இளமை புதுமை

வேலை வேறு, ஹாபி வேறு!

ராகா

சமூக வலைதள யுகத்தில் இளைய தலைமுறையினர் பலரும் ‘யூடியூபர்’ அவதாரம் எடுக்கத் தவறுவதில்லை. ஆளுக்கு ஒரு யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி, நிர்வகித்து வருகிறார்கள். இவர்கள் மத்தியில் தனது புதுமையான படைப்புகளால் பிரபலமாகி இருக்கிறார், ‘வடிவேலு த்ரோன்ஸ்’ யூடியூப் அலைவரிசையின் அட்மின்.

அதென்ன ‘வடிவேலு த்ரோன்ஸ்’? வைரலான, ஹிட்டான பிரபல தமிழ்ப் பாடல்களுக்கு ஆங்கிலத் திரைப்படங்கள், வெப்சீரிஸ் காட்சிகளைச் சேர்த்து உருவாக்கப்படும் காணொளிகள் ‘வடிவேலு த்ரோன்ஸ்’ யூடியூப் பக்கத்தில் நிறைந்து கிடக்கின்றன.

உதாரணத்துக்கு, ‘வேட்டையன்’ திரைப்படத்தின் பிரபலமான ‘தீம்’ மியூசிக்கையும் ‘தி காங்ஸ்டர் தி காப் தி டெவில்’ படத்தின் காட்சிகளையும் இணைத்து, காணொளியை உருவாக்கியுள்ளார். யூடியூபில் வெளியான இந்தக் காணொளி அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டுள்ளது. இப்படிக் கற்பனையாக உருவாக்கப்படும் இந்த யூடியூப் அலைவரிசை காணொளிகள் ‘வியூஸ்’களை அள்ளுகின்றன.

யூடியூப் அலைவரிசையை நிர்வகிப்பவரை ‘அட்மின்’ என்கிறார்கள். அப்படி இருக்க ‘வடிவேலு த்ரோன்ஸ்’ அலைவரிசையின் அட்மின் யார் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. ஏனென்றால், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவராகத் திரைக்குப் பின்னால் இருந்து மட்டும் அவர் இயங்கிவருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த இந்த 23 வயது இளைஞர், தன்னுடைய பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்கிற வேண்டுகோளை முன்வைத்துவிட்டுதான், வித்தியாசமான இந்த யூடியூப் பெயரின் பின்னணிக் கதையைப் பகிர்ந்தார்.

“2019இல் ஒரு மீம் பக்கத்தை உருவாக்க நண்பர்கள் சேர்ந்து முடிவுசெய்தோம். பின்னர் வீடியோ மீம் பரவலானதையடுத்து அந்தப் பாணியைப் பின்பற்றத் தொடங்கினோம். காமெடிக்குப் பெயர்போன வடிவேலுவின் பெயரையும், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸிலிருந்து ‘த்ரோன்ஸ்’ என்கிற பெயரையும் சேர்த்து யூடியூப் அலைவரிசையைத் தொடங்கினோம்.

ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வொருவராக இதிலிருந்து கழன்றுவிட, கடைசியாக நான் மட்டும் இதை நிர்வகித்து வருகிறேன். இளங்கலைப் பட்டம் பெற்று, அடுத்துப் போட்டித் தேர்வுக்காக மும்முரமாகத் தயாராகி வருகிறேன். படிப்புக்கும் உழைப்புக்கும் இடையில் ஒரு ‘ஹாபி’யைப் போலக் காணொளிகளை உருவாக்கி வருகிறேன்” என்கிறார் அந்த இளைஞர்.

இது வேற, அது வேற சுமார் முப்பதாயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடரும் இந்த அலைவரிசையில் 300க்கும் அதிகமான காணொளிகள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு இசைத் துணுக்குகள், பாடல் காட்சிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காப்புரிமை பிரச்சினையை இவர் எப்படிக் கையாள்கிறார்? “யூடியூபைப் பொறுத்தவரை ‘காபிரைட் ஸ்ட்ரைக்’, ‘காபிரைட் கிளைம்’ என இரண்டு வகை உண்டு.

அதாவது, ‘ஸ்ட்ரைக்’கில் நீங்கள் பயன்படுத்திய ஆடியோ, காட்சிகளை நீக்க வேண்டும். ஆனால், ‘கிளைம்’ என்பதில் காப்புரிமைக்குச் சொந்தமான நபருக்கோ நிறுவனத்துக்கோ அதற்கான உரிய தொகையைச் செலுத்தலாம் அல்லது நீக்கலாம். இந்த யூடியூப் அலைவரிசையை லாப நோக்கத்துக்காக அல்லாமல் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்துவதால், இதிலிருந்து வருமானம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அதனால் பெரிதாகப் பிரச்சினை இல்லை'' என்று விளக்கினார் அவர்.

பொதுவாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஒருவர் எந்நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பதே வழக்கம். இந்தப் பாணியில் தனக்கு நம்பிக்கை இல்லை எனச் சொல்கிறார் இந்த இளைஞர். “காலை முதல் இரவு வரை போட்டித் தேர்வுக்குத் தயாராவேன். ஆனால், பாடல்கள் கேட்பது, நடனம் ஆடுவது என ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில விஷயங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

நான் என் நேரத்தை ‘வீடியோ எடிட்டிங்’கிற்காக அர்ப்பணிக்கிறேன். அதன் மூலம் ‘கிரியேட்டிவ்’வாக என்னால் இயங்க முடிகிறது. முழு நேர வேலை வேறு, ‘ஹாபி’ வேறு என்பதில் தெளிவாக இருப்பதால் தேர்வை எதிர்கொள்வதிலும், இலக்கை எட்டுவதிலும் பிரச்சினை ஏதும் இருக்காது” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் அந்த இளைஞர்.

SCROLL FOR NEXT