் நிஸ்ரின் எர்ராடி தனது ஈடுபாடு மிகுந்த நடிப்பால் ஒரு பாடகியாகவே நமது நம்பகத்தில் நிலைத்து விடுகிறார்.

கிறிஸ்டியன் ஆன்டர்சன்னும் ஃபிளமிங் நோர்ட்க்ரோக்கும் இணைந்து வடிவமைத்த அரபு இசையின் மரபார்ந்த, நவீன பரிமாணங்கள் படத்தின் மதிப்பை இருமடங்காக்கி விடுகின்றன. எத்தகைய கதையம்சத்தையும் தனது கூர்மையான காட்சியாடலால் காத்திரமயப்படுத்திவிடும் இயக்குநர் நபில் அயூச் இயக்கிய படங்களின் தொடர்ச்சியில் இப்படமும் ஒரு கலை மகுடம்.

- viswamithran@gmail.com

SCROLL FOR NEXT