அரசியல், சமூக விமர்சனத்துடன் இன்று வரை படங்களை இயக்கி வருவதால் ‘புரட்சி இயக்குநர்’ என்று அழைக்கப்படுகிறார் எஸ்.ஏ.சந்திர சேகரன். அவருடைய படங்களில் தொடர்ந்து நடித்த காரணத்தாலேயே ‘புரட்சிக்கலைஞர்’ எனக் கொண்டாடப்பட்டார் விஜயகாந்த். தெரிந்த வர்கள், தெரியாதவர்கள் என்கிற பாரபட்சம் இல்லா மல் உதவி எனக் கேட்டு வருகிற எவருக்கும் உதவக் கூடியவராக விஜயகாந்த் விளங்கினார். அவருடைய தம்பியாக விஜயை நடிக்க வைத்தால், விஜய் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துவிடுவார்; படமும் உறுதியாக வெற்றிபெறும் என்று ‘செந்தூரப் பாண்டி’ திரைக்கதையை எழுதி முடித்தார் எஸ்.ஏ.சி. அதன்பின் தனது கோரிக்கையை அவர் விஜயகாந்திடம் வைத்தபோது நடந்த நிகழ்வு களை இந்த வாரம் இங்கே பகிர்ந்திருக்கிறார்:
“தாராளமாகச் செலவழித்து 1992இல் ஒரு படம் பண்ண வேண்டும் என்றால் குறைந்தது 1 கோடி ரூபாய் வேண்டும். மகனை நல்லபடியாக அறிமுகப்படுத்த வேண்டுமே என்று 70 லட்சம் ரூபாய் செலவு செய்து ‘நாளைய தீர்ப்பு’ படத்தை எடுத்தேன். மொத்தப் பணமும் நஷ்டம். ஆடிப்போய்விட்டேன். அப்போது ஓர் எண்ணம் தோன்றியது. விஜயகாந்தை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து, விஜயை அதில் ஹீரோவாக்கினால், அவனுக்கு ரீச் கிடைக்கும் என்று நினைத்தேன். அப்போது நடந்த நிகழ்வு பற்றிக் கூறுவதற்கு முன்பு, நானறிந்த விஜயகாந்த் குறித்து ஒன்றை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் எப்படிப்பட்ட பரந்த மனதுடைய மனிதர் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே போதுமானது.
விஜயகாந்துக்கு நீண்ட காலம் கார் ஓட்டுநராக இருந்தவர் எஸ்.கே.சுப்பையா. அவர் என்னிடம் ‘அண்ணே.. நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா எனக்கு விஜி சார் ஒரு படம் நடித்துக் கொடுப் பார்’ என்று சொன்னார். முதலில் நீயே அவரிடம் போய் கேள் தம்பி’ என்றேன். அவரும் போய் விஜயகாந்திடம் கேட்க.. ‘சுப்பு.. உனக்கு ‘எங்க டைரக்டர்’ படம் பண் ணினா லாபம் கிடைக்கும்டா.. வேற டைரக்டர்ன்னா நான் உறுதி கொடுக்க முடியாது. நீ போய் எஸ்.ஏ.சி. சார்கிட்ட ஓகேவாண்ணு கேட்டு விட்டு வா’ என்று சொல்ல, உடனே என்னிடம் வந்து சொன்னார். நாங்கள் இருவரும் விஜயகாந்தைப் போய்ப் பார்த்தோம். அப்போது விஜயகாந்த், ‘நீங்க பைனான்ஸ் வாங்கி படம் பண்ணுங்க.. படம் வியாபாரம் ஆனதும் ஃபைனான்ஸை செட்டில் பண்ணிவிட்டு என்னிடம் வாங்க.. நான் என்ன செய்யணும்னு சொல்றேன்’ என்றார். அந்தப் படம்தான் விஜயகாந்த், சூர்யா, மீனா நடித்த ‘பெரியண்னா’. பெரிய வெற்றிப்படம்.
அந்தப் படம் தொடங்கியபோது விஜயகாந்த் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை. நானும் சம்பளம் எடுத்துக்கொள்ளவில்லை. படம் வெளியாகி மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்தது. வியாபார, வசூல் கணக்குகள், ஃபைனான்ஸ் செட்டில் மென்ட் எல்லாம் பார்த்து முடித்தோம். மீதமிருந்த லாபத்தில் 25 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டுபோய் விஜயகாந்திடம் கொடுத்தோம். ‘மீதி இருக்கும் லாபத்தை நாங்கள் இரண்டு பேரும் பிரித்துக்கொள்ளலாமா?’ என்று அவரிடம் கேட்டேன். அப்போது என்னிடம் விஜய காந்த்; ‘சுப்புகிட்ட பணமா கொடுக்காதீங்க.. பெரிய வீடா பார்த்து வாங்கிக் கொடுத்திருங்க. அவனோட ஷேர்ல வீடு வாங்கினதுபோக மீதமிருக்கிற பணத்தை சுப்புவோட இரண்டு பசங்க பேர்லயும் 10 வருசத்துக்கு பிக்சட் டெபாசிட் பண்ணிடுங்க’ என்றார். அவர் சொன்னபடியே 23 லட்சம் ரூபாயில் அவருக்கு வீடு வாங்கினோம்.
அந்தக் காலகட்டத்தில் 23 லட்சம் எவ்வளவு பெரிய தொகை! தன்னுடைய கார் டிரைவர், ஒரு தொழிலாளி நல்ல வசதியான வீட்டில் வசிக்க வேண்டும் என்று நினைத்த அந்த தயாள குணத்தை என்னவென்று சொல்வீர்கள்? அதுதான் விஜயகாந்த். அவரது மனதில் கருணை, அன்பு, மரியாதை என்பதைத் தாண்டி எதுவுமில்லை. அப்படிப்பட்டவர் எனக்கு மட்டும் உதவாமல் இருப்பாரா?
‘நாளைய தீர்ப்பு’ தோல்விக்குப் பிறகு அவருக்கு ஒரே ஒரு போன் கால்! ‘வீட்ல இருக்கீங்களா விஜய்?’ என்று கேட்டேன். ‘ஆமா சார்.. எப்படி இருக்கீங்க.. நாளைய தீர்ப்பு எப்படிப் போச்சு?’ என்றார். ‘அது தொடர்பாதான் உங்ககிட்ட பேசணும். இன்னும் ஒரு 5 நிமிடத்துல அங்க வந்துடுறேன்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டுக் கிளம்புவதற்காகக் குளிக்கப் போய்விட்டேன். அந்த 10 நிமிட இடைவெளியில் என் வீட்டுக்கு விரைந்து வந்த விஜயகாந்த், நான் எங்கே எனக் கேட்டு, நேரே எனது பெட் ரூமில் வந்து உட்கார்ந்துவிட்டார். நான் குளித்துவிட்டு துண்டை கட்டிக்கொண்டு வெளியே வருகிறேன். இவர் உட்கார்ந்திருக்கிறார். நான் அதிர்ச்சியாகி ‘என்ன விஜி? ‘ என்றேன். அவரோ ‘நீங்க ஏன் சார் வரணும்’ என்றார். இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய உச்சத்திலிருக்கும்போது, எவ்வளவு பெரிய பெருந்தன்மை இது! நான் ‘சட்டம் ஒரு இருட்டறை’யில் பார்த்த விஜய்காந்த் தான் அப்போதும் இருந்தார். எப்போதும் அவர், அவராகவே இருந்தார். அவர் ஓர் இயக்குநருக்குக் கொடுக்கும் மரியாதை எவ்வளவு பெரியது! நான் எனது கோரிக்கையைச் சொல்ல சற்று தயங்கியபோது, அவரே பேசினார்.
‘கேள்விப்பட்டேன்.. முதலீடு எல்லாம் போச்சுன்னு.. நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்க’ என்றார். ‘இல்ல விஜி.. இப்படி யொரு நடிகன் இருக்காண்ணு ‘பி அண்ட் சி’ ஆடியன்ஸுக்குத் தெரியணும்னா, அந்தப் படத்துல நீங்க ஒரு கெஸ்ட் ரோல் நடிச்சுக் கொடுக்கணும். 20 நாள் கால்ஷீட் இருந்தாப் போதும்’ என்றேன். ’எங்க வரணும்?’ என்றார். நான் ‘பொள்ளாச்சி’க்கு என்றேன். ‘ஓகே சார்..’ என்றார். நான் அடுத்து அவருடைய சம்பளத்தை முடிவுசெய்வதற்காக ‘என்ன கொடுக்கணும் விஜி?’ என்றேன். ‘சார்.. என்னை தப்பால்லாம் எதுவும் பண்ண வச்சிடாதீங்க. உங்களுக்கு நான் பண்றேன்.. அவ்வளவுதான்’ என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
பொள்ளாச்சியில் முழுப் படத்தையும் எடுத் தேன். விஜயகாந்தை வைத்து 20 நாள் திட்டமிட்ட காட்சிகளை 17 நாளில் முடித்துவிட்டேன். படத்தின் கிளைமாக்ஸில் நறுக்கென்று நான்கு வரிகளைத் திரையில் ஒளிரவிட்டேன். ‘செந்தூரப் பாண்டி தன் காதலுக்காக ஒருமுறை சிறைக்குச் சென்றான், தம்பியின் காதலுக்காக மறுமுறை சிறைக்குச் செல்கிறான். வாழ்க்கை முழுவதும் சிறையிலே.. அவன் வாழ்வதோ நம் மனதிலே!’ என்பதுதான் அந்த வாசகம். விஜய், ‘செந்தூரப் பாண்டி’யில் அவரது தம்பியாக மாறி மக்களை சென்றடைந்த கதை இதுதான்.
படம் மிகப்பெரிய ஹிட்! எனக்கு நல்ல லாபம். விஜயகாந்துக்கு உரிய சம்பளத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று அவரது அலுவலகத்துக்கு காசோலையுடன் போனேன். ‘சார்.. சார்.. என்னக் கேவலப்படுத்திடாதீங்க.. தயவு செய்து கிளம்புங்க..’ என்று, நான் அங்கே இருந்தால் பிடிவாதம் பிடிப்பேன் என்று என்னை அனுப்பிவிட்டார். ஆனால், நான் விடுவதாக இல்லை. விஜயகாந்த் வீட்டுக்கு அடுத்த மனையாக எனது காலி நிலம் இருந்தது. அதை பிரேமலதா விலைக்குக் கேட்டுக்கொண்டிருந்தார். விஜயகாந்தோ.. ‘அவங்க கேட்கிறாங்கன்னு நீங்க கொடுத்தி டாதீங்க’ என்று என்னிடம் சொன்னார். ஆனால், அதை இப்போது கொடுக்க காலம் அமைத்துகொடுத்த சந்தர்ப்பம் என நான் கருதி பிரேமலாதவிடம் ‘விஜிக்கு தெரியவே கூடாது, நீங்க பதிவாளர் அலுவலகத்துக்கு வந்துடுங்க’ என்று வரச்சொல்லி, அவரது பெயருக்கு அந்த நிலத்தைப் பதிவுசெய்து கொடுத்துவிட்டேன். காலை 11 மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் நடந்தது. 1 மணிக்கு இதைக் கேள்விப்பட்டு. விஜயகாந்த் கோபத்துடன் படப்பிடிப்பிலிருந்து என் வீட்டுக்கு வந்துவிட்டார். என்னிடம் முகம் கொடுக்காமல், நேரே எனது மனைவியிடம் போய்.. ‘மேடம் இவர் என்னைக் கேவலப்படுத்திவிட்டார்’ என்று கண்கள் சிவக்கக் கூறினார்.
(ப்ரியம் பெருகும்)
- எஸ்.ஏ.சந்திரசேகரன்
படங்கள் உதவி: ஞானம்