கல்லைப் பொன்னாக்கும் கனிந்த திருவுளம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 28

By நிரஞ்சன் பாரதி

ஒரு நல்ல குருநாதருக்கான அடையாளம் எது ?

ஒரு கல்லைக் கனியாக்கும் திறன்.

ஒரு சிறந்த குருநாதருக்கான இலக்கணம் யாது?

ஒரு கல்லைப் பொன்னாக்கும் அருள்.

இந்தத் திறனும் அருளும் ஒருங்கே பெற்ற பேராசான் நம்மாழ்வார்.

கல்லினும் கடும் நெஞ்சனான தன்னைக் கருணை கூர்ந்து கனி செய்ததோடு நில்லாமல் பொன்னாக்கிப் பொலிய வைத்தவர் என் குரு என மதுரகவியாழ்வாரின் உள்ளம் பூரித்துக்கொண்டே இருக்கிறது.

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்

புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

ஆறறிவால் அறிய முடியாத தன்மை தான் வேதங்களின் பெருமை. 'மிக்க' என்னும் சொல் அதைத் தான் உணர்த்துகிறது. இந்தச் சொல்லை 'வேதியர்' என்னும் சொல்லோடும் கூட்டிப் பொருள் கொள்ளலாம்.

இந்த சீவாத்மா பரமாத்மாவின் அடிமை போன்ற அடிப்படை வைணவ தத்துவங்களை மட்டும் புரிந்துகொண்டால் அது வேதத்தின் பொருளைப் புரிந்துகொள்வது. பகவானின் அடியவர்களாகிய பாகவதர்களுக்கும் நான் அடிமை என்பதை உணர்ந்துகொண்டால் அது வேதத்தின் உட்பொருளைப் புரிந்துகொள்வது. இந்த அடிமை நிலையை 'பாகவத சேஷத்வம்' என்று சொல்வது வைணவ சம்பிரதாயம். இங்கே உட்பொருள் என்றால் ஆழ்ந்த பொருள்.

ஆனால், அந்த வேதாந்தத்தின் விழுப்பொருளை ஆயிரம் இனிய தமிழ்ப் பாசுரங்களாகத் தொகுத்து, திருவாய்மொழி என்னும் பக்திப் பனுவலாகப் படைத்து நம்மாழ்வார் எனக்குப் போதித்தார் என்பதில் மதுரகவியாழ்வாருக்கு எல்லையற்ற பெருமிதம். ஆதலால் தான் நம்மாழ்வாரை அவர் 'என்' குரு என்று கொண்டாடுகிறார். 'தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு' என்ற வரி அதனால் தான் வந்து விழுகிறது.

இந்த வரிக்கு 'பெருமாளைப் பாடுவதற்கு உரித்தான மங்கல குணங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்றவர் நம்மாழ்வார்' என்பது ஒரு பொருள். 'தகவு, பெருமை, மதிப்பு, புகழ் ஆகிய அனைத்து நல்லியல்புகளும் ஒருங்கே பெற்றவர் நம்மாழ்வார் மட்டுமே' என்பது இன்னொரு பொருள்.

'உட்பொருள் நிற்கப் பாடி' என்பதை இன்னொரு விதமாகவும் சிந்திக்கலாம். நான்கு வேதங்களின் உட்பொருளாக இருப்பவன் நாராயணன். அவனைத் தன் அனுபவத்தால் உணர்ந்துகொண்ட பேரறிவன் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் அருளால் அந்த அனுபவம் மதுரகவியாழ்வாருக்கும் கிடைக்கிறது.

தானெழுதிய திருவாய்மொழி, காலத்தில் மட்டும் நிலைத்திருந்தால் போதும் என நம்மாழ்வார் நினைத்திருக்கலாம். ஆனால், மதுரகவியாழ்வாரின் மனத்திலும் அது நிலைபெற வேண்டும் என்பது தான் நம்மாழ்வாரின் திருவுளம். அந்தத் திருவுளத்துக்காகத் தான் அவர் காலடியே கதியெனக் கிடந்தார் மதுரகவியாழ்வார் என்னும் அரும்பெரும் சீடர்.

முந்தைய அத்தியாயம்: நாலிலிருந்து நாலாயிரத்துக்கு... | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 27

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்