சேவாலயா முரளிதரன், தனக்கு ஆதர்ச புருஷர்களாக விளங்கும் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, பாரதியார் ஆகியோர் பகவத்கீதை குறித்து எழுதியவற்றையும் பேசியதையும் கேட்கும்போது, தன் உள்ளத்தில் அலை அலையாக எழுந்த எண்ணங்களை காணொலி வாயிலாகப் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அதன் தொகுப்பே `பாமரனின் பகவத்கீதை' என்னும் இந்நூல்.
சம்ஸ்கிருதத்தில் இருக்கும் பகவத்கீதையின் ஸ்லோகங்களின் மூலத்தைப் படித்து பல பண்டிதர்களும் அதற்கு விளக்கம் எழுதியுள்ளனர். `நான் பாமரன். என் உள்ளத்தில் பகவத்கீதை ஏற்படுத்திய தாக்கங்களைத்தான் பதிவு செய்திருக்கிறேன்' என்று தன்னடக்கத்துடன் நூலாசிரியர் குறிப்பிட்டிருந்தாலும், நூலின் பல இடங்களில் அறிவியல்பூர்வமான அவரின் அணுகுமுறையும் மேதைமையும் வெளிப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, `செயலிலே செயலின்மை' என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான விளக்கம், மூடநம்பிக்கையைப் பரப்பாத பகுத்தறிவுக்கு ஓர் உதாரணம்!
`வாழ்க்கைக்கான கையேடு', `செயலில் நேர்த்தி', `பணியில் கவனம்; பலனில் அல்ல!', `பாதங்கள் நடக்கப் பாதை விரியும்...' என்பது போன்ற யதார்த்தமான 115 தலைப்புகளில் வெகுஜன ரசனையோடு பாமரர்களுக்கும் புரியும் வகையில் தத்துவ விசாரங்கள் மிகவும் எளிமையோடு நடைமுறை வாழ்க்கைப்பாடுகளிலிருந்தே உதாரணங்களைச் சொல்லி விளக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.
பகவத்கீதையின் சாரமாக `கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' உள்ளிட்ட பலவற்றையும் நாம் கேட்டிருப்போம். ஆனால், ஆழ்ந்த பக்தி நெறியின் வழியாக `அனைத்தையும் துறந்துவிட்டு என்னை மட்டுமே சரணடை' என்னும் சரணாகதி தத்துவம்தான் பகவத்கீதையின் சாரம் என்பதை, `பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்' என்னும் பாரதியின் கருத்தை அடியொட்டி, படிப்பவர்களை உள்ளொளிப் பயணத்தின் வழியாக ஆன்ம தரிசனத்துக்கு அழைத்துச் செல்கிறது இந்நூல்! - வா.ரவிக்குமார்
பாமரனின் பகவத்கீதை; சேவாலயா முரளிதரன்; ரூ.600; வானதி பதிப்பகம், சென்னை. தொலைபேசி: 044- 24342810.
ஆலய தரிசன வழிகாட்டி: தமிழகத்தில் கொங்கு நாடு என்று அழைக்கப்படும் பகுதிகளை மையமாக வைத்து 2 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ள நூல், சிறந்த வழிகாட்டி புத்தகமாக அமைந்துள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கும்போது கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகியவற்றில் உள்ள 712 தலங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. பக்தர்கள் ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில், பழமையான தலங்களை தரிசிக்க விரிவான வழிகாட்டியின் அவசியத்தை கருத்தில் கொண்டு, எழுத்தாளர்கள், அடியார்கள், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் உதவியுடன் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர் கே.சாய் குமார்.
சிவபெருமான், திருமால், அம்மன், முருகப் பெருமான், விநாயகப் பெருமான் என அனைத்து தெய்வங்களையும் தரிசிக்க ஏதுவாக இந்நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தல வரலாறு, கல்வெட்டு செய்திகள், மன்னர்களின் திருப்பணிகள், கோயிலின் சிறப்பு அம்சங்கள், அரிய தகவல்கள், விரிவான வரைபடங்களோடு கோயில் குறித்த செய்திகள் உள்ளன. கூடுமானவரை பல தலங்களுக்கு தொலைபேசி எண்களின் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. - கே.சுந்தரராமன்
கோடி நலன்கள் தரும் கொங்கு தலங்கள் (தொகுதி 1, 2); கே.சாய் குமார்; ஜெயநகர், அரும்பாக்கம் சென்னை; ரூ.350, ரூ.320; தொடர்புக்கு: 9382872358, 8610047416.
நமஸ்கார அஞ்சலி: காஞ்சி மகாஸ்வாமியின் தெய்வத்தின் குரல்தொகுப்பாசிரியர் பூஜ்ய ரா.கணபதி அண்ணா பற்றிய சில நினைவுக் குறிப்புகளாக, ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ என்ற தலைப்பில் தனது அனுபவங்களை விவரித்துள்ளார் ஆசிரியர் வேதா டி.ஸ்ரீதர். ரா.கணபதியின் வாழ்க்கை சுருக்கத்துடன் நூல் தொடங்குகிறது. பின்னர் ரா.கணபதியுடனான தனது அறிமுகம், ஆரம்ப கால சந்திப்புகள், அவருடனான நெருக்கம் குறித்து ஆசிரியர் பதிவிடுகிறார்.
கணபதி அண்ணா கூறிய 3 சம்பவங்கள், தீராத விளையாட்டு சாயி – நூல் வெளியீடு தொடர்பான செய்திகள், அவரது நூல்கள், அவரது எழுத்து நடை, மொழி நடை, எம்.எஸ், ராஜாஜி தொடர்பாக அவர் கூறிய அனுபவங்கள், தெய்வத்தின் குரல் தொடர்பாக அவரது கருத்துகள், பெண்மை என்பதை காப்பாற்ற வேண்டும், அரசும் மதமும் போன்ற அத்தியாயங்கள் குறித்த உரையாடல்கள் என்று தனது அனுபவ முத்துகளை மாலை போல தொகுத்து விளக்கியுள்ளார் ஆசிரியர். நிறைவில் ‘கணபதி அண்ணாவின் பிறப்பு மங்களாரம்பம், மறைவு மங்களாரத்தி’ என்று அவரை கொண்டாடி அஞ்சலி செலுத்துகிறார்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி; வேதா டி. ஸ்ரீதரன்; வேத ப்ரகாசனம், 64, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை-11; அலைபேசி: 7305527466, 7550113406, 9940552516; ரூ.100.
கல்பாத்தி தியாகய்யரின் திவ்ய சரித்திரம்: பாலக்காடு ராம பாகவதர் இளம் வயது முதலே பாரத புழா நதிக்கரையில் அமர்ந்து தன்னுடைய மூத்த சகோதரர் வெங்கடகிருஷ்ண பாகவதருடன் சேர்ந்து இசை கற்கத் தொடங்கினார். கதகளி பதங்கள் மட்டுமின்றி பாரம்பரிய கர்னாடக இசையின் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந் தார். வடக்கஞ்சேரி ராம பாகவதர் சகோதரர் சுப்பராம பாகவதர், தொண்டிகுளம் அனந்தராம பாகவதர், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்
ஆகியோரிடம் இசை பயின்று, இசை வல்லுந ராகத் திகழ்ந்தார்.
தன் தாத்தாவின் வாழ்க்கை வரலாறு, அவரது இசை துறை சாதனைகள், அவரது படைப்புகளை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ‘Kalpathy Tyagabrahmam – Phalghat Rama Bhagavathar (Life Sketch of a Nadopasaka)’ என்ற நூலை வெளியிட்டுள்ளார் பேரன் ஸ்ரீராம் ஹரி. சிவபிரியா கிருஷ்ணனின் எழுத்தாக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆங்கில நூல் ராமபாகவதரின் சிறு வயது சம்பவங்கள், இசைப் பயிற்சிகள், இசை குருநாதர்கள், கல்பாத்தி ஆராதனை அனுபவங்கள், இசைக் கச்சேரிகள், பக்கவாத்திய கலைஞர்கள் உள்ளிட்டவற்றை சாரங்கின் ஓவியங்களுடன் விளக்குகிறது.
கல்பாத்தி தியாகபிரம்மம் – பாலக்காடு ராம பாகவதர்; சிவபிரியா கிருஷ்ணன்; ராமபாகவதர் சாரிடபிள் டிரஸ்ட்; kamalco@gmail.com; விலை: ரூ.250; தொடர்புக்கு: 9499022560, 9840773410.