கூடுதல் நன்மை பயக்கும் உரிமையாளர் (பிஓ) வெளிப்படுத்தல் விதிமுறை கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது, வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்பிஐ), இந்திய நிறுவன பங்குகளில் செய்துள்ள முதலீடு தொடர்பான விவரங்களை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.
1. ஒரு இந்திய கார்ப்பரேட் குழுமத்துக்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தில் (ஏயுஎம்) 50%க்கும் அதிகமாக முதலீடு வைத்திருக்கும் எப்பிஐ-களுக்கு இது பொருந்தும்; அல்லது
2. இந்திய பங்குச் சந்தைகளில் சொத்துகளை நிர்வகிக்கும் ஏயுஎம்-மில், தனித்தனியாக அல்லது தங்களின் முதலீட்டாளர் குழுவுடன் சேர்ந்து ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலும் இது பொருந்தும். பெரிய அளவிலான எப்பிஐ-கள் தங்கள் செயல்களால் குறிப்பாக பங்கேற்பு குறிப்பு ஆவணம் (பி-நோட்) வழியாக சந்தைகளின் ஒழுங்கான செயல்பாட்டை சீர்குலைக்கும் முயற்சியை தடுப்பதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
பி-நோட் வழி என்றால் என்ன? - வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செபி மற்றும் வருமான வரித் துறையில் எப்பிஐ-களாக பதிவு செய்யாமல் இந்திய பங்குகளில் முதலீடு செய்ய, ஆப்ஷோர் டெரிவேட்டிவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (ஓடிஐ) என்று அழைக்கப்படும் பி-நோட் அனுமதிக்கிறது. பொதுவாக இந்தியாவில் செயல்படும் பெரிய வெளிநாட்டு வங்கிகளால் பி-நோட் வழங்கப்படுகின்றன. அவை வாடிக்கையாளர்களின் சார்பாக பங்குகளை வாங்குகின்றன மற்றும் பத்திரங்களின் அடிப்படையில் ரசீதுகளை வழங்குகின்றன.
பி-நோட் மூலம் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம், முதலீடு பற்றிய தகவலை வெளிப்படையாக தெரிவிப்பதை தவிர்ப்பதாகும். ஒரு பெரிய எப்பிஐ ஒருபங்கை வாங்கும்போது, யார் வாங்குகிறார்கள் என்பதை சந்தை அறிந்து கொள்கிறது. மேலும், மற்ற முதலீட்டாளர்கள் உங்கள் பாதையைப் பின்பற்றுகிறார்கள். இதன் விளைவாக பங்கு விலை உயரும்.
முந்தைய ஒழுங்குமுறையின் தாக்கம்: பிஓ வெளிப்படுத்தல் விதிமுறைகளுக்கு இணங்காவிட்டால் எப்பிஐ-ன் பதிவை செல்லாததாக்கலாம், அத்துடன்:
1. மேற்கொண்டு பங்குகள் வாங்குவது தடுக்கப்படும்;
2. அதன் இருப்புகளை கலைக்கப்படும்;
3. இந்திய பங்குச் சந்தையில் இருந்து 180 நாட்களுக்குள் வெளியேற்றப்படுவார்கள். எனவே, இந்த விதிமுறைகள் பல முக்கிய பி-நோட் வழங்குநர்களை தங்கள் போர்ட்போலியோ மதிப்பைக் கட்டுப்படுத்த கட்டாயப்படுத்தியுள்ளன. மேலும், 2 முன்னணி ஐரோப்பிய வங்கிகள் மற்றும் ஒரு அமெரிக்க நிறுவன முதலீட்டு நிறுவனம் புதிய பி-நோட் வாடிக்கையாளர்களை சேர்ப்பதை நிறுத்தி உள்ளன. இதனால் ஆகஸ்ட் 2023 முதல் மொத்த எப்பிஐ சொத்துகளில் பி-நோட்களின் பங்கு 2.28% லிருந்து டிசம்பர் 2024 நிலவரப்படி 1.86% ஆக குறைந்தன.
புதிய விதிமுறைகள்: இப்போது ரூ.25 ஆயிரம் கோடியாக இருந்த உச்சவரம்பை ரூ.50,000 கோடியாக செபி உயர்த்தியுள்ளது. அதேநேரம், 50%-க்கும் அதிகமாக முதலீடு வைத்திருப்பது தொடர்பான விதியில் எந்த மாற்றமும் இல்லை.
தளர்வுக்கான காரணங்கள்
1. முந்தைய வரம்பு நமது சந்தையில் எப்பிஐ ஆர்வம் காட்டுவதை குறைக்க வழிவகுத்தது.
2. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எளிதாக வணிகம் செய்வதற்கான வாய்ப்பை செபி உருவாக்கி உள்ளது.
3. 2022-23 நிதியாண்டில் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது முதல் பங்குச் சந்தை வர்த்தக அளவு இரட்டிப்பாகி உள்ளன. எனவே, எந்தவொரு பெரிய அளவிலான எப்பிஐ-க்கும் இடையூறு ஏற்படுவதற்கான நிகழ்தகவு இப்போது அதற்கேற்ப குறைவாக உள்ளது.
வரம்பு அதிகரிப்பின் தாக்கம்: முன்னதாக, வரம்பை எட்டிய பல எப்பிஐ-களுக்கு மேலும் பி-நோட்களை வழங்க முடியவில்லை. இதன் விளைவாக வர்த்தக இழப்பு ஏற்பட்டது. வரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பதால் புதிய வாடிக்கையாளரை சேர்க்க வாய்ப்புள்ளது.
மேலும் நிறைய சிறிய எப்பிஐ-கள் வரக்கூடும். இது எப்பிஐ முதலீடுகளின் பல்வகைப்படுத்தலுக்கு வழிவகுக்கும் மற்றும் பெரிய முதலீட்டாளர்களை குறைவாக சார்ந்திருக்கும். இது அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளுக்கு உதவுவதன் மூலம் சந்தை பணப்புழக்கத்தை மேம்படுத்தும். கடந்த 6 மாதங்களாக பங்குச் சந்தையில் கடும் சரிவு காணப்பட்டாலும், ஏற்ற இறக்கக் குறியீடு (விஐஎக்ஸ்) குறைந்து வருகிறது.
அதாவது முதலீட்டாளர் மத்தியில் அச்சம் குறைந்து வருகிறது. இது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு ஆகும். மியூச்சுவல் பண்ட் எஸ்ஐபி மூலம் வரும் முதலீடு முக்கிய பங்கு வகித்து வருவதே இதற்கு முக்கிய காரணம். அதேநேரம், எப்பிஐ முதலீட்டில் இப்போதே பெரிய அதிகரிப்பு இருக்கும் என்று கூற முடியாது. எப்பிஐ முதலீடு அதிகரிக்க பல காரணிகள் சாதகமாக மாற வேண்டும். அது நிகழும்போது, இந்த வரம்பு அதிகரிப்புக்கு பலன் கிடைக்கும்.
உதாரணமாக, இந்திய பங்குச் சந்தை மதிப்பீடுகள் குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பரஸ்பர கட்டண நிலைமை தெளிவான பிறகு அது நிகழலாம். அல்லது 2025-26-ம் ஆண்டுக்கான நிறுவனங்களின் வருவாய் வழிகாட்டுதல் மேம்பட்ட போக்கைக் காட்டினால் எப்பிஐ முதலீடு அதிகரிக்கலாம்.
சுருக்கமாக கூற வேண்டுமானால், இந்த நடவடிக்கை பி-நோட் வழங்கலுக்கு புத்துயிர் அளிப்பதுடன் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் புதிய வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்த நடவடிக்கை சந்தையின் ஏற்ற இறக்கம் குறித்த அச்சத்தை அதிகரிக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, எப்பிஐ-களின் செயல்பாட்டை செபி உன்னிப்பாக கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
- sunilsubramaniam27@gmail.com